13

13

“வடகொரியாவின் இராணுவம் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்கப்படும்’’ – வடகொரியா சூளுரை !

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது இந்த பதற்றத்துக்கு மத்தியில் அண்மை காலமாக வடகொரியா தனது இராணுவ திறனை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒரே மாதத்தில் 4 புதிய ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அண்டை நாடுகளை அதிரவைத்தது.

இந்த நிலையில் தனது ராணுவபலத்தை உலகுக்கு காட்டும் வகையில் மிகவும் அரிதான ஆயுத கண்காட்சியை வடகொரியா நடத்தியது.

தலைநகர் பியாங்யாங்கில் நடந்த இந்த கண்காட்சியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகள் உள்பட பல முக்கியமான ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியில் உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் ‘‘அமெரிக்காவின் விரோதபோக்கு மற்றும் அழுத்தத்தை சமாளிக்க வடகொரியாவின் ராணுவம் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்கப்படும்’’ என சூளுரைத்தார்.

“விலைவாசி உயர்வுக்கு, கொரோனாவை காரணம் காட்ட உங்களுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை.” – அரசை நோக்கி மனோ பாய்ச்சல் !

“விலைவாசி உயர்வுக்கு, கொரோனாவை காரணம் காட்ட உங்களுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை. உங்களுக்கு நாட்டை ஆளும் திறன் இல்லை. ஆகவே நாட்டை ஆளத்தெரிந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுங்கள்.” என மிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ மேலும் கூறியுள்ளதாவது,

புதிய மிதக்கும் வாக்காளர்களின் நம்பிகையை பெற்று, பதவிக்கு வந்த இந்த ஆட்சியாளர்கள் தமது முட்டாள்தனமான கொள்கைகளால், இந்நாட்டை இன்று கப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்க விட்டு விட்டார்கள். இது இன்று தொழிற்படும் அரசாங்கம் இல்லாத, தலைவர் இல்லாத, வழிகாட்டி இல்லாத நாடாக போய் விட்டது. திக்கு தெரியாமல், திசை தெரியாமல் இந்நாடு இன்று அல்லாடுகிறது.

மக்கள் விலைவாசியால் விழி பிதுங்குகிறார்கள். இதற்கு இந்த அரசின் ஒரே பதில் உலகம் முழுக்க உலக கொரோனா பரவி உள்ள எமது நாட்டினதும் பொருளாதாரத்தை அழித்து விட்டது என்பதாக மாத்திரமே இருக்கிறது. ஆம், கொரோனா உலகம் முழுக்க இருக்கிறது. தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இருக்கிறது.

ஆனால், அங்கெல்லாம் பொருளாதாரம் இப்படி அழியவில்லை. விலைவாசி இப்படி நூறு மடங்கு உயரவில்லை. மக்களின் வருமானம் உடைந்து விழவில்லை. தெற்காசியாவின் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் எப்படி எங்களுக்கு கடன் தரும் நிலையில் தங்கள் பொருளாதாரத்தை தக்க வைத்துள்ளார்கள் என்று கேட்க விரும்புகிறேன்?

இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும் இல்லாத வரப்பிரசாதம் இந்நாட்டுக்கு இருக்கிறது. அதுதான் நாம் ஒரு தீவு. வெளியில் இருந்து கொரோனா வந்து எம்மை அழிக்க முடியாத நாடாக இது இருந்தது. நீங்கள்தான் கொரோனாவை அழைத்து வந்தீர்கள். நாட்டை திறந்து வைத்தீர்கள். இன்று இறந்து போயுள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் சாவுக்கே காரணம் நீங்கள்தான்.

இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு, கொரோனாவை காரணம் காட்ட உங்களுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை. உங்களுக்கு நாட்டை ஆளும் திறன் இல்லை. ஆகவே நாட்டை ஆளத்தெரிந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுங்கள்.

இன்று இந்நாட்டுக்கு கொண்டு வரபட்ட உரத்தில் பற்றீரியா இருந்தது என்றும், நமது மண்ணுக்கு பொருத்தமற்றது என்றும் நமது நாட்டின் தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை சமர்பித்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை தவறு என சீன தூதரகம் கூறுகிறது.

தங்களது உரம் தரமானது என சீனா கூறுகிறது. தங்கள் நாட்டின் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையையை அவர்கள் சமர்பிக்கிறார்கள். இது என்ன? இந்த விவகாரம் தொடர்பில் நமது நாட்டு தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர்கள் பதில் கூற வேண்டும்.

இந்நாட்டில் இன்று சீனாவுக்கு துறைமுக நகரை ஒப்படைத்தது போக, அதை சுற்றியுள்ள சுமார் 13 ஏக்கர் நிலமும் இன்று சீனாவுக்கே வழங்கப்பட உள்ளதாக நாம் அறிகிறோம். அங்கேதான் இலங்கையின் அதிகாரபூர்வ ஜனாதிபதி மாளிகையும் உள்ளது.

அதுதான் முன்பு பிரித்தானிய காலத்தில் வெள்ளையர்களின் ஆளுநர் மாளிகையாக இருந்தது. ஆகவே அந்த மாளிகையையும் சீனாவுக்கு கொடுத்து விட்டு, அங்கே ஒரு சீன ஆளுநரையும் கொண்டு வந்து குடியமர்த்துங்கள். அது சீனாவின் ஆளுநர் மாளிகையாகட்டும். ஒளித்து, மறைத்து செய்யாமல், அதை பகிரங்கமாக செய்து, இந்நாட்டை சீனாவின் காலனியாக அறிவித்து விடுங்கள்.

“இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் புரிந்துகொள்ள முடிகின்றது.” – சுப்பிரமணியன் சுவாமி

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி இன்று(13.10.2021) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில் முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டின் அவசியம் தொடர்பாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுப்பிரமணியம் சுவாமிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளினால் இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் தன்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ள சுப்பிரமணியம் சுவாமி, கடல் வளங்களை அழிக்கின்ற றோலர் தொழில் முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்தினார்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக இந்திய மாநிலங்களவையில் உரையாற்றவுள்ளதாகவும்,  இந்திய தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி விரைவான தீர்வுக்கு முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் இரண்டு நாடுகளும் தொடர்புபட்ட சமகால நிலவரங்கள் தொடர்பாகவும் இரண்டு நாட்டு அரசியல் முக்கியஸதர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வருகிறது 90நாட்களுக்கு மேற்பட்ட போராட்டம் – அரசிடமிருந்து சாதகமான பதில் !

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும். அடுத்த இரண்டு பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான ஒரு சந்திப்பு நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயல்படுவதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்வை வழங்கி இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அங்கு குறிப்பிட்டார்.

இதேவேளை முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய (13) தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

“என் வீட்டு நாய்க்குட்டி வுறோணி பெயரிலும் மண் பேமிற் இருப்பதாக சாணக்கியன் சிலவேளைகளில் கூறலாம்.” – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

நீங்களும் வாருங்கள் இந்த மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வை தடுப்பதற்காக பல திட்டங்களை வகுப்போம் உங்களது ஆலோசனையை சொல்லுங்கள் அவற்றையும் உள்வாங்குவோம் நடைமுறைப்படுத்துவோம் அதற்காக பொய்யான விடயங்களை கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை நோக்கி தெரிவித்துள்ளார்.

மட்டு ஊடக மையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடைசியாக இடம்பெற்ற  நாடாளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் மண் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தான் அவர்களது கட்சி சார்ந்தவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்திருக்கின்றார்கள். அதேபோல் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் சார்ந்தோரும் அதற்கான விளக்கத்தினை அளித்திருக்கின்றார்கள் அந்த வகையில் எனது விளக்கத்தையும் நான் வழங்க வேண்டிய கடைப்பாட்டில் இருக்கின்றேன்.

சாணக்கியன் அவர்கள் உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை உயரிய சபையான  நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். என்னுடைய சகோதரர் சதாசிவம் மயூரனின் பெயரிலும் மண் அனுமதிப்பத்திரம் இருப்பதாக அவர் இதன்போது கூறியிருக்கின்றார். அதேவேளை இதன்போது பசில் ராஜபக்ஷ அவர்களை விழித்து அவர் இதனை பேசியிருக்கின்றார்.

இதனுடைய நோக்கம் என்ன உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை நாடாளுமன்றத்தில் பசில் ராஜபக்ஷ அவர்களை விழித்து கூறியமைக்கான நோக்கம் என்ன?  என்று பார்த்தால்  சண்முகநாதன் மயூரனுக்கும் சதாசிவம் மயூரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு பொய்யான தகவலை வழங்கியிருப்பது என்பது இவருடைய எதிர்கால அரசியலுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியும் காரணம் மக்கள் இவர்களை நிராகரிப்பார்கள், ஏன் என்றால் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொன்னவர்களை கடந்த காலங்களில் மக்கள் நிராகரித்து இருக்கின்றார்கள்.

இவ்வளவு பெரிய பொய்யை சொல்லி ஒரு அரசியல் நடத்த வேண்டுமா? அதே போன்று  பெருமாள் சந்திரகுமாரை பரமசிவம் சந்திரகுமார் ஆக்கியிருக்கின்றார்கள் இது ஒரு ஆரோக்கியமான அரசியலா? அதேவேளை நான் ஒரு பிழை விட்டால் நான் என்னை திருத்திக்கொள்வேன் பிழைகளை நியாயப்படுத்த நான் விரும்பமாட்டேன். எனது தம்பியின் பெயரில் மண் அனுமதிப்பத்திரம் இருந்தால் அதனை நான் கண்டிப்பேன்.

என்னுடைய வீட்டில் வுறோணி எனும் நாய்க்குட்டி இருக்கின்றது அதனுடைய பெயரிலும் கூட மண் பேமிற் இல்லை ஆனால் சில வேளை அதுவும்  நாடாளுமன்றத்திற்கு வருமோ தெரியா? அதற்கும் ஒரு அப்பாவின் பெயரை வைத்து பேமிற் இருப்பதாக கூறுனாலும் கூறுவார்கள் ஏன் என்றால் அரசியலுக்காக ஆதாரமில்லாத கருத்தையே இவர்கள் கூறுவார்கள்.

இவர்களது பொய்யான கருத்துக்களை நாங்கள் மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும். வர இருக்கின்ற பாராளுமன்ற அமர்வில் நான் அது தொடர்பான விளக்கத்தையளித்து அந்த விடையத்தை ஹன்சாட்டிலே இருந்து நீக்குமாறு சபாநாயகர் அவர்களை கோர இருக்கின்றேன்.

இவர்கள் எதிர்வரும் தேர்தலுக்காகவே மக்கள் மத்தியில் பிழையான செய்திகளை கூறி மக்கள் மத்தியில் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அவர் கூறிய இலக்கத்தை கொண்ட மண் போர்மிட் இல் சண்முகநாதன் மயூரன் என்பவருக்கே மண் அனுமதிப்பத்திரம் இருக்கின்றது இதை புவிச்சரீதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாங்கள் இந்த மண் விடையம் தொடர்பில் நாங்கள் பல வேலைத்திட்டங்களை செய்கி கொண்டே வருகின்றோம், சில இடங்களில் சில விடையங்களை தடுத்து இருக்கின்றோம். சில விடயங்களை கட்டுப்படுத்திக்கொண்டு வருகின்றோம். அதேவேளை புவிச்சரிதவியல் திணைக்களம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பல விடையங்களை செய்துகொண்டுவருகின்றோம். தயவுசெய்து தங்களுடைய வங்குறோத்து அரசியலை தக்கவைப்பதற்காகவோ எங்களை தாக்குவதற்காவோ இவ்வாறாக பொய்களை கூறாதீர்கள்.

நீங்களும் வாங்க இந்த மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வை தடுப்பதற்காக பல திட்டங்களை வகுப்போம் உங்களது ஆலோசனையை சொல்லுங்கள் அவற்றையும் உள்வாங்குவோம் நடைமுறைப்படுத்துவோம் அதற்காக பொய்யான விடயங்களை கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.” என்றார்.

‘மொட்டு’ கூட்டணியின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் !

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது.

‘மொட்டு’ கூட்டணியின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் துறப்பார் எனவும் தெரியவருகின்றது.

இது தொடர்பில் பிள்ளையான் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு பிள்ளையான் ஒத்திசைவார்” என்று குறிப்பிட்டார்.அதாவது கட்சி பச்சைக்கொடி காட்டினால் பிள்ளையான் களமிறங்குவார் என்பதே அவரின் கருத்தின் சுருக்கம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிள்ளையானின் கட்சி தனித்துப் போட்டியிட்டது. எனவே, பிள்ளையான் பதவி துறந்தாலும் அவரின் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றம் செல்லக்கூடும்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சினைக்காக நீதி வேண்டி போராட கூட்டமைப்பு அழைப்பு !

எதிர்வரும் 17ம் 18ம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தினை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள் குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சனையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக தென் பகுதியில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விவசாய அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல. அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதை கருத்திற் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் முன்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் .

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 28 கமநல சேவைநிலையங்கள் இருக்கின்றன. அனைத்து நிலையங்களுக்கு முன்னாலும் எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி காலை 9 மணிக்கு சமூகப் பொறுப்போடு சமூக இடைவெளியினை பின்பற்றி தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை செய்யவுள்ளோம்.

தெற்கில் உள்ள ஏனைய எதிரணி அரசியல் தலைவர்களுடன் பேசி உள்ளோம்.அவர்களும் தங்களுடைய பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக தமது பகுதியில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் அதாவது எமக்கு பசளை கிடைக்கும் வரை இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் வடக்கு மீனவர்கள்அத்துமீறிய இந்திய இழுவை படகுகளினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் குறித்த இந்திய மீனவர்களின் வருகையினை நிறுத்துவதற்கு ஏற்கனவே சட்டமூலம் இயற்றப்பட்டு உள்ள நிலையில் அதனை அரசு நடைமுறைப்படுத்த தயங்குகின்றது. குறிப்பாக கடற்தொழில் அமைச்சராக ஒரு தமிழர் இருந்தும்,அவர் அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் இலகுவான விடயம். ஆனால் அவர் அதனை செயற்படுத்தாதன் காரணமாக இந்திய இழுவைப் படகுகளின் தொல்லை வடக்கு பகுதியில் மீனவர்களை பெரிதாக பாதிக்கின்றது எனவே குறித்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி முல்லைத்தீவு கடலில் இருந்து பருத்தித்துறைக்கு கடல் வழியாக வந்து அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளோம்.அனைத்து போராட்டங்களுக்கும் எமது மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.