உலகின் ஒரு மூலையில் மனித குலம் எதிர்பாராத நிகழ்வுகள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அப்படியான ஒரு வரலாற்று திருப்பு முனையாக 20 வருடம் ஆப்கானிதானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் திடீர் வெளியேற்றமும தொடரந்தாற் போல் ஒரு கிழமையிற்குள்…? அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட அரசு பதவியை இழந்ததும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வும் நடைபெற்று இருக்கின்றது தற்போது.
எதிர்பாராத நிகழ்வு என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையில் இவை எல்லாம் ஒரு வரலாற்றுப் போக்கில் நடைபெற்ற ஒரு வேக நிகழ்வுதான்.
இன்றைய ஆப்கானிஸ்தான் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு நாம் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை குறைந்தது ஐம்பது வருடங்களாவது பின் சென்று பார்த்தாக வேண்டும். அந்த வகையில் உலகின் வல்லரசுகளா ஒரு காலத்தில் இருந்த சோவியத் யூனியன் அமெரிக்கா என்று இரு முகாங்கள் வலுவாக உலகில் கோலோச்சிய காலத்தில் இருந்து நாம் வரலாற்றைப் பார்த்தாக வேண்டும்
அதிகம் மலைப் பிரதேசங்களையும் தட்டையற்ற நிலப்பரப்பையும் மலைகளில் அதிக கனிம வளங்களையும் கொண்டிருப்பதுதான் ஆப்கானிஸ்தான். பல்வேறு சிற்றரசுகளாக அவற்றிற்கிடையே அதிக தொடர்புகள் குறைவாக வெவ்வேறு ஆளுமையிற்குள் காலத்திற்கு காலம் இருந்து வந்திருக்கின்றது ஆப்கான். இன்று கூட நிலமை அவ்வாறுதான் உள்ளது.
ஆப்கானிஸ்தான் ஒரு பல்லின மற்றும் பெரும்பாலும் பழங்குடி சமூகங்களைக் கொண்ட நாடு. பஷ்தூன்;, தாஜிக், ஹசாரா, உஸ்பெக், ஐமக், துர்க்மேன், பலோச், பாஷாய், நூரிஸ்தானி, குஜ்ஜார், அரபு, பிராகுய், கிசில்பாஷ், பமிரி, கிர்கிஸ், சாதத் என்ற இனங்களையும் மேலும் சில மிகச் சிறிய அளவிலான இனங்களையும் தன்னகத்தே கொண்டது. ஆப்கான் அரசியலமைப்பு, தேசிய கீதம் போன்றவற்றில் பதினான்கு இனங்கள் பற்றி குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது தலிபான் முழு ஆப்கானிஸ்தானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். வடக்கு கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் பஷ்தூன்; இனம் தவிர்ந்த ஏனைய சிறுபான்மை இனங்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பும் இங்கு பலமான ஒரு நிலையில் உள்ளது சில பிரதேசங்களில். குறிப்பாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியைக் குறிப்பிடலாம்.
வரலாற்றில் சற்று பின் நோக்கிச் செல்வோம்….
இஸ்லாமிய மக்களை அதிகம் கொண்டுள்ள உலக நாடுகளில் பல நாடுகள் முன்னேற்றகரமான சமூக அமைப்பை, ஆண் பெண் சமத்துவத்தை தமது மத நம்பிக்கை மார்க்கத்தையும் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உதாரணத்திற்கு காட்ட முடியும். உலகின் பொதுப் பார்வையில் இஸ்லாமிய மார்க்கம் மத அடிப்படைவாத செயற்பாட்டை தமக்குள் வகுத்துக் கொண்டு செயற்படுபவர்கள் என்ற பார்வை அதிகம் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை.
மத அடிப்படை வாதத்திற்கு அப்பால் மனித குல மேம்பாடு என்ற தளத்தில் இவற்றின் அடிப்படைக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு பயணிக்க முற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கு உருவான அரசுகளும் கடந்த காலங்களிலும் இருந்து வந்தன என்பதை வரலாறு கூறி நிற்கின்றது.
மன்னர் ஆட்சிக் கோலோட்சிய 1960 களில்….
மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் மைத்துனரும் பஷ்தூன் தேசியவாதியான முகமது தாவூத் கான் பஷ்துனிஸ்தான் என்ற நாட்டை ஆப்கானிஸ்தானில் உருவாக்க முயன்றார் இதனால் அயல்நாடான பாகிஸ்தானுடன் முறுகல் நிலை ஏற்படட்டது. 1963 வரை பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில், தாவூத் கான் சமூக நவீனமயமாக்கல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்தார் மற்றும் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவையையும் பேணி வந்தார். இதன் தொடர்ச்சியாக 1964 ஆப்கானிஸ்தானுக்கான புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் சர்தார் தௌவுத் கானின் மன்னராட்சிக்கு எதிராக ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஏப்ரல் 1978 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இவர்கள் கிளர்ச்சிக்கு ஆதரவாக அன்றைய ஆப்கானிய அரச இராணுவம் செயற்பட்டது.
இந்தப் புரட்சியை தலைமை தாங்கிய நூர் முஹம்மது தராக்கி சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் ஆட்சியமைத்தார். அவர் பழமைவாதம் நிறைந்த ஆப்கானிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் திட்டங்களையும் முக்கியமாக நிலப் பிரபுகளுக்கு எதிரான நில சீர்த்திருத்தத்தையும் செயற்படுத்தினார்.
இது ஆப்கானிய நிலப் பிரபுக்களை ஆப்கானிய கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை செய்வதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் அரசில் அங்கம் வகித்த ஆப்கானிய கம்யூனிஸ்ட் தலைவர் நூர் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான ஹபிசுல்லா அமினுக்கு இடையே மோதல் முற்ற, இராணுவத் தளபதி அமின் இன் உத்தரவின் பேரில் நூர் படுகொலை செய்யபடுகிறார்.
அதனைத் தொடர்ந்து அமின் சோவியத் நாட்டை தவிர்த்து அமெரிக்காவின் பக்கம் சாய்கின்றார் என்பதன் அடிப்படையில் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி தளபதி அமினை படுகொலை செய்து விட்டு சோவியத் ஆதரவாளரான பாப்ரக் கர்மலை நாட்டின் தலைவராக நியமித்தது.
அதனைத் தொடர்ந்து மத்திய ஆசியாவின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானில் கம்யூனிசம் காலூன்றுகின்றது என்ற வெறுப்பு மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளைப் பற்றிக் கொண்டது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதற்கு எதிராக செயற்படத் தொடங்கினர். சோவியத் இராணுவம் உடனடியாக ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானங்களை அவை நிறைவேற்றின. சோவியத் ஆப்கானை விட்டு வெளியேற மறுக்கின்றது.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் சோவியத் படைகளை வெற்றி கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சவூதிஅரேபியா, சீனா போன்ற நாடுகள் ‘முஜாஹிதீன்” என்ற இஸ்லாமிய சித்தாந்த ரீதியிலான மத அடிப்படைவாதப் போராளிகளை உருவாக்குகிறார்கள்.
அதன் தலைவர் முல்லா உமர் தலமையில் சோவியத் படைகளுக்கு எதிராகவும் அவரின் ஆதரவு ஆப்கானிஸ்தான் கம்யூனிச அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் சோவியத் சீனா இடையிலான முரண்பாடுகள் காரணமாக சீனாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அமெரிக்கா இருந்தது.
உண்மையில் மேற்கத்திய நாடுகளின் சோவியத்திற்கு எதிரான பனிப்போரை முஜாஹிதீன்கள் நடத்தினார்கள். இவர்களின் தளபதிகள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களாக இருந்து போராளிகளாக உருமாறியவர்கள். பெரும்பாலும் இவர்கள் பழங்குடியினர் மத்தியில் இருந்து வந்த பஷ்தூன்; இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையில் பாப்ரக் கர்மலின் ஆட்சியின் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்க, சோவியத் யூனியன் புதிய அதிபராக முஹம்மது நஜிபுல்லாவை நியமித்தது.
முஜாஹிதீன் களின் கெரில்லா யுத்தம் சோவியத் நாட்டுக்கு பெரும் இழப்பையும் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தியதன் விளைவாக பத்து வருடங்கள் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் இராணுவம் பெப்ரவரி 1989 ஆப்கானை விட்டு வெளியேறுகிறது.
ஆனாலும் தொடர்ந்து பொருளாதார இராணுவ உதவிகளை நஜிபுல்லா அரசிற்கு வழங்கி வந்தது. 1991 இல் சோவியத்தின் வலிந்த உடைவும் அதனைத் தொடர்ந்த சோவியத் ஆதரவு அற்ற ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா அரசும் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. முஜாஹிதீன் இற்கு பாகிஸ்தான் ஊடாக அமெரிக்க கூட்டமைப்புகள் ஆயுத பொருளாதார ஆதரவுகளை வழங்கி வந்த நிலையில் ஆப்கான் அரசு 1992 இல் வீழ்சியடைகின்றது.
முஹம்மது நஜிபுல்லா பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பியோட முயற்சித்தார். அது தோல்வியில் முடிய – ஆப்கானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் தலைமை குடியிருப்பில் தங்கியிருந்த முஹம்மது நஜிபுல்லாவை முஜாஹிதீன் துக்கிலிட்டு படுகொலை செய்து அதன் பின்பு வாகனம் ஒன்றில் பின்புறமாக கட்டி தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர்.
முஜாஹிதீன்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் துவங்கியது இவ்வாறுதான்.
கம்யூனிசத்திற்கு மாற்றாக இஸ்லாமிய நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பரப்பிய ‘பெருமை’ மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளையே சேரும். சவூதிரேபியாவின் எண்ணெய் வளம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி என்பது இந்த மத அடிப்படைவாதத்தின் அச்சாணி.
இதனைத் தொடர்ந்து பல்வேறு முஜாஹிதீன் பிரிவுகளின் கூட்டணியினர் அரசாங்கத்தை சலாவுதீன் ரப்பானி தலமையில் உருவாக்கினர். ஆனால் மற்றொரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 1996 வரை தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது…
மிகுதி அடுத்த பதிவில்…
(நன்றி: சிவா முருகுப்பிள்ளை – அவருடைய முகநூலில் இருந்து)