24

24

வெளியிடப்பட்டது பலவீனமான பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் – இரா.சம்பந்தன் , சித்தார்த்தன் ஆகியோரும் முன்னிலையில் !

இலங்கை நாடாளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமான உறுப்பினர்களின் பெயர்களில் தமிழ் உறுப்பினர்கள் சிலரும் இடம்பிடித்திருக்கின்றனர். அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அலி சப்ரி உள்ளிட்டவர்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை – ஓகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட கணிப்பில் இந்த விபரம் வெளியாகியிருக்கின்றது. அந்த பெயர் பட்டியல் வருமாறு,

டிரான் அலஸ் – பொதுஜன முன்னணி (கொழும்பு) அலி சப்ரி ரஹீம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (புத்தளம்) மர்ஜான் பலீல் – பொதுஜன முன்னணி (களுத்துறை) நிப்புண ரணவக்க – பொதுஜன முன்னணி (மாத்தறை) ஆர். சம்பந்தன் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு (திருகோணமலை) குலசிங்கம் திலீபன் – ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (மன்னார்) சாரதி துஸ்மந்த – பொதுஜன முன்னணி (கேகாலை) உதயகாந்த குணதிலக்க – பொதுஜன முன்னணி (கேகாலை) எம்.எஸ். தௌபிக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (திருகோணமலை) அப்துல் ஹலீம் – ஐக்கிய மக்கள் சக்தி (கண்டி) ஆகியோர் உள்ளனர்.

இதேவேளை சபை அமர்வுகளில் குறைந்த நாட்களே கலந்துகொண்ட எம்.பிக்களின்பட்டியலிலும் தமிழ் உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். அவர்களில் இரா.சம்பந்தன், பிள்ளையான், ஜீவன் தொண்டமான், வினோ நோகராதலிங்கம், திகாம்பரம், சித்தார்த்தன், ஹலீம் மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ, டிரான் அலஸ், விமல் வீரவன்ச, மஹிந்த சமரசிங்க, திலும் அமுனுகம ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்திய அரசிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற இலங்கை பேச்சு !

எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலும், எரிபொருளைக் கடனாகப் பெற்றுக்கொள்ளது தொடர்பிலும் இந்தியா மற்றும்  ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி இந்திய அரசிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார் என்று செய்தி வெளிவந்துள்ளது.

நிலுவையில் உள்ள எரிபொருள் கொள்வனவுக்கான தொகையைச் செலுத்துவதற்கும் புதிதாக எரிபொருள் கொள்வனவு செய்வதற்குமே இந்தக் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டு முக்கிய உள்நாட்டு வங்கிகளில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களில் கூறப்பட்டுள்ளதைப் போன்று ஈரானிடமிருந்து கடன் கோரப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், “கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுடன் நாங்கள் கடன்கள் தொடர்பான விடயங்களைக்  கையாள்வோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய அரபு இராச்சியத்திடமிருந்து கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து பேச்சுகளை முன்னெடுத்துள்ளார்.

கடன் வசதியில் கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வது தொடர்பில் எமிரேட் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடனான பேச்சுகள் சாதகமாக முடிவடைந்துள்ளன எனவும் அமைச்சர் கம்மன்பில சில நாட்களுக்கு முன்னர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.”- கமலா ஹாரிசை பாராட்டிய நரேந்திர மோடி !

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார். அதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
அமெரிக்காவின் துணை அதிபராக உங்களை தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள். ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் எங்கள் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டபோது இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியதற்காக நான் அமெரிக்காவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான பங்காளிகள். அவர்கள் ஒரே மாதிரியான மதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான துடிப்பான மற்றும் வலுவான மக்கள் தொடர்பு எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்தார்.

“ஒரு போதும் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை.”- எம். கே.சிவாஜிலிங்கம்

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (24) காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக சந்திப்பின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை அரசுடன் பேசுவதால் இருந்தால் சர்வதேச மத்தியஸ்துடன் தான் பேச வேண்டும் என்றும் ஒரு போதும் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை. இலங்கை அரசுடன் பேச செல்வது என்பது தற்கொலைக்கு சமம் என்றும் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செயவோம்.”- மட்டக்களப்பில் நாமல் ராஜபக்ஷ உறுதி !

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார். இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை.”  என  இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ  தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜபக்‌ஷ குடும்ப பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வந்தாறுமூலை டயமன் விளையாட்டுக்கழக மைதானம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (23) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயேஇவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைகையில்,

தேவையற்ற விதத்தில் இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்க வேண்டிய அவசியம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. தெரியாமல் செய்த குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் நாட்டின் பெறுமதிளான சொத்துக்கள்.

“தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் அதிகமான விடங்களைச் செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல விடங்களைப் பின்பற்ற வேண்டும்.  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையில் இதுவரை 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பேஸ்புக்கில், புகைப்படங்களை பதிவிட்ட குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நீதித்துறையுடன் பேசி, அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும். குறித்த கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எமது அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கூச்சல் இடுவதானாலோ அல்லது ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதனால் எவ்விதமான பயனும் கிடைக்காது.  சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் தெரியவந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் அவ்வாறான நிலையில் சாட்சியமளிக்க நாங்களும் வருகிறோம். எமக்கு எதிராக கூச்சலிடுவது பொலிஸாரின் புத்தகங்களில் பதியப்படுவதில்லை. சட்டரீதியன நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முன்வரவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்கு உதவ முன்வருகிறது ஐரோப்பிய ஒன்றியம் !

இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்வதாகவும், இலங்கை அதை நோக்கி செல்வது ஒரு நல்ல விடயமாக கருதுவதாகவும், இந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்ய உதவ தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வின் போது பேசிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தயாராகும் இச்சந்தர்ப்பத்தில் சேதனப் பசளை பயன்படுத்துவது குறித்து அச்சத்தை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசியல் மயமான இலங்கையின் மத்திவங்கி.” – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை !

ஒரு நாட்டின் மத்திய வங்கி அரசியலாக்கப்பட்டால் அது பொருளாதாரத்தை பாதிக்கும் என ஐக்கிய
மக்கள் சக்தியின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அனைத்து நாடுகளும் சரியான உதாரணங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு சுயாதீன நபரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் ஸ்தாபக உறுப்பினர் என்றும், இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், அத்தகைய ஒரு நபர் தனது அரசியல் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம் !

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

100 மடங்கு காற்றில் பரவும் புதிய கொரோனா திரிபு !

கொரோனா வைரஸின் புதிய திரிபு காற்றின் மூலம் வேகமாகப் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விட அல்பா திரிபு 43 முதல் 100 மடங்கு அதிக வைரஸ்களை காற்றில் வெளியிடுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நோயாளர்கள் சரியான முறையில் முகக்கவசத்தை  அணிவதன் மூலம்  காற்றின் மூலம் பரவும் வைரஸ் துகள்களின் அளவை 50% வரை குறைக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

மெகசின் சிறைச்சாலையிலிருந்து க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய தமிழ் அரசியல் கைதி சித்தி !

கடந்த 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய இரு சிறைக்கைதிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சைக்கு, கொழும்பு மெகசின் மற்றும் வட்டரெக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களில், குறித்த இரு சிறைச்சாலைகளிலும் இருந்து 4 கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இவர்களில் மெகசின் சிறைச்சாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய தமிழ் அரசியல் கைதியொருவரும், மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை நற்பிரஜைகளாக்கி சமூகத்துக்கு விடுவிப்பது சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கியமான கடமைகளில் பிரதானமானதாகும்.

அதற்கமைய, சிறைக்கைதிகளின் திறமைகளை கண்டறிந்து அதனை மேம்படுத்த சிறைச்சாலைகளினுள் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் வளங்களைக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பரீட்சை திணைக்களம் என்பன இணைந்து, அங்குள்ள கைதிகளில் நன்நடத்தைகளை கொண்டுள்ள, புனர்வாழ்வளிக்கப்படக் கூடியவர்களுக்கு உயர்கல்வி செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படுவதுடன், சிறைச்சாலை வளாகத்திலேயே அவர்களுக்கான பரீட்சை நிலையங்களும் அமைத்துக்கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறு உயர்கல்வியை நிறைவுசெய்த கைதிகளில் சிலர் பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ளதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.