30

30

யாழ். குருநகர் இளைஞன் படுபொலை சம்பவம் – காவல் நிலையத்தில் சரணடைந்த 6 பேர் !

குருநகர் இளைஞன் கொலையின் முதன்மை சந்தேக நபர்  உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெரன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவ தினத்தன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர்களான பாசையூர் ரெமியின் சகோதரர்களைத் தேடி தீவகம் உட்பட பல இடங்களில் காவல்துறையினர் தேடுதல் நடத்தினர்.

இந்த 9 நாள்களின் பின்னர் முதன்மை சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். எனினும் முதன்மை சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர் இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவித்தன.

“பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தி தமிழ் மக்களுடைய தலைவிதியை தீர்மானியுங்கள்.” – எம்.கே. சிவாஜிலிங்கம்

“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே  ஒரு பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தி தமிழ் மக்களுடைய தலைவிதியை சர்வதேச நாடுகள் ஐ.நா.வினுடைய ஏற்பாட்டிலே,  ஐ.நா.வினுடைய மேற்பார்வையிலேயே செய்யப்படவேண்டும்.” என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்று ஆகஸ்ட் 30 உலக காணமல் ஆக்கப்ட்டோர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும்நிலையில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலுமு் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாக ,

இன்றைய தினம் உலக கட்டாயமாக காணாமல் செய்யபட்டோர்களுக்கான நாள். இலங்கை தீவை பொறுத்த வரையில் உலகிலே இன்றைக்கு கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இது எங்களுடைய போராட்டங்கள் தீவிரமடைந்த காலத்திலேயே 1970 களில் ஒரு சிலராகவும் 1980 களில் ஒரு சில டசின் கணக்காகவும் காணப்பட்ட விடயங்கள் 1990 களில் இன்னும் தீவிரமடைந்து நூற்று கணக்கிலே சென்ற நிலமையிலே 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயிரக்கணக்கில் காணாமல் போகின்ற நிலைமை உருவாக்கப்பட்டு 2009 கொடிய போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் இது வரை தமிழ் தரப்பில் இருந்து கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 20000 என ஐக்கிய நாடுகளில் மனித உரிமை பேரவைக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில் தெரிவிக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம். போர் நடைபெற்று கொண்டிருந்த பொழுது பல இடங்களிலே கிழக்கு மாகாணம் வடக்கிலே முல்லைத்தீவு யாழ்ப்பாண மாவட்டங்களில் 600 பேருக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள்.

1996 இல் காணாமல் போனோர் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகின்ற சூழ்நிலையிலே தான் 2009 ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின் சுமார் 6500 பேரை இராணுவத்தினரிடம் அவர்களது மனைவிமாரோ பெற்றோரோ சகோதரர்களோ கையளித்தவர்களை பற்றி கூட இன்னும் எந்த விதமான தகவல்களும் இல்லை. இந்த சூழ் நிலையின் பின் தான் இவர்களை கண்டு பிடிக்க எத்தனை குழுக்களை நியமித்து இருந்தாலும் அதிலிருந்து பின் வாங்கினார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே 30/1 என்ற தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை வழங்கியதாக இலங்கை அரசு சொன்னாலும் அதன் பிறகு அவர்கள் பின் வாங்கினார்கள். இந்த சூழ் நிலையில் தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி வருட கணக்கில் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு ஏற குறைய 2000 நாட்கள் வீதிகளில் இருந்து போராடி வருகிறார்கள்.

சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் நீதி கிடைக்க முடியும்.  அதனை பெறுவதற்கு நாங்கள் முனைப்பு காட்ட வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளிகளை நிறுத்தாத வரை இதற்கான நீதி கிடைக்க வாய்ப்பில்லை. இல்லாவிட்டாலும் கூட அதை நோக்கி பயணிக்கின்ற  விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

இழைக்கப்பட்ட இனப் படுகொலை, போர்க்குற்றங்கள்,  மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக ஈடு  செய்தி நீதி ( பரிகார நீதி )வடக்கு கிழக்கு மாகாணங்களிலே  ஒரு பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தி தமிழ் மக்களுடைய தலைவிதியை சர்வதேச நாடுகள் ஐ.நா.வினுடைய ஏற்பாட்டிலே,  ஐ.நா.வினுடைய மேற்பார்வையிலேயே செய்யப்படவேண்டும்.

இதுதான் அரசியல் தீர்வுக்கான வழி காணாமல் போகச் செய்யப்பட்ட அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்களுடைய நீதியும், நிவாரணமும், இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையை நோக்கி இந்த தினத்திலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே அவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற விடயத்திற்க்கு இன்னும்  சில குறுகிய காலத்துக்குள்ளே  நீதி கிடைக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றுள்ளது.

21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் !

பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் வைத்து சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை சிறப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேக்கு முகக்கவசத் தயாரிப்பாளர் சமன் ஹெட்டியாராச்சி தான் தயாரித்த முகக்கவசத்தை வழங்கி வைத்தார்.

பெருங்காயம், சிடார், கறுவாப்பட்டை, பாவட்டை வேர், சிவப்பு வெங்காயம், மரமஞ்சள், வேப்பிலை, கராம்பு, இஞ்சி, பச்சை மஞ்சள் ஆகியவை உட்பட 21 மூலிகைகள் உள்ளடங்கியதாக முகக் கவசத்தை தயாரித்துள்ளதாக சமன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருக்க 21 இலங்கையர்கள் விருப்பம் !

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு பயண அனுமதி பெற்ற அனைவரும் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றுவரை, அறுபத்தாறு இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் ஏழு பேர் வெளியேற்றப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இருபத்தி ஒன்று இலங்கையர்கள் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் தங்கி இருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இலங்கை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை கொண்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக சர்வதேச நாணய நிதியத்தை பயன்படுத்துங்கள்.” – அமெரிக்கா வலியுறுத்தல் !

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் நிதியமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆபத்து தொடர்பாகவும் விவாதித்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலை தொடர்பாகவும் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வளங்களைப் பயன்படுத்துவதே இதற்கான தீர்வு என தாம் நம்புவதாகவும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் 2020 – இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் !

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது இரண்டாவது பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் சமித் துவான் கொடிதுவக்குவினால் இந்த வெண்கலப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களுள் எட்டாயிரத்துக்கும் அதிகமான கொவிட் மரணங்கள் !

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பெருமளவான மரணங்கள் மூன்றாவது அலையிலேயே பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5 நாட்களுக்குள் மாத்திரம் 1,041 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இம்மரணங்கள் பதிவாகியுள்ளன.

24ஆம் திகதி 214 பேரும், 25ஆம் திகதி 209 பேரும், 26ஆம் திகதி 214 பேரும், 27ஆம் திகதி 212 பேரும், 28 ஆம் திகதி 192 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

“மக்களை தியாகம் செய்யச்சொல்ல அரசுக்கு தகுதி இல்லை.” – ரணில் விக்ரமசிங்க

தியாகங்களை செய்ய வேண்டும் என மக்களிடமே கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து குறித்து நேற்று (29.08.2021) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் பேசிய அவர் ,

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த நிபுணர்கள்கள் குழுவை நியமிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளமையும் ரணில் விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த கோரிக்கையை இலங்கையை தவிர்ந்த ஏனைய நாடுகள் நிறைவேற்றியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆகவே இந்த சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட்டின் பிதாமகன் டொன் பிரட்மென் சாதனையை முறியடிக்க தயாராகும் ஜோ ரூட் !

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் தொடரின் மூன்று போட்டிகள் நிறைவுக்குவந்த நிலையில் இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் அடங்கலாக இதுவரை 500க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்து ஏராளமான சாதனைகளை படைக்க தயாராகிவிட்டார்.

10 cricketers whom Sir Don Bradman rubbed the wrong way - Cricket Country

இந்த நிலையில் கிரிக்கெட்டின் பிதாமகன் டொன் பிரட்மென் சாதனையையும் ரூட் முறியடிப்பார் என நம்பப்படுகிறது.

ஒரு ஆண்டில், ஒரு குறித்த ஒரு வீரர், குறித்த ஒரு அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை பிரட்மன் 71 ஆண்டுகளாக வைத்திருக்கிறார். பிரட்மன் இங்கிலாந்து அணிக்கைதிராக 1930 ம் ஆண்டில் 9 இன்னிங்ஸ்களில் 974 ஓட்டங்களை ஒரே ஆண்டிலேயே விளாசித் தள்ளினார்.

இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஜோ ரூட் 13 இன்னிங்ஸ்களில் மொத்தம் 875 ஓட்டங்களை பெற்றுள்ளார், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் இருக்கும் நிலையில் 100 ஓட்டங்களை பெற்றுக் கொள்வாராக  இருந்தால், 71 ஆண்டு கால சாதனையை முறியடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஒரு ஆண்டில் அதிகமான டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற மொகம்மட் யூசுப்பின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 390 ஓட்டங்கள் தேவையான நிலையில் இந்த ஆண்டில் சாதனை புத்தகங்கள் எல்லாவற்றிலும் தன் பெயரை பதித்து விடுவார் என்றே எதிர்பார்கப்படுகிறது.

வீடுகளில் மரணமடைந்த 06 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் மீட்பு !

கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு வீட்டினுள் சிகிச்சை அளிக்கும் முறை சாதகமான பெறுபேற்றை தந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன அண்மையில்  தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் , கட்டான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றாலேயே மரணமடைந்துள்ளனர் என்று நீர்கொழும்பு வைத்தியசாலையின் அறிக்கைகள் தெரிவிப்பதாக, கட்டான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டி குலத்திலக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் ஆண்கள் நால்வரும் பெண்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.