04

04

“அரசாங்கம் கூறுவதை  நம்பி தமிழ்தேசிய கட்சிகள் ஏமாந்துவிடக்கூடாது.” – மாவை சேனாதிராஜா வலியுறுத்தல் !

“அரசாங்கம் கூறுவதை  நம்பி தமிழ்தேசிய கட்சிகள் ஏமாந்துவிடக்கூடாது.” என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில், தனித்தனி கட்சிகளாக செயற்படுவது எம்மை பலவீனப்படுத்துவதுடன் உரிய இலக்கை அடைய முடியாமல் போய்விடும்.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட், இலங்கை தொடர்பாக முக்கிய உரையொன்றினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கின்றோம் .

இதற்கிடையில், சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கம் ஒரு பேச்சுக்காக தாங்கள் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென கூறுவதை நம்பி எவரும் ஏமாந்துவிடக் கூடாது.

மேலும் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளும் ஒன்றுபட்டு, மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கின்ற விடயங்கள் தொடர்பாக எங்கள் மதிப்பீட்டை நாங்கள் அனுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியை கொண்டாட தலிபான்கள் வானை நோக்கி சுட்டதால் 17 பேர் பலி !

ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அம்ருல்லா சாலே மறுத்துள்ளார். பின்னர் தலிபான் தலைவர்களும் இந்த தகவலை மறுத்தனர்.
ஆனால், பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான் வசம் வந்துவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியதால், தலிபான் படையினர் உற்சாகத்தில் திளைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்வாறு, காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் செய்தி நிறுவனங்கள் கூறி உள்ளன.
இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கண்டித்துள்ளார். வானத்தை நோக்கி சுடுவதை தவிர்த்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் என்று அவர் டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே தேவையில்லாமல் சுடவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

அரசியல் அதிகாரம் கேட்டு போராடிய பெண்களை கடுமையாக தாக்கிய தலிபான்கள். !

ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் தரப்பில், “ தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் இளம் பெண்கள் காபூலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட  பெண்களை அதிபர் மாளிகையை நோக்கி செல்லவிடாமல் தலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பரை தலிபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் சுட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஆப்கானில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.

சிவப்பு வலயமாக அறவிடப்பட்ட இலங்கை !

கொரோனா வைரஸ் பரவுதல் வலுப்பெற்றுள்ளமை மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.                  இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  4 இலட்சத்து 56 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 82 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப் பட்டுள்ளது.” என இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார்.

இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடை யாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த மாற்றத்தைக் காணவேண்டு என்றால் சுமார் ஒரு வாரக் காலம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அதிக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்” – சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என  சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது.

சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று (வெள்ளிக்கிழமை) பதிவான கொரோனா மரணங்களில் 5 பேர், 30 வயதுக்கு குறைவானவர்கள் என அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் போதுமானளவு ஓய்வெடுக்க வேண்டியது அவசியம் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.

லண்டன் ஓவலிலும் குழப்பம் – ஜார்வோ கைது !

இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட்  தொடரில் ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டின் போது அத்துமீறி ஊடுருவினார். அதனால் லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியைப் பார்க்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, 4-வது டெஸ்ட் நடக்கும் லண்டன் ஓவலிலும் அவர் நேற்று திடீரென மைதானத்திற்குள் ஓடிவந்து பந்து வீசுவது போல் சைகை காட்டினார். அத்துடன் வந்த வேகத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீதும் மோதினார். பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் அவரைப் பிடித்துச் சென்றனர். இதனால் 5 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மைதானத்திற்குள் திடீரென நுழைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஜார்வோவை லண்டன் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுப்பூசி அதிகமாக செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் !

உலகில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தல் பட்டிலில் இலங்கை முதலிடத்தை  பெற்றுள்ளது.

நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக Our World  இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளிலேயே இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளதுடன், ஈக்வடோர் 12.5 சதவீதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து  புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா  ஆகியன முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.

இதேவேளை குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள சீன தூதரகம், இலங்கைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தையும் தடைசெய்யுங்கள்.” – பொதுபல சேனா

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியபோது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

நியூசிலாந்து கொலையாளி மட்டக்களப்பு காத்தான்குடி? - www.pathivu.com

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இந்தநிலையில் , இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறிக்கை ஒன்றைின் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

நியூஸிலாந்து ஒக்லாந்து நகரில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கை அதிகளவில் அவதானம் செலுத்த வேண்டும். மேலும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றமையை அரசாங்கம் ஒருபோதும் கருத்திற் கொள்ள கூடாது.

அஹமட் ஆதில் மொஹமட் சம்சுதீன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட நபரால் கத்திக்குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸிலாந்து புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நபர் 2017 ஆம் ஆண்டு நியூஸிலாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பேஸ்புக் பக்கங்கள் ஊடாக இஸ்லாம் மத தீவிரவாதத்தை வளர்ப்பற்கான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இருப்பினும் மனித உரிமை காரணிகளையும், ஏனைய பொது காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இவரை நியூஸிலாந்து பாதுகாப்பு தரப்பினர் அவரை இரகசியமாக கண்காணித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் தீவிரவாதி என சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கையர் யார்..? – வெளிவந்துள்ள ஆரம்பகட்ட தகவல்கள் !

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியபோது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

நியூசிலாந்து கொலையாளி மட்டக்களப்பு காத்தான்குடி? - www.pathivu.com

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எட்டு வயதிலேயே கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பால புனரமைப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை திருடியவர்கள் கைது !

பேலியகொடை அதிவேக வீதியில் புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை திருடிய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களால் திருடப்பட்ட இரும்புக் குழாய்களின் பெறுமதி 1,615,000 ரூபாய் என காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (03) பேலியகொடை காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த இரும்புக் குழாய்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

31, 35, 50 மற்றும் 66 வயதுடைய சந்தேகநபர்கள் வெலிகம, ஹிக்கடுவை, தெமடகொடை மற்றும் தெணியாய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (04) புதுக்கடை இல.05 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் பேலியகொடை காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.