மூன்று அமைச்சர்களின் எதிர்ப்புக்குள்ளும் அமெரிக்காவின் கைகளுக்கு போகும் கெரவலப்பிட்டிய மின்நிலையம் !
மூன்று அமைச்சர்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் கெரவலப்பிட்டிய யுகடனாவி 300மெகாவோட் மின்நிலையத்தை அமெரிக்காவை தளமாக கொண்ட நியுபோர்ட்டிரஸ் எனேர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள் வாசுதேவநாணயக்கார விமல்வீரவன்ச உதயகம்மன்பிலவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உத்தேச உடன்படிக்கை மற்றும் அமைச்சரவை பத்திரம் குறித்து மூன்று அமைச்சர்களும் தங்கள் கரிசனைகளை வெளிப்படுத்தி கடிதம் எழுதியிருந்தனர்.
அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட விதத்தினை சுட்டிக்காட்டி அவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
முதலில் அமைச்சர்கள் மத்தியில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்காமல் நிகழ்ச்சி நிரலிற்கு வெளியே சமர்ப்பித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
கேள்விபத்திரம் கோரப்பட்ட பின்னர் மூன்றாம் தரப்பிற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டமை நல்லாட்சி கொள்கைளிற்கு முரணானது என அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் அவர்களின் எதிர்ப்பையும் மீறி நிதியமைச்சு கெரவலப்பிட்டிய யுகடனாவி 300மெகாவோட் மின்நிலையத்தை அமெரிக்காவை தளமாக கொண்ட நியுபோர்ட்டிரஸ் எனேர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.