02

Monday, October 18, 2021

02

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.” – இரா. சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும், இதையடுத்துக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மூவரும் கடந்த புதன்கிழமை கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சு நடத்தியுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதைத் தெளிவுபடுத்தும் வகையில் சம்பந்தன் இன்று மாலை விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களை வகிக்கும் அங்கத்தவர்கள் பொதுவாக வடக்கு, கிழக்கு மாகாண மாவட்டங்களில் வசிக்கின்றார்கள். கொரோனா வைரஸின் தாக்கத்தால் தனியாகவும் குழுக்களாகவும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்குத் தடையாக அமைந்துள்ளது. இதன் விளைவாக சில விடயங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமை உருவாகியுள்ளது.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அரசமைப்பினூடாகப் பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிகப் பிரதானமான குறிக்கோளாகும். இந்த நாட்டிலே தமது பூர்வீகத்தைக் கொண்டுள்ள மக்களின் இறையாண்மையானது முழு நாட்டிலும் அவர்களுக்கான ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்கும் அவர்களின் வரலாற்று ரீதியான பூர்வீகம் மற்றும் இலங்கை அரசும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும், இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலும் அமையப்பெற்றதாகும்.

இந்த அடிப்படை விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.ஏனைய சில விடயங்கள் தொடர்பில் ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம்பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளன. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாகக் கூறப்படுகின்றது. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையைப் பேணுவது அடிப்படையானதாகும். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்க வேண்டும் மாறாக அவர்களைக் குழப்பக்கூடாது.

ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் சமத்துவம், நீதி மற்றும் சுயகௌரவம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டும் எமது குறிக்கோளில் உறுதியாகப் பயணிப்பதற்குத் தெளிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

சேதன பசளையை இறக்குமதி செய்ய தீர்மானம் !

பெரும் போக விவசாயத்திற்கு தேவையான  சேதன பசளையை இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தரமற்ற உரங்களை ஒருபோதும் இறக்குமதி செய்யமாட்டோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனாவில் இருந்து செய்யப்பட்ட சேதன பசளையின் மாதிரிகளில் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் விடயம்  தொடர்பில் சீன நிறுவனம் வருத்தம் வெளியிட்டள்ளதுடன், இறக்குமதி செய்யப்பட்ட சேதன பசளை மாதிரிகளை மீள பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையின் மண்வளத்திற்கும், கால நிலைக்கும் பொருத்தமான  சேதன பசளையை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.இம்மாதம் 15 ஆம் திகதி  பெரும்போக விவசாய நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.  பெரும்போகத்திற்கு தேவையான  சேதன பசளையை  இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து  இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆரியகுள  பகுதியில் பௌத்த விகாரை – எங்களை மத ஒற்றுமையுடன் செயற்பட விடுங்கள் என நாக விகாரையின் விகாராதிபதி கோரிக்கை !

தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை  குழப்பி அரசியல் லாபங்களுக்காக  மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஆரியகுள  பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக   ஊடகங்களில் வந்த செய்தி தொடர்பில்  கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறிய போது ,

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில்   ஆரிய குள அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதில் புத்த விகாரை அமைக்க முயற்சி என்ற செய்தியினைப் பார்த்தேன் அந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. நாக விகாரைக்கு அண்மையில்  சுற்றுலா மையத்தினை அமைப்பது தொடர்பில் எனது அதிருப்தியை வெளியிட்டுருக்கின்றேன். குறித்த அபிவிருத்தி தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்க படவில்லை இது ஒரு புனித பூமி. இந்த குளத்தில்  சுற்றுலா ஹோட்டலை குளத்தின் நடுவில் அமைப்பதை நிறுத்தி இந்து  மற்றும் ஏனைய மதத்தவர்கள் ஒன்றிணைந்து செயற்பட கூடியவாறு ஒரு நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால் பத்திரிகைகளில் புத்தர் சிலை அமைக்க போகின்றோம் என செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நாங்கள் அவ்வாறு ஒன்றும் செய்வதற்கு எண்ணம் இல்லை.  ஒரு தியான மண்டபமாக மாற்றுவதற்கு தான்  யோசித்துள்ளோம்.  புனித பிரதேசம் என்பதால்  குளத்தின் நடுவில் ஒரு தியான மண்டபத்தை அமைத்தால் அது அனைத்து மதத்தினருக்கும் உதவியாக இருக்குமென்பது நிலைப்பாடு.

இந்து மதமும் பௌத்த மதமும்சர்வமத குழுவாக இணைந்து யாழில் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம். விசேடமாக ஆரியகுளம் பகுதியில் அண்மையில் சைவ ஆலயம் உள்ளது. அதேபோல் அண்மையில் பௌத்த விகாரையும் உள்ளது.   இந்து மக்கள் வேறு மத  மக்கள் என்று பார்க்காது அனைவரும் இணைந்து செயற்படுகின்றோம் .நாக விகாரை நுழைவாயிலில் பார்த்தால் தெரியும் இந்து மத  விசேட தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளும் இடம்பெறுகின்றது இந்து மதத்தில் முழுமுதற்கடவுளின் சிலையும்  வைக்கப்பட்டு பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

நாம் கூறுவது என்னவென்றால் இந்த பகுதியை ஒரு புனித பிரதேசமாக மாற்ற வேண்டும். விகாரையுடன்  சம்பந்தப்பட்ட குளம் என்பதால் எம்முடனும் கலந்தாலோசித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை மாநகர முதல்வர் அவர்களை நேரில் கண்டபோது ஏன் குள அபிவிருத்தி  தொடர்பாக எம்முடன்  கலந்துரையாடவில்லை என கேட்டேன். அவர் கூறினார் தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக நாங்கள் யாருடனும் கலந்துரையாட வில்லை என.

எனவே நான் ஒன்றை கூற விரும்புகின்றேன் சுற்றுலா மையமாக மாற்றினால் இது ஒரு புனித பிரதேசமாக இருக்காது. எனவே  இந்து பௌத்த நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு தான்  முதல்வருக்கு கோரிக்கை விடுத்து இருக்கின்றேன். நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம் நேற்று கூட அனைத்து மத தலைவர்களும் இணைந்து  பூசை வழிபாட்டில் கலந்து கொண்டோம்.

எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களும் ஒன்று இணைந்து செயற்படுகின்றோம். சிலர்  தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை  குழப்பி விட யோசிக்கிறார்கள் மக்களை தூண்டி விடுகிறார்கள் எனவே இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் நாங்கள் இந்த நாட்டில் நல்லிணக்கத்தோடு சமாதானமாக வாழ  அனைவரும் முயற்சிக்கின்றோம்.

எனவே ஒரு சிலரின் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த  வேண்டும் என்றார்.

மூன்று வயது சிறுவனை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தாய் !

மூன்றரை வயதுடைய சிறுவனை பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேவல்தெணிய பிரதேசத்தில் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் சிறுவனின் தாயும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படும் போது சிறுவனின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 06 கிராம் போதை மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விடைபெற்றார் சங்கா – MCC கிரிக்கெட் கிளப்பின் 234 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் தலைவர் !

பழம்பெரும் MCC கிரிக்கெட் கிளப்பின் 234 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் தலைவராக இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட்டில் ஆஷஸ் வென்ற முன்னாள் தலைவர் கிளேர் கோனர் லோர்ட்ஸில் பதவியேற்றார்.

ECB யில் மகளிர் கிரிக்கெட் இயக்குநராகவும் உள்ள கோனார், 2020 ம் ஆண்டில் கிளப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் கோவிட் -19 காரணமாக அவரது பதவி ஒரு வருடம் தாமதமானது, அதன்காரணத்தால் குமார் சங்கக்கார குறித்த பதவியில் தொடர்ந்தார்.

“எம்சிசி தலைவராக இருப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்,” என் வாழ்நாள் முழுவதும் நேசித்த விளையாட்டின் நலனுக்காக, இந்த மகத்தான முக்கிய பங்கை வழங்குவதற்கு என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என குமார் சங்கக்காரா நன்றி பாராட்டினார் .

“அடுத்த 12 மாதங்களில் கிளப்பின் தலைமை மற்றும் குழுக்களுடன் ஆதரவளிக்கவும், பணியாற்றவும் எனது அனுபவ வரம்பை கொண்டு வர முயற்சிப்பேன். MCC அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என புதிய தலைவர் கிளேர் கோனர் தெரிவித்தார்.

கோனர் தனது 19 வது வயதில் 1995 இல் இங்கிலாந்து அணிக்கு அறிமுகமானார், மேலும் 2000 ஆம் ஆண்டில் தலைவர் பொறுப்பை ஏற்றார், ஒரு வருடம் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லார்ட்ஸில் இங்கிலாந்தை வழிநடத்தினார். இடது கை சுழற்பந்து வீச்சில் ஆல்-ரவுண்டரான கானர், இங்கிலாந்து அணிக்கு 42 ஆண்டுகளில் முதல் ஆஷஸ் வெற்றிக்காக வழிநடத்தி, 2005 ல் 1-0 தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர் என்பதும் சிறப்பம்சமாகும். இங்கிலாந்தின் கேப்டனாக ஆறு வருடங்கள் நீடித்ததன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கையில் தடுப்பூசி பெற தயக்கம் காட்டும் இளைஞர்கள் !

20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட 3.3 மில்லியன் இளைஞர்களில் மிக குறைந்த அளவிலானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்காக இளைஞர்களும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் எடுக்கப்பட்ட ஆபாச காணொளி – காதல் ஜோடிக்கு சிறைதண்டனை !

பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் எடுக்கப்பட்ட ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்ட ஜோடிக்கு ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைதண்டனை விதித்து பலாங்கொடை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை 10,800 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும், மஹரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆணொருவருமே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்தே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையல் விதைகள் இறக்குமதியை நிறுத்த தீர்மானம் !

நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யவும் இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான கலப்பின விதைகளை உற்பத்தி செய்வதற்காக பொது மற்றும் தனியார் துறைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஆண்டுதோறும் 28 வகையான விதைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதற்காக அரசாங்கம் ஆண்டுக்கு 2000 மில்லியன் ரூபாய் செலவிடுவதாகவும் தெரியவந்தது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் விலை அதிகம் என்பதால் விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

எனவே விதைகள் இறக்குமதியை நிறுத்த விவசாயத்துறையும் தனியார் துறையும் ஒப்புக்கொண்டதாகக் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கூறினார்.

மேலும், 100 கிராம் மிளகாய் விதைகள் 1330 ரூபாய்க்கும் 100 கிராம் லீக்ஸ் விதைகள் 2300 ரூபாய்க்கும் 400 கிராம் பீட் விதைகள் 4000 ரூபாய்க்கும் கிடைக்கின்றன என்றும் கூறப்பட்டது.

இந்த விலையில் குறித்த விதைகளை விவசாயிகள் வாங்க முடியாது என்பதால் இறக்குமதியாளர்கள் இந்த விதைகளின் விலையை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.