08

Sunday, September 26, 2021

08

வடக்கு, கிழக்கில் தேங்கிக்கிடக்கும் சடலங்கள் – பஷில்  ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ள சுமந்திரன் !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே  உடனடியாக எரிவாயு மின் தகன மேடைகளை வடக்கு, கிழக்கில் அமைக்க நிதி அமைச்சர் பஷில்  ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய  கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற  எம்.ஏ.சுமந்திரன்  கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற  61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட  ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய எரிப்பதற்கு அவசியமான எரிவாயு மின்தகனமேடைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதியளவு இல்லை. இதனால் வடக்கு, கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே எரிவாயு மின்தகன மேடைகள் உள்ளன. மட்டக்களப்பில் இல்லை. எனவே நிதி அமைச்சர் அவசரமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு தற்காலிகமாகவேனும் எரிவாயு மின்தகனமேடைகளை வடக்கு,கிழக்கில்  அமைத்து கொரோன வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

“இலங்கைக்குள் இன்னுமொரு புதிய திரிபு.” – எச்சரிக்கிறார் அமைச்சர் சுதர்ஷனி !

அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா திரிபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

இந்நிலையில், மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே வலியுறுத்தினார்.

அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அரசியல் பேதங்களை மறந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

“முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் – அது கட்சியின் முடிவு.” – சி.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது. சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம்” என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்  கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு, கடிதம் எழுதியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 05.09.2021ஆம் திகதி யாழில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாண சபையை குழப்புவதில் நிறைய அனுபவம் வாய்ந்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வீ. கே. சிவஞானமும் பாரிய கவனம் செலுத்தினார் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இன்றைய தினம் (புதன்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் செய்த தவறாக அவர் குறிப்பிட்டது 17 சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மாகாண சபையை கலையுங்கள் என்ற கடிதத்தை ஆளுநரிடம் நான் கையளித்தமை பற்றியது. இந்த விடயம் தொடர்பாக பல தெளிவுபடுத்தல்களை நான் கடந்த 5 வருடங்களாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

ஆளுநருக்குக் கொடுத்த கடிதம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்பது மட்டுமே தவிர. சபையைக் கலையுங்கோ என்றல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன். முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக் குழு ஒன்றை சபை நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் சமர்பித்தபோது, இதன் பொருட்டு சபை உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுவை நியமிக்க முடியுமே தவிர, முதலமைச்சர் கோரியபடி வெளியாட்கள் கொண்ட குழுவை நியமிப்பதை நிராகரித்ததே நான்தான்.

முதலமைச்சர் தமக்குரிய சிறப்புரிமைக்கமைய அமைச்சர்களை நீக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்யலாம் என்பதால் விசாரணைக்குழு தேவையற்றது என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. அதனால் சுமார் ஒன்றரை நாள் விவாதத்தின் பின்பு முதலமைச்சர் தாமே ஒரு குழுவை நியமிக்கலாம் என்று நாம் கூறியதற்கு அமையவே விசாரணைக்குழு அவரால் நியமிக்கப்பபட்டது.

அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கம் அளித்த நிலையில், முதலமைச்சர் அதனையும் பரிசீலித்து அவரது முடிவை இரண்டு நாட்களின் பின்பு தெரிவிக்கலாம் என்ற எனது கோரிக்கையை நிராகரித்து, தமது தீர்மானத்தை வாசிக்கத் தொடங்கியதும் அநேகமான மாகாண சபை உறுப்பினர்கள் சபையைவிட்டு வெளியேறினர்.

இவ்வாறான நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய நான் சபை அமர்வு முடிந்த பின்பு கட்சித் தலைமையத்துக்கு இரண்டு மணித்தியாலயங்களுக்கு பின்பு சென்றபொழுது அநேகமான உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆளுநருக்குச் சமர்ப்பிதற்கான கடிதம் கணினியில் தட்டச்சிடப்பட்டுக்கொண்டிருந்தது. அது கட்சி உறுப்பினர்களின் முடிவு என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் எனது பெயர் முதலில் இருந்தபோது அப்படிப் போட வேண்டாம். அது தவறு என பலமுறை வற்புறுத்தியும் அதனை நிராகரித்து எனது பெயரை முதலில் தட்டச்சாக்கிவிட்டார்கள். வேறு வழியின்றி கையொப்பமிட நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

இந்தக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவதற்கு என்னையும் அழைத்தார்கள். அப்படி நானும் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனும் எனது வாகனத்தில் புறப்படும்போது திரு.கமலேஸ்வவரன் அந்தக் கடிதக் கோவையை கொண்டு வந்து என்னிடம் தந்தார். அதை நான் ஏற்காமல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தவர்களே கொடுக்க வேண்டும் எனக் கூறியதும் அவர் அதை எடுத்துச் சென்றார்.

பின்பு ஆளுநரைச் சந்திக்க மேல்மாடியில் உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் உட்சென்றபோது ஏற்பட்ட நெருக்கடிக்குள் அந்தக் கோவை எனது கையில் திணிக்கப்பட்டது. இதனால் நான் அதிர்ச்சியடைந்த போதும் அந்த இடத்தில் நின்று பிரச்சினைப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு கடிதம் என்னால் ஆளுநரிடம் சகல உறுப்பினர்கள் முன்னிலையில் கையளிக்க வேண்டியதாயிற்று.

எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முன்னெடுப்பிலோ வேறு விதத்திலோ எனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை காணலாம். சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

“அவசரகால சட்டம் இன்று சிங்களவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.” – செல்வராசா கஜேந்திரன் அனுதாபம் !

தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அன்று கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டம் தற்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கள காலனித்துவ ஆதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் ஆயுத ரீதியாக போராடியபோது அதனை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த அவசரகால சட்டம் 30 ஆண்டுகளாக தமிழர்களை வேட்டையாடியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இன்று சிங்கள மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக இந்த அவசரகால சட்டம் மீண்டும் அமுல்படுதப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்தப்போக்கு நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்றும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.