October

October

“ஒரே நாடு ஒரே சட்டம்“ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் !

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.

ஆளும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி இதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசேர தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், செயலணியின் உறுப்பினர்களாக 4 முஸ்லிம்கள் மற்றும் 9 சிங்களவர்களின் பெயர்கள் வர்த்தமானாயின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆளும் கட்சியிலுள்ள தமிழ் பங்காளி கட்சிகள் இதற்கான அனுமதியை கோரிய பின்னணியில், ஜனாதிபதி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“அரசாங்கத்துக்கு நம்பிக்கையாகவும் நன்றியுணர்வோடும் செயற்படுங்கள்.” – பிள்ளையான் மக்களிடம் கோரிக்கை !

“இந்த நெருக்கடியான சூழலில் நீங்கள் அரசாங்கத்துக்கு நம்பிக்கையாகவும் நன்றியுணர்வோடும் செயற்பட வேண்டும்.” என சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நிகழ்அவான்றில் கலந்து உரையாற்றியஆபாதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளில் ஒரு அமைச்சு கிடைத்து பணியாற்ற வேண்டும் என்று மக்களும் பெருமளவில் எதிர்பார்த்திருந்தார்கள். என்றாலும் நியமனம் வழங்கும் வேளையில் நான் சிறைச்சாலையில் இருந்த விடயம் அதன் பின் வந்த உட்கட்சிக் குழப்பங்கள், ஏனைய கட்சிகளிடமிருந்த பலவிதமான போட்டிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளும் கொரோனா தொற்று காரணமாக உருவான பொருளாதார நெருக்கடி பணவீக்கம் பொருள்களின் விலை அதிகரிப்பு, உள்நாட்ட உற்பத்தி விழ்ச்சி, ஜனாதிபதி எடுத்த பசுமைத்திட்டத்தில் வந்திருக்கும் இடர்பாடுகள், நாடு பொருளாதார வீழ்ச்சிப் பாதையில் போய்க்கொண்டிருக்கின்ற பொழுது ஆசிரியர்களுடைய ஆர்ப்பாட்டம் என்று பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதுதான் ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு வாக்களித்த, கட்சியுடன் நிற்கிறவர்களுக் கௌரவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக எமக்கும் 600 வேலைகள் தரப்பட்டது.

அதைவிட சிறியளவிலான வேலைகள் தரப்பட்டிருக்கின்றன. அதனை விடவும் 300 கிலோமீற்றர் வீதிகள் அபிவிருத்தி , கிராமப்புறங்களுக்கான வாழ்வாதாரத்திட்டங்கள் என பல வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் இந்த விவசாயப்பிரச்சினைக்கும், அத்தோடு வருமான வீழ்ச்சிக்கும் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில், அல்லது 2023ஆம் ஆண்டிலே விடிவு காலம் வரும் அதற்கு நாங்கள் எல்லோரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.

இருந்தாலும் ஊடகங்களும் எதிரணியினரும் மிகப்பெரிய விம்பத்தை உண்டுபண்ணி ஒரு அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்கிறார்கள். அது நடக்கலாம் நடக்காமல் போகலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஒரு தனித்தவமான கட்சியாக நாங்கள் எங்களது வளர்ச்சியை வளப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். அதில் மிக முக்கியமாக தமிழ்த் தேசியவாதிகளது செயற்பாடு. நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிண்ணையடியில் பேசியிருக்கிறார். அவர் கிட்டத்தட்ட ஒத்துக் கொள்ளாமல் ஒத்துக் கொண்ட விடயம் என்னவென்றால் இதைத்தானே பிள்ளையான் அவர்கள் கேட்டார்கள் இவர்கள் இப்பொது சொல்கிறார்கள். என்று என்னைச் சொல்லாமல் சொன்னார்.

ஆகையால் நாங்கள் 2008ஆம் ஆண்டு எடுத்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்திருக்கிறது. இடையில் அவர்கள் 2017அம் ஆண்டு வரைக்கும் இருந்த குழறுபடிகள் காரணமாக ஏதோ விரும்பியோ விரும்பாமலோ எங்களுக்குத் தேவையான ஆட்சியும் பொறுப்பும் அல்லது எங்களுக்கு வரவேண்டிய முதலமைச்சும் பொறுப்பும் மாற்றுச் சமூகத்தினருக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கொடிபிடிப்பதோ ஆர்ப்பாட்டம் செய்வதோ அல்ல. ஆகையால் எல்லா விதமான பிரச்சினைகளையும் எதிர் கொள்ளக்கூடிய வெல்லக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் வளர்த்துக் கொண்டு உறுதியான ஒரு மாற்றுச்சிந்தனையோடு பலமான சிந்தனை மாற்றத்தோடு உறுதியான எண்ணத்தோடு உழைக்க வேண்டும்.இந்த நெருக்கடியான சூழலில் நீங்கள் அரசாங்கத்துக்கு நம்பிக்கையாகவும் நன்றியுணர்வோடும் செயற்பட வேண்டுமென மட்டக்களப்பில் இடம் பெற்ற நிகழ்வில் இவ்வாறு சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவித்தார்.

இலங்கையை இலகுவாக வீழ்த்தியது அவுஸ்திரேலியா !

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் நேற்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 17 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமால் 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் அவுஸ்திரேலியா அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை அடித்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வேனர் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினரின் ஏற்பாட்டில் இலங்கையின் அனைத்து இடங்களிலும் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகங்களுக்கு முன்பாக இன்று மதியம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை காரியத்திற்கு முன்பாகவும் போராட்டம் இடம்பெற்றது.

கோடிக்கணக்கானோர் பாவிக்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டது – மார்க்ஜுக்கர்பெர்க் கூறும் பதில் என்ன.?

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின. இதனால் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
Facebook's new name is Meta - The Verge

இதையடுத்து தற்போது பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு Meta என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேஸ்புக் ஆண்டு கூட்டத்தில் பேசுகையில், சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆனால், அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பெரிய இரத்தினக்கல் !

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகிலேயே பெரிய இரத்தினக்கல் கொத்து, டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்த இரத்தினக்கல் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இடம்பெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கண்காட்சியில் இந்த இரத்தினக்கல் வைக்கப்படவுள்ளது.

உலகிலேயே மிக பெரிய இரத்தினக்கல் இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் கடந்த ஜுலை மாதம் 28ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
510 கிலோகிராம் எடையுடைய இந்த கல், சுமார் 100 மில்லியல் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் சேர்த்த சீனா – மக்கள் வங்கியின் பதில் என்ன ..?

இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கருப்பு பட்டியலிற்கு உட்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கும் சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகம் 13: மட்டக்களப்பு சிறை உடைப்பா? சிறைத் திறப்பா?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 13

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறம். நீங்கள் ஆயுதங்கள் எல்லாம் எடுத்து சேகரித்திருந்தா லும் கூட, ஆயுதங்கள் எதுவும் பெரிசா பயன்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். சிறைக்குள் என்ன நடந்தது?

அசோக்: ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. உள்ளுக்குள்ள ரிவால்வர் தான் அனுப்பப்பட்டது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் தங்களுக்கு தேவையானதை அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். புளொட்டில் இரண்டு ரிவால்வர் அனுப்பப்பட்டது. வெளியில கூடுதலா சொட் கண்கள்தான். அடுத்தது பால் ரின்னில் கிரானைட் மாதிரி ஜலற்றின் வைத்து செய்யப்பட்ட திரிவைத்த எறி குண்டு. திரியில் நெருப்பு பற்ற வைத்து எறியவேண்டும். ஆனால் இவை எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரவில்லை.

சிறைக்குள் இருந்தஎல்லோரும் கூட்டாக இணைந்துதான் முயற்சி எடுத்தாங்க ராஜன் டக்ளஸ் தேவானந்தா, பனாகொடை மகேஸ்வரன் போன்றவங்க முக்கியமானவங்க. பலருக்கும் பொறுப்புக்கள் பிரித்துப் பிரித்து கொடுகப்பட்டன. உதாரணமாக டேவிட் ஐயாவிடமும் , டொக்டர் ஜெயகுலரா ஜாவிடம் மும் கட்டிப்போடப்படும் ஜெலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஒட்டும்வேலை பொறுப்பு கொடுகப்பட்டது. இப்படித்தான் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தது.

தேசம்: ராணுவ பாதுகாவலர்கள் மாறுகிற நேரத்தில்தான் சிறை உடைப்பு நடந்தது..

அசோக்: ஓம், . குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவைதான் சிறையை சுற்றியுள்ள வீதிகளில் பொலிஸ் அல்லது இராணுவம் ரோந்து வரும் . அந்த இடைவெளிக்குள் சிறை உடைப்பு செய்யவேண்டும்.

அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ள நடந் ததால எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்ல. சிறைக்குள்ள பிரச்சனையில்லை. தெரிந்த ஜெயிலர்ஸ் தானே அதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை.

தேசம்: அப்போ சிறைப் பாதுகாவலர்கள் சிறைக் கதவுகளின் சாவிகளை உங்களுக்குத் தந்து…..

அசோக்: இல்லை இல்லை உள்ளுக்க ரெண்டு மூன்று ஜெயிலர்ஸ் தான் சப்போர்ட் பண்ணினார்கள். மற்ற ஜெயிலலர்களை பிடித்து கட்டிப்போட்டு அவர்களிடமிருந்த சாவிகளை பறித்து ஒவ்வோரு செல்களும் திறக்கப்பட்டன. அதனோட நாங்க செய்த சாவிகளும் பயன்படுத்தப்பட்டன முழு ஜெயிலர்சையும் சப்போர்ட் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்க இயலாதுதானே.

தேசம்: எல்லாருமே தமிழ் காவலர்களா

அசோக்: சிங்கள காவலர்களும் இருந்தவங்க. சிறை உடைக்கப்பட்டு எல்லாரும் வெளியேறியவுடன், அங்கு சிறை வைக்கப்படடிருந்த சாதாரண கைதிகள் அவங்களும் வெளியேறி தப்பிட்டார்கள். அரசியல் கைதி அல்லாத, வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதிகள் முழுப்பேரும் வெளியேறி போய்விட்டார்கள். தமிழ்க் கைதிகளுக்கு சிறை இருந்த இடம் பற்றி, அந்த சுற்றாடல் பற்றி ஓரளவு தெரியும். அவங்க தப்பி போயிற்றாங்க. சிங்களக் கைதிகளுக்கு இடம் தெரியாது. மட்டக்களப்பு ஒரு தீவு. மேலிருந்து பார்த்தீர்களென்றால் மட்டக்களப்பு என்பது வாவிகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். மட்டக்களப்பை புளியந்தீவு என்றும் சொல்வதுண்டு. மட்டக்களப்பை ஏனைய பிரதேசங்களோடு இணைப்பது பாலங்கள்தான்.

தேசம்: தமிழ் கைதிகள் எல்லோரும்…

அசோக்: தமிழ் கைதிகள் பாலம் எல்லாம் தாண்டி தப்பி போயிட்டாங்க. தோணிகள் பயன்படுத்தி ஆற்றைக் கடந்தும் தப்பிவிட்டாங்க. சிங்கள சிறைக் கைதிகளுக்கு ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. போலீஸ் அவங்க முழுப் பேரையும் அரெஸ்ட் பண்ணி விட்டது.

தேசம்: வெளியேறின அரசியல் கைதிகளை எப்படி வெளில கொண்டு போறீங்க

அசோக்: அரசியல் கைதிகளை வெளியில கொண்டு போறதுக்கு ஈபிஆர்எல்எஃப் தோழர் குன்சி தங்களுக்குரிய ஏற்பாட்டை செய்திருந்தார். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தங்களுக்குரிய ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார். புளொட்டுக்கான ஏற்பாட்டை பார்த்தன் செய்தது. பனிச்சம் கேணியிலிருந்து, இந்தியா கொண்டு போற வரைக்கும் எல்லா பாது காப்பையும் தோழர் பார்த்தன்தான் செய்தார்.

தேசம்: அதாவது சிறை உடைத்த பிறகு வெளியில வந்தவர்களைக் கொண்டு போற வேலைகளைப் பார்த்தன் செய்தது.

அசோக்: பனிச்சம்கேனியிலிருந்து இருந்து திருகோணமலைக்கு கொண்டு போய், அங்க இருந்து இந்தியாவுக்கு அனுப்புற வேலைகளை பார்த்தன், ராதாகிருஷ்ணன், ஜெயகாந்தன், செல்வன் இவங்கதான் செய்தாங்க. நேரடியாக இந்தியா போகவில்லை. பல இடங்களில் தங்க வைக்கப்பட்டு, கொஞ்ச கொஞ்ச பேராக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டாங்க. மாதகல் ஊடாகத்தான் அனுப்பப்பட்டாங்க. இதற்கான போக்குவரத்து பொறுப்புக்களை தோழர் குமரன் செய்தார். குமாரதுரை என்று ஒருத்தர் இருந்தவர். கிளிவெட்டியை சேர்ந்தவர். அவருடைய உதவியும் இருந்தது.

டேவிட் ஐயா சிறைக்குள்ளிருந்து எல்லாரும் போகேக்க அவரால வெளியேற முடியவில்லை. சிறையில் இருந்து வாகனத்தில் இவங்க எல்லாரும் ஏறும்போது, அவரைக் கவனிக்கவில்லை. இவர் ரோட்டில நின்றுட்டார். இவங்க எல்லாரும் போனதற்குப் பிறகு தனிமைப்பட்டுட்டார். பிறகு ஜெயிலில் இருந்து தப்பிய சாதாரண கைதிகள் இரண்டு பேர் , டேவிட் ஐயாவை தற்செயலா கண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் டேவிட் ஐயாவை கொண்டு பாதுகாப்பா வச்சு, ஒரு பாதரிட்ட ஒப்படைத்து பாதர் தான் அனுப்பி வைத்தவர்

தேசம்: இந்தியாவுக்கு அனுப்பி வைத்தவரோ?

அசோக்: இல்ல எங்கட தோழர்களிடம் ஒப்படைத்து நாங்க பொறுப்பெடுத்தம்.

தேசம்: இந்த சிறை உடைப்புக்கு பிறகு உங்களுக்கு உதவி செய்த தமிழ் சிறைக்காவலர்கள் இருக்கினம் தானே அதுக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா

அசோக்: ஒரே ஒருத்தருக்கு பிரச்சனை வந்தது, கிருஷ்ணமூர்த்தியை ஐடிடென்டி பண்ணிட்டாங்க. அவர் பிறகு புளொட்டுக்கு வந்துட்டார். பிறகு வெளியிலிருந்து உதவி செய்த மாசிலாமணி அவருக்கும் பிரச்சினை வந்து, அவரும் திரும்ப புளொட்டுக்கு வந்துட்டார். இவர்கள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன்.

அதுல என்னை விசாரித்த டிஎஸ்பி மகேந்திரன் அவரோட உதவியும் கொஞ்சம் இருந்தது. இல்லாட்டி காந்திய வாகனம் எல்லாம் உடனே பிடிபட்டிருக்கும். பிறகு சிங்கள பொலிசாருக்கு தெரிய வந்து, காந்தீயமும் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.

தேசம்: சிறை உடைப்பில் காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது

அசோக்: காந்திய வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டது. வாகனங்களை பயன்படுத்திட்டு, அந்தந்த இடத்தில் விட்டுட்டு போயிட்டாங்க. அவற்ற திருப்பி கொண்டு வரவில்லை. அடுத்த நாள் போலீஸ் போகும்போது, டிஎஸ்பி மகேந்திரனுக்கு தெரியும் இது காந்திய வாகனங்கள் என்று. அவர் காந்தியதுக்கு அறிவித்து உடனடியாக வாகனங்களை எடுக்க சொல்லி, பிறகு வாகனங்களை அந்த இடத்திலிருந்து எடுத்தார்கள்.

தேசம்: வேற அமைப்புகளில் இருந்த முக்கியமான ஆட்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? குறிப்பாக விடுதலை புலிகள் இருந்த முக்கியமான ஆட்கள்

அசோக்: சென்ற அத்தியாயத்தில இதுபற்றி கதைத்திருக்கிறம். விடுதலைப்புலிகள் என்று அதன் ஆதரவாளர்கள் என்று நித்தியானந்தன், நிர்மலா , டாக்டர் ஜெயகுலரா ஜா பாதர் சிங்கராயர் பாதர் சின்னராஜா, பாதர் ஜெயதிலகராஜா இவங்க இருந்தாங்க. வேறு ஆட்கள் என்று கோவை மகேசன் டாக்டர் .தர்மலிங்கம் பெயர்கள் ஞாபகம் இல்லை இருந்தாங்க. இவங்க முன்று பேரும் சிறை உடைப்புக்கு முன்னரே பிணையில் வெளியில் வந்துட்டாங்க. நான் நினைக்கிறேன் பாதர் சிங்கராஜரும் பிணையில் வெளியில் வந்துவிட்டார் என விடுதலைப் புலிகளுக்கு தாங்கள் தனித்துவமாக சிறை உடைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது என்று நினைக்கிறேன். சிறை உடைப்பில் அவங்கள் சப்போர்ட் பண்ணல.

தேசம்: இவர்களெல்லாம் எப்படி புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள் ? . இவர்கள் சிறை உடைப்பில் வெளியில் வரவில்லையா?

போராட்ட வரலாற்றை நீங்கள் அவதானித்தால் புலிகள் மோசமான கருத்தியல் கொண்டவர்கள். வலது சாரிய நிலவுடமைச்சிந்தனைகளின் எல்லா எச்சங்களையும் கொண்டவர்கள்.முற்போக்கான சிந்தனைகள் எவையும் அவர்களிடம் இருந்ததில்ல. ஆனா இந்த பாதர்களும், நிர்மலா , நித்தியானந்தன் சேர் போன்றவர்கள் புலிகளைத்தான் அதரிச்சாங்க. எல்லாம் வர்க்க கூட்டு. இதைப்பற்றி முன்னர் சொல்லியிருக்கிறன்.

நிர்மலா தவிர்ந்த மற்ற இவங்க எல்லோரும் சிறை உடைப்பில் வெளியில் வந்துட்டாங்க. நிர்மலா வரவில்லை. . புலிகள் சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு செல்லும் பொறுப்பை பரமதேவா, புளோட் வாசுதேவாவின்ற தம்பி, இவர் புலிகளில் இருந்தார். மட்டக்களப்பு சிறையில் இருந்து சிறை உடைப்புக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்திருந்தார். இவர்தான் பொறுப்பெடுத்தவர். இவர்களை பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பியதில் தம்பிரா ஜா அண்ணரும் முக்கியம் என நினைக்கிறன். இப்போது லண்டனில் இருக்கிறார்.சிறைக்குள் நிர்மலாவை காப்பாற்றி வெளியில் கொண்டு வரும் பொறுப்பை எடுத்தவர் புளொட் வாமதேவன். அவர் விட்ட தவறினால் , அவங்க வெளியேற முடியல்ல.
பிறகுதான் புலிகள் தனியாக அவரை மீட்டாங்க.

தேசம்: அதற்குப் பிறகுதான் உங்கட மத்தியகுழு உருவாக்கப்பட்டது.

“தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே “ஒரு நாடு ஒரு சட்டம்“ செயலணி.” – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியின் உருவாக்கம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் இவ்வாறான தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவினால் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலணியின் உருவாக்கத்திற்கு  எதிர்கட்சிகள், மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

வட மாகாணத் தமிழ் மக்களுக்கு என தேசவழமை சட்டம் டச்சுக் காலத்தில் இருந்து சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலில் ‘ஒரு நாடு ஒரு சட்டமானது தற்போது வலுவில் இருக்கும் றோம டச்சுச் சட்டம், ஆங்கிலச் சட்டம், கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியவற்றைப் புறக்கணித்து இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாகக் கணித்து ஒற்றைச் சட்டத்தைக் கொண்டு வர முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கு மாகாணத்தில் இருக்கும் அவர்களுக்குரிய சட்டத்தை மாற்றுவது அல்லது தொடர்ந்து வைத்திருப்பது அவர்களின் பொறுப்பு எனவும் அது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பல்ல எனவும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வடகொரியாவில் மிகப்பெரும் பஞ்சம் – குறைவாக சாப்பிடுமாறு கிம் ஜோங் உன் கோரிக்கை !

உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ‘விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாக உள்ளது’ என கிம் கூறியுள்ளார்.

பொருளாதாரத் தடைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வடகொரியா, அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீனாவுடனான தனது எல்லையை மூடியது. இதனால், வடகொரியாவில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால், அந்நாட்டில் வசிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இதனிடையே 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சுங்கச்சாவடிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே அரசாங்கம் தங்களுக்குத் தேவையான தானியங்களை தாங்களே உற்பத்தி செய்யுமாறு ஊக்குவிக்கிறது.

இந்தநிலையில், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையம், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்கியோங்கில் ஆபத்தான நிலைமை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தியது.

அணுசக்தி மற்றும் ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேசத் தடைகளால் ஏற்கனவே நலிவடைந்துள்ள தனிமைப் பொருளாதாரத்தின் நெருக்கடி பற்றிய கவலைகளுக்கு மத்தியில், இந்த சந்திப்பு வந்தது.

முன்னதாக, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம், ‘வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஒகஸ்ட் தொடங்கி ஒக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். இந்த ஆண்டு மட்டும் 860,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும்’ என எச்சரித்திருந்தது.

1990ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் பிரிந்தது. அதுவரையில் சோவியத் ஒன்றியத்திடம் இறக்குமதி பொருட்களுக்காக பெருமளவில் நம்பியிருந்த வடகொரியா பெரும் பஞ்சத்தை சந்தித்தது. இந்த பஞ்சத்தின்போது மக்கள் எலிகளையும் புல்லின் சாரையும் உண்டனர்.அத்துடன், சுமார் 3 மில்லியன் வட கொரியர்கள் உயிரிழந்தனர்.