09

09

மட்டக்களப்பில் வேகமெடுக்கும் டெல்டா – 10வயது சிறுவன் பலி !

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா திரிபு வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது

அதேவேளை 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கடந்த வாரம் 1,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 49 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது அதில் 43 பேருக்கு டெல்டா திரபு வைரஸும், 4 பேருக்கு அல்பா வைரசும் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். 2 பேரின் அறிக்கை கிடைக்கவில்லை

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு வைரஸ் இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றது. எனவே பொதுமக்க ஊரடங்கு சட்டத்தை மீறி தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் அதேவேளை சுகாதார துறையினரின் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

“ஒற்றுமைப்பற்றி கூறிவிட்டு ஐ.நாவுக்கு நான்கு கடிதங்களை போலித்தேசியவாதிகள் அனுப்பியுள்ளனர்” – பிள்ளையான்

மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

இதன் போது பேசிய அவர்,

ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு தெரிவித்தார்.

மேலும் ஐ.நா. சபைக்கு நான்கு பகுதிகளில் இருந்து கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினை திருப்திப்படுத்தும் வகையில் கடிதத்தினை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரிய தீர்மானம் நிறைவேற்றம்.” – ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஸ்டாலின் மேலும் ஒரு நகர்வு !

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமர்ப்பித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டப்பூர்வமான உரிமையாகும். இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்கிறது.

அதன்படி பார்க்கும்போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 என்று பெயரிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகளாக வருபவர்களைச் சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். மத ரீதியிலோ, இன ரீதியிலோ அல்லது எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.

வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வதாக அமையாது. அரசியல் ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானதாகும்.

அதிலும், குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் எல்லாம் வரலாம் என்றால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்? என்றும் இதுதான் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களில் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவர்கள், இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்களது உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது.

மத்திய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைவிட, வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டி உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்று. அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன்.” – சி.வி.கே.சிவஞானம்

“கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் ஆகவே அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன்.” என  வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எது நியாயமோ எது சரியோ அதை யார் செய்தாலும் சரி என்பேன் அதே பிழை என்றால் பிழை என்று கூறுவது என்னுடைய பொறுப்பு. இனி நான் பயப்படமாட்டேன். இதுவரை நான் அடக்கி வாசித்தேன். என் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர். தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது ஆனால் அவர்கள் அவ்வாறான ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

தமிழரசுக்கட்சி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, என்னைப்பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது.

புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் ஆகவே அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன் என்றார்.

“கர்ப்பம் தரிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.” – இலங்கையில் வெளியான அறிவிப்பு !

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பரவலால் நாளுக்குநாள் மரணவீதமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் முதியோர்களே அதிகம் கொரோனா தாக்குதலுக்கு உள்ளான போதும் அண்மைக்காலத்தில் சிறுவர்கள் – கர்ப்பிணி தாய்மார்கள் என பலர் இலங்கையில் கொரோனா உயிர்ப்பலிக்கு இலக்காகியுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் “கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா தொற்று தற்போது பரவி வருவதனால் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக, சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில்  மேலும் பேசிய அவர்,

கொவிட் என்பது புதியதொரு நோய், அது குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் கிடையாது. கொவிட் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து, புதிய புறழ்வுகள் ஏற்பட்டு வருகின்றது. தாய்மாருக்கு கொவிட் வைரஸினால் பிரச்சினை கிடையாது என சுகாதார தரப்பினர் ஆரம்ப காலத்தில் தெரிவித்திருந்தனர். எனினும், தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

கர்ப்பணி தாய்மாருக்கு கொவிட் வைரஸ் தொற்றுமானால், அது அதியுயர் அபாயகரமான நிலைமையாகவே கருத வேண்டும்.

ஏனெனில், கொவிட் வைரஸ் கர்ப்பணித் தாய்மார்களை தாக்கினால், அது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்தான விடயம். எனவே, தம்பதியினர் விரும்பினால், குழந்தை பெற்றெடுப்பதை, ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு கோருகின்றேன் எனக் கூறியுள்ளார்.

வீட்டில் கசிப்பு உற்பத்தி – பெண் கைது !

வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இன்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் நூற்றுக்கு அதிகமானோருடன் நடந்த திருமணம் – யாழில் தம்பதியினருக்கு நேர்ந்த கதி !

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அச்சுவேலி வடக்கில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார், திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர்.

அத்தோடு, மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான உறவினர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார கட்டுப்பாடுகளை மீறி திருமண வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் மீது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் முற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என அச்சுவேலி பொலிஸார் கூறினார்.