18

18

“ரத்வத்தை குடும்பத்தினர் சிறைக்ககைதிகளுக்கு மட்டுமல்ல பௌத்த துறவிகளுக்கும் கொலை மிரட்டல் விடுவதில் வல்லவர்கள்.” – சிங்கள ராவய குற்றச்சாட்டு !

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தை குடும்பத்தினர் சிறைக்ககைதிகளுக்கு மட்டுமல்ல பௌத்த துறவிகளுக்கும் கொலை மிரட்டல் விடுவதில் வல்லவர்கள் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மெடில்ல பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் சகோதரர் என்று கூறப்படும் நபரால் தங்களுக்கு  மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மெடில்ல பஞ்ஞாலோக்க தேரர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர்  தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் பேசிய அவர் ,

வீடியோ ஒன்றை வெளியிட்டமையால் ரத்வத்தையின் சகோதரர் எனக் கூறப்படும் நபரால் தங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.  எனவே, இந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள சிறைச்சாலை சம்பவத்தில் கூட அமைச்சரின் நடத்தை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இந்த நாட்டில் பௌத்த துறவிகளுக்கு இவ்வாறு செயற்பட முடியும் என்றால் சிறைக் கைதிகளிடம் எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை என்றும் மிகவும் கடினமாக உருவாக்கிய அரசாங்கத்தின் பெயர், கொள்கைக்கு அவப் பெயர் ஏற்படுத்தாமல் வெட்கம், சுய கெளரவம் இருந்தால் ஏனைய அமைச்சுகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிருந்து இராஜினாமா செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லொஹான் ரத்வத்தை தற்போது ஓர் இரத்தினக் கல்லை எடுத்துக் கொண்டு இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தலைவருடன் இணைந்து விற்க வேண்டிய இரத்தினக் கல்லை சீனாவுக்கோ அல்லது ஏனைய நாட்டுக்கோ விற்றுவிட்டு தற்போது பதவி வகிக்கும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து கெளரவத்துடன் விலகி விடுவது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்படும் 260 இலட்சம் ரூபாய்  பெறுமதியான வேலைத் திட்டம் !

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய்  பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நன்மையடையவுள்ளன
அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட தனங்கிளப்பு மற்றும் கோவிலாக்கண்டி ஆகிய இடங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள் சுமார் 57 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதே போன்று, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நான்கு இடங்களில் இடி மின்னல் பாதுகாப்பு (இடி தாங்கி) பொறிமுறையினை அமைப்பதற்காக சுமார் 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைவிட, கொட்டடி நாவாந்துறை மற்றும் கொழும்புத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள வலை ஒழுங்குபடுத்தும் மண்டபங்களை புனரமைப்பதற்காக சுமார் 119 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடற்றொழில் திணைக்களத்தினால் முன்னுரிமை அடிப்படையில்   தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்துதல் உட்பட  சுமார் 17 வேலைத் திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டம் உட்பட கடற்றொழில் அமைச்சின் ஏனைய திட்டங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்துபட்டளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

“சிறைச்சாலைக்குள் இருப்பது எங்கள் மக்கள். அவர்களை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.” – அனுராதபுரத்தில் மனோ !

“சிறைச்சாலைக்குள் இருப்பது எங்கள் மக்கள். அவர்களை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனுராதபுரத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தன ; அனுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகண பண்டார வுடன் இணைந்து அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து ஆராய்வதற்காக சென்றேன். சிறைச்சாலைக்கு வருவதாக நாங்கள் நேற்று அறிவித்திருந்தும்கூட இன்று சில தாமதங்கள் ஏற்பட்டது. அரைமணித்தியாலம் தாமதம் ஏற்பட்டது இது நாடாளுமன்ற உறுப்பினராகிய எங்களது உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கை.

நான் சபாநாயகரை தொடர்புகொண்டு அவரிடம் முறையிட்ட பின்னர்தான் எங்களிற்கு இங்கு கதவு திறக்கப்பட்டது.சபாநாயகரின் அனுமதி பெற்ற பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைகளிற்கோ பொலிஸ்நிலையங்களிற்கோ சென்று கைதிகளை பார்க்கமுடியும் என்ற சட்டம் வருமானால் அது இந்த நாட்டில் சட்டமொழுங்கு எவ்வள தூரம் சீர்குலைந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும்.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எங்களிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறானதாகயிருக்கும். அதிகாரிகள் கதவை திறக்கமறுத்திருந்தால் நாங்கள் இந்த இடத்திலேயே உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்போம்.
உள்ளேயிருப்பது எங்கள் மக்கள்.  அவர்களிற்கு துன்பம் நிகழும்போது துணையிருக்கவேண்டிய காப்பாற்றவேண்டிய பொறுப்பு எங்களிற்குள்ளது.
அதனால் தான் கொழும்பிலிருந்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ரூபா 500ஐ தாண்டிய 400 கிராம் பால்மாவின் விலை !

உள்நாட்டு சந்தையில் பால்மா 400 கிராம் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே 400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 340 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை இங்குகுறிப்பிடத்தக்கது.

லொஹான் ரத்வத்த அரசியல்கைதிகளை அச்சுறுத்திய விவகாரம் – சிறைச்சாலையில் சிசிடிவி கமெரா இல்லையாம் !

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் சிசிடிவி கமெராக்கள் இல்லை என சிங்கள பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலைகளில் மட்டுமே இந்த வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே லொஹான் ரத்வத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு சிசிடிவி காட்சிகள் கிடைக்காது என்றும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சிறைச்சாலைகளுக்கு வருபவர்கள் கையொப்பமிடும் பதிவுப் புத்தகத்தை கொண்டு, தேவையெனில் விசாரணையை மேற்கொள்ள முடியும் என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளதாக குறித்த செய்தி அமைந்துள்ளது.

இலங்கையின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன !

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டை விட்டு கோட்டாபய வெளியேறியுள்ள நிலையில், இலங்கையின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தற்காலிக தலைவராகவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனத செயற்படவுள்ளார். அத்துடன் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் இத்தாலியில் ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இத்தாலி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை அல்லது திங்கட்கிழமை நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது வரையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாட்டின் தலைவராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட நாட்களின் பின் இலங்கையில் குறைவடைந்துள்ள கொவிட் மரணங்கள் !

நாட்டில் மேலும் 84 பேர் கொவிட் தொற்றால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று இதுவரையில், கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,530 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 502,302 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதுபானசாலைகளை திறக்க நாம் அனுமதிக்கவில்லை – சுகாதார அமைச்சு

மதுபானசாலைகளை திறப்பதற்காக சுகாதார அமைச்சினால் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத், மதுபானசாலைகளை இவ்வாறாக திறப்பதன் மூலம், மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுபானசாலைகளை திறப்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ள மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உள்ளனர். அவர்களின் அனுமதியின்றி மதுபானசாலைகளை திறக்க முடியாது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.