03

Monday, October 18, 2021

03

வவுனியாவில் வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசம் !

வவுனியா – கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன் வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையின் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குழந்தை இல்லாததால் தம்பதியினரிடையே பிரச்சினை – மனைவியை கொலை செய்த கணவன் !

குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் களவஞ்சிக்குடி பகுதியில் பதிவாகியுள்ளது.

மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கணவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கணவன் கடந்த 14 ஆம் திகதி வௌிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவர் குரல் பதிவு ஒன்றின் மூலம் மனைவியை கொலை செய்வதாக தெரிவித்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு திருமணமான 8 வருடங்கள் ஆவதுடன் 7 வருடமாக கணவர் வௌிநாட்டில் இருந்ததாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் களவஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கருக்கலைப்பு உரிமை பேரணி !

கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கருக்கலைப்புக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தும் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு புதிய சட்டத்திற்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.

1973 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கபட்டுள்ளது.

இந்நிலையில் அதனை தொடருமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

“எனக்கு நீதி கிடைக்காவிட்டால் அரசிலிருந்து விலகுவேன்.” – அமைச்சர் பந்துல

அமைச்சர் பந்துல தனதுக்கு நீதி கிடைக்காது விட்டால் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும்  அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும் பந்துல தெரிவித்துள்ளார்.

தனது நற்பெயரையும் அரசியல் வாழ்க்கையையும் சேதப்படுத்திய தாகக் கூறி முன்னாள் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (சிஏஏ) உறுப்பினர் துஷான் குணவர்தனவுக்கு ரூபா 1 பில்லியன் இழப்பீடு கோரி பந்துல கடிதம் அனுப்பியுள்ளார்.

வெள்ளைப்பூடு இறக்குமதி மற்றும் விநியோகத்தில் மோசடி நடந்ததாக அவர் கூறிய குற்றச்சாட்டால் தனது நற்பெயரும் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித் துள்ளார்.

அந்தப் பணத்தைக் கொடுக்காவிட்டால், அதை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மோசடி தொடர்பாக தனது பெயரைப் பயன்படுத்தி அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் தனக்கு நீதி வழங்காவிட்டால் அரசியலிலிருந்து விலகுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் உட்பட தனது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இந்த மோச டியில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தான் பாராளு மன்றத் திலிருந்து இராஜினாமா செய்வது மட்டுமல்லாமல், இலங்கை அரசியலில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறினார்.

“இந்த அரசை எந்தவொரு சூழ்ச்சியாலும் கவிழ்க்க முடியாது.” – பஷில் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு நிலையான அரசு. இந்த அரசை எந்தவொரு சூழ்ச்சியாலும் கவிழ்க்க முடியாது. அரசுக்குள் எவரும் இருக்கலாம் ,எவரும் வெளியேறலாம்.என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்படுவதற்கு ‘மொட்டு ‘கூட்டணி அரசிலுள்ள பங்காளிக் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசுக்கு எதிராகப் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையிலேயே அமைச்சர் பஸில் ராஜபக்ச ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எமது அரசில் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமிருக்கின்றது. எவரும் அரசை வாழ்த்தலாம், விமர்சிக்கலாம்.

ஆனால், அரசை வீழ்த்தலாம் என்று உள்ளேயும் வெளியேயும் யாரும் சூழ்ச்சி வகுத்தால் அது ஒருபோதும் வெற்றியளிக்காது.

அரசுக்குள் எவரும் இருக்கலாம்,எவரும் வெளியேறலாம்,எவரும் புதிதாக இணையலாம், எமது கதவு எப்போதும் திறந்திருக்கும்.

ஆனால், அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவோருக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம் – என்றார்

ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் டொலர் நிதியுதவி பெற இலங்கை தீர்மானம் !

இலங்கையின் எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்ப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டவுள்ளது. குறித்த நிதியுதவிக்கு ஓமான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் இந்த திட்டத்தை தொடர கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வரைபில் உள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலும் நிபந்தனைகளை முன்வைக்கப்பட்டுள்ளதாகவம் அறியமுடிகின்றது.

12 மாத காலத்திற்கு எரிபொருளை வாங்கும் வகையில் 3.6 பில்லியன் டொலர் நிதி உதவி இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவுடன் எரிபொருள் கொள்வனவிற்காக நிதியுதவியை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வழமை போல இறுதி கட்டத்தில் சொதப்பியது பஞ்சாப் கிங்ஸ் – அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் !

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. ஆர்.சி.பி. நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பொட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெங்களூர் சார்பில் விராட் கோலி 25 ஓட்டங்கள் , படிக்கல் 40 ஓட்டங்கள், டி வில்லியர்ஸ் 23 ஓட்டங்கள் என்றவாறு பெற்றுக்கொண்டனர். இன்றைய போட்டியிலும் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 33 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ஓட்டங்களை எடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் முகமது ஷமி, ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
May be an image of 3 people, people playing sport and text
பின்னர் 165 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஸ்கோர் 10.5 ஓவரில் 91 ஓட்டங்கள் இருக்கும்போது கே.எல். ராகுல் 35 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரண் 3 ஓட்டங்களிலும் ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் பஞ்சாப் அணியால் வெற்றி நோக்கி செல்ல முடியவில்லை.
கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் 12 ஓட்டங்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

“தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்கப்பெறவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” – வியாழேந்திரன்

“கிராமிய பொருளாதாரத்தை கட்டமைத்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தினை விருத்தி செய்யும் வகையிலான விடயங்களை உயர்த்துவதற்கே அதிகளவான நிதி எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவிருக்கின்றது.” என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்  தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

”கொரோனா வைரசின் தாக்கமே பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. இது எங்களை விட வளர்ச்சியடைந்த நாடுகளிற்கே சவால விடயமாக இருக்கின்றது. எனவே தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமை பெறுகின்றபோது கொவிட் தொற்றிலிருந்து விடுபட முடியும். அதன்போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. இதேவேளை கிராமிய பொருளாதாரத்தை கட்டமைத்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தினை விருத்தி செய்யும் வகையிலான விடயங்களை உயர்த்துவதற்கே அதிகளவான நிதி எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவிருக்கின்றது.

அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் புறம்தள்ளவில்லை. அதிலே நியாயம் இருக்கின்றது. ஆயினும் தற்போதைய நெருக்கடியான சூழலில் இவர்களுடைய பிரச்சனையை அணுகுவது சவாலானவிடயம். ஆயினும் அதனை தீர்ப்பதில் அரசாங்கம் கவனமாக இருக்கின்றது. பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அது சுமூகமாக தீர்க்கப்படும். இப்போதுள்ள எதிர்க்கட்சியினர் கடந்த ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தினை அழித்தவர்கள். வடகிழக்கு தமிழ்மக்கள் அந்த ஆட்சிக்கு கூடுதலான ஆதரவை வழங்கினார்கள். அதுபோல தமிழ் அரசியல் தலைமைகளும் அந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினையே முன்னெடுத்திருந்தனர். ஆனால் வடகிழக்குமக்கள் அபிவிருத்தி சார்ந்து எந்த முன்னேற்றத்தினை அடைந்தார்கள் என்பதை நாங்கள்சிந்திக்கவேண்டும்.

சில நாடுகளில் ஆளும் கட்சிகள் நல்லதை செய்தால் எதிர்க்கட்சிகள் அதனை பாராட்டும். இங்கு அப்படி இல்லை. தடுப்பூசி வருவதற்கு முன்னர் அதனை கொண்டுவரவில்லை என்று எதிர்ததார்கள். அதனை கொண்டுவந்த பின்னரும் விமர்சிக்கின்றார்கள். ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் பிரச்சனை, கொடுக்காவிட்டாலும் பிரச்சனை. இவர்களது நோக்கம் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மாத்திரமே. நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை. கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வரும்போது பலகேள்விகளிற்கான பதிலை அரசாங்கம் வழங்கும்.

தமிழ்மக்களின் பிரச்சனையை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். பாதிப்பை மிக்ககூடுதலாக சந்தித்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி நியாயம் கிடைக்கப்பெறவேண்டும் என்பதில் நாங்கள் இப்போதல்ல பலவருடங்களாக எமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அவர்களுக்கு செய்யவேண்டிய ஆற்றக்கூடிய உடனடிக்கருமங்களை நாங்கள் செய்யவேண்டும். பாதிப்புக்குள்ளான மக்களுடைய நீதி நியாயம் அவர்களது எண்ணங்களுக்கும், எதிர்பார்ப்புக்களும் ஏற்ப கிடைக்கப்பெறவேண்டும்”  என்றார்.