07

07

பைசர் போட்டால் மட்டுமே வாருங்கள் – இலங்கை பணியாளர்களுக்கு மத்தியகிழக்கு நாடுகள் தடை !

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் சைனோபோர்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்களுக்கு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

எனினும் இவர்கள் தமது நாட்டுக்கு வரவேண்டுமாயின் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சுமார் 20,000 பேர் வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் முதல் கட்டமாக சுமார் 8,000 பேருக்கே பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஏனையோருக்கும் வழங்குவதற்காக பைசர் தடுப்பூசியை பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

“ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டதால் முதலாளிமார் தொழிலாளர்களை பழிவாங்குகின்றனர்.” – அமைச்சர் வாசுதேவ நாயணக்கார

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டதால் முதலாளிமார் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.அதனால் கம்பனிகாரர்களின் நடவடிக்கைக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து்ளதாக  அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தேருநர்களை பதிவு செய்தல் மற்றும் ஊழியர் சகாய நிதியம் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அடிப்படை சம்பளத்தை மையமாகக்கொண்டு தான் வாழ்க்கைச் செலவை கணிக்கவேண்டும். 2019ஆம் ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் முறைசார் தனியார் துறையின் அடிப்படைச் சம்பளம் 4.2 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. முறைசாரா தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளமும் 2.7 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இதன்மூலம் வாழ்க்கைச் செலவு குறித்த அளவிட அடிப்படைச் சம்பளம் எவ்வளவு அவசியம் என்பதை இதன்மூலம் உணர்ந்துக்கொள்ள முடியும்.

அதனால் தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நாங்கள் தெரிவித்து வருகின்றோம். அதன் பிரகாரமே தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. முதலாளிமாருடன் இதுதொடர்பாக பல சுற்று பேச்சுவார்தை மேற்கொண்டபோதும் அவர்கள் இதற்கு இணங்கவில்லை. அதனால் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக தீர்மானிக்கப்பட்டது. என்றாலும் கம்பனிகாரர்கள் அதனை வழங்குவதில்லை. அதற்கு பல நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.

அதேபோன்று 2020 மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த சம்பளத்தை 500 ரூபாவில் இருந்து 700 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் வருகை கொடுப்பனவு, செயற்திறமை கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறுதான் கம்பனிகள் செயற்படுகின்றன. முதலாளிமார்கள் இவ்வாறு செயற்படும்போது தோட்டங்களில் கலவவரங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. தோட்ட நிர்வாகிகளே பிரச்சினைகளுக்கு காரணமாகும்.

அத்துடன் தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழிற்சங்கங்களுக்கான சந்தா கழிக்கப்பட்டே சம்பளம் வழங்கப்படுகின்றது. பல நூறு வருடங்களாக இந்த நடைமுறையே இருந்து வருகின்றது. தற்போது முதலாளிமார் இதனை நிறுத்தி இருக்கின்றனர். இதனால் தொழிற்சங்கங்கள் செயலிழந்துள்ளன. தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநியாயங்களுக்கு குரல்கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளர்கள் முதலாளிமார்களுடன் பிரச்சினைக்கு செல்கின்றனர்.

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டதால், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே கம்பனிகள் இவ்வாறு செயற்படுகின்றனர். அதனால் கம்பனிகாரர்களின் பழிவாங்கல்களுக்கு இடமளித்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதனால் தோட்ட கம்பனிகாரர்களுக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்புக்கு தயாராகுமாறு ஆளும், எதிர்க்கட்சியில் இருக்கும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

அதனால் நாட்டுக்கு நட்டம் ஏற்படும் என்றாலும் வேறுவழியில்லை. அதேபோன்று கம்பனி காரர்களுக்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இருக்கின்றது. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் பிரதி அரசாங்கத்திடமும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களத்திலும் இல்லை. அதனால் தோட்டக் கம்பனிகள் நினைத்த பிரகாரம் செயற்படுகின்றனர். அதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.

அத்துடன் எமது நாடு சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் சீ 190 என்ற சமவாயத்துக்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை. அதில் இருப்பது சேவை நிலையங்களில் பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் இலஞ்சம் கோருவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு பதவி உயர்வுகள் மற்றும் வேறு சலுகைகள் வழங்கப்படுவது சம்பந்தமானதாகும்.

அதனால் சேவை நிலையங்களில் பெண்களுக்கு ஏற்படுகின்ற துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான பாதுகாப்பை ஏற்படுத்த இந்த சமவாயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

“பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் முஸ்லீம்களுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறி எமது தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்.”  – கலையரசன் காட்டம் !

“பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் முஸ்லீம்களுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறி எமது தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சம்மந்தமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் பேச்சுக்குப் பதில் கொடுக்கும் வண்ணம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நாவற்காடு என்ற இடத்தில் முன்பள்ளி, தையல் நிலையம் மற்றும் சமூர்த்தி சங்கம், தாய்சேய் பராமரிப்பு நிலையம் ஆகியன இயங்கிக் கொண்டிருந்த அந்த இடத்தில் தற்போது பொலிஸ் நிலையம் இயக்கிக் கொண்டிருக்கின்றது. அந்த முன்பள்ளியில் பதினெட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்திருக்கின்றார்கள். இவையெல்லாம் பொருட்படுத்தாது அங்கு அவசர அவசரமாக பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலே பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட வேண்டுமானால் ஒரு பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு கல்வி கற்கும், சுயதொழில் செய்யும் அந்த இடத்தைப் பொருட்படுத்தாது அங்கு பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது பொருத்தமற்ற இடமாகவே இருக்கின்றது. எனவே வேறு ஒரு இடத்தில் அங்குள்ள மக்களின் விரும்பு வெறுப்புகளை அறிந்து இடங்களைத் தெரிவு செய்திருக்க வேண்டும்.

திடீரென இவ்வாறான செயற்பாடுகளைச் செய்யும் போது அங்கு கல்வி கற்றுவந்த பிள்ளைகள் எங்கு சென்று கல்வி கற்பது என்ற நிலைமை தற்போது உருவாகியிருக்கின்றது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உரிய தலையீடு செய்து ஒரு பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும். எமது தமிழ் மக்களின் போராட்டம் ஒரு கொள்கையை நோக்கி, எமது இருப்பை நோக்கி தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையிலேயே அகிம்சை, ஆயுத ரீதியில் நடைபெற்றும் தற்போதும் ஒரு ஜனநாயக வழிமுறையில் அதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தாங்கள் இந்த நாட்டிலே எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன இணைந்து அமைச்சுப் பதவிகளை எடுத்து நீங்கள் அதிகாரம் செலுத்தபவர்களாகவே இருந்துள்ளீர்கள். உங்கள் அதிகாரங்களைத் தமிழர்கள் மீதே செலுத்தியுள்ளீர்கள். நீங்கள் இப்போது உங்கள் சமூகம் சார்ந்த அழிவு விடயங்களைச் சொல்லியிருக்கின்றீர்கள். நானும் எமது சமூகம் சார்ந்த அழிப்பு விடயங்களைச் சொல்ல முடியும். அவ்வாறு சொன்னால் மீளவும் இந்த சமூகங்களுக்குள் குழப்படிச் சூழல் உருவாகிவிடும் என்ற அச்சத்தின் நிமித்தம் தவிர்க்கின்றேன்.

கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தாமல் இருப்பதற்காகத்தானே திட்டமிட்டு தற்போது அரசோடு இணைந்திருக்கின்றீர்கள். எவ்வாறான அடாவடி வேலைகளை அந்த தமிழ்ப் பிரதேச செயலக விடயத்தில் செய்து கொண்டிருக்கின்றீர்கள். ஒவ்வொரு வாரங்களும் சுமார் இரண்டு இடங்கள் என்ற ரீதியில் எமது மக்களின் இடங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. கடந்தவாரமும் பெரியநீலாவணையில் ஒரு இடம் கபளீகரம் செய்ய முற்பட்டது. திட்டமிட்டு முஸ்லீம் அமைப்புகளை உருவாக்கி எமது இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதில் மிகவும் வல்லவராகச் செயற்பட்டு வருகின்றீர்கள். தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் கருத்துச் சொல்ல வேண்டாம். நாங்கள் எப்போதும் இந்த நாட்டில் சிங்கள, முஸ்லீம் மக்களோடு இணைந்து வாழத்தான் விரும்புகின்றோம். உங்கள் கள்ளத்தனமான அரசியலை நீங்கள் நிறுத்த வேண்டும்.

நீஙகள் முஸ்லீம்களுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறி எமது தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களால் எத்தனை தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. எங்களாலும் பட்டியலிட்டுச் சொல்ல முடியும். உங்களுடைய அரசியல் ரீதியாக நீங்கள் கபளீகரம் செய்ய முற்பட்ட பல விடயங்களை நாங்கள் முறியடித்திருக்கின்றோம். எங்கள் சமூகம் சார்ந்து மாத்திரம் நாங்கள் செயற்பட்டிருந்தால் எமது இலக்கை நாங்கள் அடைந்திருப்போம். தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக எங்களுடைய சமூகமே இன்று எங்களை தள்ளிவைக்கக் கூடிய சூழல் இருக்கின்றது.

எனவே விடயங்களை அறிந்து பேச வேண்டும். நாங்கள் தமிழ் பேசும் இனமென்ற ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு அரசியல் மாற்றங்களிலும் தமிழர்களின் இடங்களை எவ்வாறு கபளிகரம் செய்யலாம் என்றே சிந்திக்கின்றீர்கள். இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் தமிழர்களுக்கெதிரான வேலையைச் செய்து விட்டு தற்போது ஒற்றுமை பற்றிப் பேசுகின்றீர்கள். இந்த ஒற்றுமையைக் குலைக்கின்ற அரசியலாவதியாக நீங்களே இருக்கின்றீர்கள்.

கல்முனையில் ஒவ்வொரு தமிழர்களும் எதிர்காலத்தில் இங்கு தமிழர்கள் வாழ முடியுமா என்ற வினாவோடு இருக்கின்றார்கள். கபளீகரத்திற்காக ஒவ்வொரு நாளும் ஏதோவொரு திட்டம் தீட்டப்படுகின்றது. அரச காணிகள், குளங்கள் போன்றன கபளீகரம் செய்யப்படுகின்றன. அங்கிருக்கும் உப பிரதேச செயலாளரின் அதிகாரதத்தினைக் குறைக்க முற்படுகின்றீர்கள். இதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றீர்கள். உங்களது இணைவு எல்லாம் தமிழர்களை நசுக்குவதற்காகத் தான் என்று தெரிவித்தார்.

XPress Pearl கப்பலை விடுவிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு !

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மே மாதம் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போதும் கரைக்கு அருகே காணப்படும் XPress Pearl கப்பலை விடுவிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து ட்ரைகோ நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு வந்த குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக தென்னிலங்கை கடலில் பல வளங்கள் அழிந்தன. அதனால் ஏற்பட்ட நட்டத்திற்கு 06 இலட்சம் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக கப்பலின் நிறுவனம்வழங்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கப்பலை முற்றுகையிடும்படி துறைமுக மாஸ்டருக்கு உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், வருகின்ற 21ஆம் திகதிவரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அன்றைய தினத்தில் இந்த வழக்கில் பிரதிவாதிகள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அகதிகள் பிரச்சினையை பேசிய நாவலாசிரியருக்கு இலக்கியத்துக்கான நோபல் !

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான  நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டது . தான்சானியா  நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

விஸ்வரூவம் எடுத்த கே.எல்.ராகுல் – சென்னையை பந்தாடியது பஞ்சாப் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில்  வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய சென்னை அணி 61 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டூ பிளெசிஸ் 76 ஓட்டங்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 135 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய தலைவர் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி ஓட்டவேகத்தை உயர்த்தினார். மயங்க் அகர்வால் (12), சர்பராஸ் கான் (0), ஷாருக் கான் (8), மார்க்ராம் (13) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் கே.எல்.ராகுல் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றியை உறுதி செய்தார்.
பஞ்சாப் அணி 42  பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த கே.எல்.ராகுல், மொத்தம் 42 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 98 ஓட்டங்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ள பெண் அதிகாரிகள் !

நாட்டில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷவுக்கு புத்தி மங்கி விட்டது.” – கோவிந்தன் கருணாகரம்

““புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைத் தடை செய்துவிட்டு, அவர்களைப் பேச்சுக்கு ஜனாதிபதி அழைத்திருப்பது நகைச்சுவையானது. ஜனாதிபதியின் புத்தி மங்கியுள்ளதையே இது காட்டுகின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைத் தடை செய்துவிட்டு, அவர்களைப் பேச்சுக்கு ஜனாதிபதி அழைத்திருப்பது நகைச்சுவையானது. ஜனாதிபதியின் புத்தி மங்கியுள்ளதையே இது காட்டுகின்றது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம். அதுபோலவே ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதியின் உரை தமிழ் மக்களுக்கு வைகுண்டம் போகும் கதையாக இருக்கின்றது.

உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என ஜனாதிபதி, ஐ.நா. பொதுச் சபையில் பேசி மூச்சு விடுவதற்கு முன்னர் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனித உரிமைகளின் மாண்பையும்  சிறைக்கைதிகளின் நலன்களையும் சிறப்பாகக் கவனித்தார். இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறையின் விசித்திரத்துக்கு லொஹானின் அராஜகம் ஓர் எடுத்துக்காட்டு.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச 13 ஆவது திருத்தச் சட்டம் போதாது. 13க்கு அப்பால் செல்வேன் என்றார். எதை எப்படிப்  பேசி சர்வதேச சமூகத்தை நமது ஆட்சியாளர்கள் தம் வசப்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

முன்னாள் ஜனாதிபதிகளான டி.எஸ்.சேனாநாயக்க முதல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரையில் எவருக்கும் நாடு தொடர்பில் ஒரு பொதுவான கொள்கை இல்லை. ஒரு முகம் இல்லை. நாட்டின் பல்லினத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இல்லை” என்றார்.

போத்தலில் சிறுநீர் கழிக்கும் ரிஷாட் பதியூதீன் – லக்ஷ்மன் கிரியெல்ல கவலை !

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தலில் சிறுநீர் கழிக்கவேண்டியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ரிஷாட் பதியூதீன் எம்.பி, மாலை 5 மணிக்குப் பின்னர் மலசலக்கூடத்துக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அதனால், அவர் ​போத்தலிலே சிறுநீர் கழிக்கின்றார். ஆகையால், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்க வழிவகைகளைச் செய்யுமாறு சபாநாயகரிடம் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.

இதனிடையே குறுக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கடந்தகாலங்களில் தாங்களும் சிறையில் அடைக்கப்பட்டோம். அப்​​போதும் மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தல்களிலே சிறுநீர் கழித்தோம் என்றார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீன் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.