23

23

இரண்டாவதுநாளாகவும் நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று !

நாட்டில் மேலும் 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய இன்றைய தினம் 4,353 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,353 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 344,381 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

“விரைவில் வெளியேறுங்கள்; இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் நேரிடும்.” – அமெரிக்கா – பிரிட்டன் படைகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை !

விரைவில் வெளியேறுங்கள்; இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் நேரிடும் என அமெரிக்கா, பிரித்தானியா படைகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனையடுத்து அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தத்தம் நாட்டவரை மீட்கும் பணியில் அமெரிக்கா, பிரித்தானியா , இந்தியா எனப் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

காபூல் விமானநிலையம் அமெரிக்கா, பிரித்தானியா , ஜெர்மனி என மேற்கத்திய நாடுகளின் படைகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், விரைவில் அவர்கள் தங்கள் நாட்டவரை வெளியேற்றிவிட்டு நாட்டைவிட்டு முழுமையாக வெளியேறுமாறு தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில், அமெரிக்க,பிரித்தானியா  படையினர் மீட்புப் பணிகள் பெயரில் இன்னும் கொஞ்சம் நாள் ஆப்கனில் இருக்க எடுக்கும் முயற்சியை நாங்கள் நீட்டிக்கப்படும் ஆக்கிரமிப்பாகவே கருதுகிறோம். சொன்னபடி திரும்பவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

இன்று காலை திடீரென விமான நிலையத்தின் வடக்கு வாசல் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் காபூல் விமான நிலையத்தில் கூடுதல் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அமெரிக்க மற்றும் ஜெர்மனி வீரர்கள் கூட்டாக இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தகவலை ஜெர்மனி ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்தே தலிபான்கள் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த வழக்கு – 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டார் ரிஷாட் பதியுதீன் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட  ஹிஷாலினி உவழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டுக்கும்பலின் அட்காசம் – வாள்வெட்டில் 24 வயது இளைஞன் பரிதாபமாக மரணம் !

வன்முறைக் கும்பலின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குருநகரைச் சேர்ந்த ஜெரன் (வயது -24) என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக நேற்று மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வேறு இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நால்வர் வழிமறித்து சரமாரியான வாள்களால் வெட்டியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“சீன நிறுவனங்கள் மலையக பெருந்தோட்டங்களை குறி வைக்கின்றன” – எம்.ஏ.சுமந்திரன்

மலையகப் பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இணையவழி ஊடாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிணக்கு குறித்த அவரது சட்ட ஆலோசனை என்ன என்பது குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கூட்டு ஒப்பந்தம் நிராகரிக்கப்படுகின்ற விடயங்களின்போது சட்ட உதவிகளைச் செய்திருக்கின்றேன். தற்போது ஆயிரம் ரூபா விவகாரத்தை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து இன்னமும் பிரச்சினை இருக்கின்றது.

சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் அதனை இன்னும் விரிவாக அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதுள்ள நிறுவனங்களை நட்டமடையச் செய்து, நிறுவனங்களைக் கொண்டு நடத்த முடியாத சூழ்நிலைக்குத்  தள்ளிவிட்டு, வெளிநாட்டு நிறுவனங்களைக் குறிப்பாக சீன நாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சூழ்ச்சி நடப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இதில் எந்தளவு உண்மை இருக்கின்றது என்பது தெரியவில்லை. ஆகவே, சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாகப் பார்க்காமல் சற்று விரிவாக அணுக வேண்டும்” என்றார்.

பிலிப்பைன்சில் அதிகரிக்கும் கொரோனாத்தொற்று – வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள தேவாலயம் !

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கியூசன் நகர பொது வைத்தியசாலையிலுள்ள தேவாலயத்திலும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1,857,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31,961 பேர் உயிரிழந்துள்ளாார்கள். இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பிலிப்பைன்ஸ் அனுமதி அளித்துள்ளது.

ஆசியாவில் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு முதல் முதலில் அனுமதி அளித்த நாடாக பிலிப்பைன்ஸ் விளங்குகிறது. பிலிப்பைன்ஸில் ஸ்புட்னிக் லைட் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பதாவது கொரோனா தடுப்பூசி ஆகும்.

ஏற்கனவே பைசர், மொடர்னா, ஜோன்சன் மற்றும் சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தடுப்பூசி அறிமுகம் முக்கியம் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோய்க்கு முன்னர் பிலிப்பைன்ஸ் ஆசியாவில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக இருந்தது, ஆனால் 2020 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9.6% ஆக பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வாள்வெட்டு – அறிவித்து ஒரு மணித்தியாலமாகியும் சம்பவ இடத்துக்கு வராத பொலிஸார் !

யாழ்ப்பாணம்- குருநகர் கடற்கரை வீதியிலுள்ள திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தி்யசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குருநகர் கடற்கரை வீதியின் ஊடாக ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த வேளையில், அவர்களை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் துரத்தி வந்த நால்வர், வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் , அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு படுகாயமடைந்த மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக குருநகர் பொலிஸ் காவலரணுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டப்போதும், சுமார் ஒரு மணிநேரமாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை எனவும் கூறப்படுகின்றது.

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, பொலிஸாரும் முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தலிபான்கள் உட்பட உங்களையும் சேர்த்து நான் யாரையும் நம்பமாட்டேன்.” – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அவர் அறிவித்த சில நாட்களிலேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது காபூல் விமான நிலையத்தில் மட்டும் மக்களை வெளியேற்றுவதற்காக அமெரிக்க ராணுவம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் அமெரிக்காவால் செய்து கொடுக்கப்பட்டும், தலிபான்கள் உடனடியாக அதிகாரத்தை பிடித்தது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
ஆனால், அமெரிக்க ராணுவத்தை திரும்பப்பெறும் முடிவில் ஜோ பைடன் உறுதியாக உள்ளார். இந்த முடிவு வரலாற்றில் பதிவு பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம்  வெளியேறுவது தர்க்கரீதியான, பகுத்தறிவு மற்றும் சரியான முடிவு. இந்த முடிவை வரலாறு பதிவு செய்யும்.
தலிபான்கள் அடிப்படை முடிவை எடுக்க வேண்டும். இதற்கு முன் எந்த பயங்கரவாத அமைப்பும் செய்யாத,  ஒருங்கிணைப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நல்வாழ்வு வழங்கும் செயலை தலிபான்கள் செய்வார்களா?. அவ்வாறு செய்தால், அதற்கு கூடுதல் உதவி, பொருளாதார உதவி, வர்த்தகம் மற்றும் முழு அளவிலான விஷயங்கள் தேவை.
மற்ற நாடுகள் எங்களை அங்கீகரிக்கிறார்களா? என்று பார்க்கிறார்கள். அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகள் தூதரக நட்பை முறிக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். இது எல்லாம் அவர்களின் தற்போதைக்கு பேச்சுதான். அவர்களுடைய படைகளை அவர்களால் கட்டுக்குள் வைக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் சொல்வது உண்மையா? இல்லையா? என்று பார்ப்போம்.’’ என்றார்.
மேலும், தலிபான்களை நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு ‘‘உங்களையும் சேர்த்து நான் யாரையும் நம்பமாட்டேன். நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால், நான் நிறைய நம்புவதில்லை. தற்போது நீங்கள் தலிபான்களை நம்புகிறீர்களா?’’ என்றார்.

“இலங்கையிலுள்ள 20 டிவிசன் படைகளிலே 16 டிவிசன் படைகள் வடக்கு கிழக்கிலே நிலை கொண்டுள்ளன.” – செல்வராசா கஜேந்திரன்

போர்முடிந்து இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடகிழக்கு காணப்படுகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலுள்ள கற்கோவளம் பகுதியில் தீர்த்தக்கரை என்னும் இடத்தில் இராணுவ முகாம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த இராணுவ முகாம் யுத்தம் முடிந்து தொடர்ந்தும் இன்னமும் அந்த இடத்திலே தான் முகாம் இருக்கின்றது.

அதிலே படையினர் முகாமிட்டு இருப்பதாலே பொதுமக்களுக்கு அச்சமான ஒரு நிலை தான் இருக்கின்றது. குறிப்பாக பெண்கள் தனியாக போக்குவரத்து செய்வதிலே ஒரு அச்ச நிலை இருக்கின்றது.

இலங்கையிலே இருக்கிற 20 டிவிசன் படைகளிலே 16 டிவிசன் படைகள் வடக்கு கிழக்கிலே நிலை கொண்டிருக்கின்றன.

அதிலும் வடமாகாணத்தில் 13 டிவிசன் படைகள் நிலை கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் தான் படை தரப்பில் இருந்து அரசாங்க தரப்பில் இருந்து முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் இவற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

“தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு நேர்ந்துள்ள இழிநிலை.” – சீமான் வேதனை !

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள். இது தொடர்பில் தமிழக அரசு காத்திரமான எந்த நகர்வுகளையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு குறித்த முகாமிலுள்ள 15க்கும் அதிகமான இலங்கைத்தமிழர்கள் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர். இது தொடர்பில் இலங்கை தமிழ்கட்சி தலைவர்கள் எவருமே வாய் இது வரை பெரிதாக திறக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுநாம்தமிழர்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன்.

தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் பெரும் மனவேதனையைத் தருகிறது.

ஈழத்தமிழர் எனும் ஒற்றைக்காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் ஆளும் அரசதிகாரத்தின் தொடர் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் 78 பேரும் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 10 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் அவர்களை அரசு கண்டுகொள்ள மறுக்கவே வேறு வழியற்ற நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் மனவலியைத் தருகிறது.

தமிழ்நாட்டிலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத சூழலில் நிறுத்தியிருக்கும் அதிகாரமற்ற கையறு நிலையும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளி, ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.

ஈழச்சொந்தங்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, வாழவே விடாது நாளும் துன்புறுத்தி அல்லலுக்கு உள்ளாக்கும் இத்தகைய கொடும் முகாம்களை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்கூறுவது கேலிக்கூத்தானது.

சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் இவ்வதைக்கூடங்கள் ஈழச்சொந்தங்களின் அடிப்படை சனநாயக உரிமைகளையே முற்றாக மறுத்து, தினமும் அவர்களைத் துயருக்குள் ஆழ்த்தி பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.

ஈழத்தில் போர் முடிவுற்றப் பிறகு, சிங்களப்பேரினவாத அரசால் வன்னியிலுள்ள முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்ட இழிநிலையே, தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் தொடருமென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? என எழும் கேள்விக்கு என்ன பதிலுண்டு?

இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக, சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை மூடக்கோரிப் பலகட்டமாகப் போராடியும், கருத்துப்பரப்புரை செய்தும், தேர்தல் மேடைகளில் கோரிக்கையாக வைத்தும் அதனை ஆளுகிற அரசுகள் செய்ய மறுத்து வருவது தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணிச் செயல்படும் திராவிடக்கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையையே உணர்த்துகிறது.

தமிழகத்திற்குள் வாழ தஞ்சம் கேட்டு வரும் ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்றைக்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப்பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க மறுத்து இரட்டைவேடமிடுகிறது. ஆகவே, இனிமேலாவது இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூடி, ஈழச்சொந்தங்களுக்கான நலவாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும், பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் உடல் நலிவுற்றிருக்கும் ஈழச்சொந்தங்களின் உயிரைக்காத்து, உடல்நலம் தேற்ற தகுந்த மருத்துவச்சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.