18

Monday, December 6, 2021

18

“வாக்களித்த சிங்கள மக்களே ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.” – மனோ கணேசன்

“சிங்கள மக்களே இன்றைய ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது எதிரணியினராகிய நாம் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை.” முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சிகள் ஏன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். அதற்கு நாங்கள் கூறும் பதில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தை சிங்கள மக்களே “உங்களது ஆட்சி போதும் வீட்டுக்குப் செல்லுங்கள்” என்று கூறும் நிலைதான் தற்போது உருவாகி உள்ளது.

எனவே சிங்கள மக்களே இன்றைய ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது எதிரணியினராகிய நாம் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை என்றார். இந்திய மீன்பிடிப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது,கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.

இரு தமிழர் தரப்புகளும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்தார்களோ தெரியாது. எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள். யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு  உள்ள தடையை அகற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவது பிரச்சினைக்குரிய விடயம். இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகின்றேன் என்றார்.

“விடுதலைக்காகப் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.” – சாணக்கியன் ஆதங்கம் !

“எனவே இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வெல்லாவெளியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நேற்றைய தினம் கடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று தரை வழிப் போராட்டமாக மாறியிருக்கின்றது. எங்களது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று வாழ்வாதாரத்திற்காகப் போராடும் நிலைமைக்கு இந்த அரசு தள்ளிருக்கின்றது. நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளை அமைச்சரும், அரசாங்கமும் கவனத்தில் எடுக்காத காரணத்தினால் கடல்வழிப் போராட்டம் நடாத்தப்பட்டது.

இன்று இரண்டாவது நாளாகத் தரைவழிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது வடக்கு கிழக்கிலே அதனது இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. போராட்டம் என்பது அறிந்து வருவது. அதற்கு எவரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை. இது மக்களுக்காக, விவசாயிகளுக்காகச் செய்யும் போராட்டம்.

ஆனாலும். நாங்கள் மண்வெட்டியை வைத்திருப்பது தான் விமர்சனப் பொருளாக இருக்கும். எம்மை விமர்சிப்பது பரவாயில்லை. இவ்வாறாகவாவது எமது போராட்டம் இந்த அரசுக்குப் போய்ச் சேர வேண்டும். எங்களுடைய வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மீன்பிடியையும், விவசாயத்தையும் நம்பி வாழும் மக்களே அதிகம். அதிலும் இன்றைய தினம் நாங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் வெல்லாவெளிப் பிரதேசம் தொன்னூறு வீதம் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள்தான்.

விவசாயிகளுக்கு இன்று உரம் இல்லாத நிலையில் இந்த மாவட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறாமல் தங்களது வியாபார நலன்களை மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் கவலையானதொரு விடயம். இயற்கைப் பசளையின் மூலம் விசாயம் செய்து எமது விளைச்சல்களை அதிகரிக்கலாம் என்று குழந்தைப் பிள்ளைத் தனமாகவும், குரங்குச் சேட்டையாகவும் கருத்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இயற்கைப் பசளை பாவித்து விவசாயத்தில் அதிக விளைச்சல் பார்க்கலாம் என்று சொல்லுபவர்கள் உண்மையிலேயே விவசாயிகள் அல்ல. அவர்கள் வியாபாரிகள். நானும் உண்மையில் விவசாயி இல்லைதான் ஆனால் விவசாயிகள் படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்பவன் என்ற அடிப்படையில், மக்களோடு மக்களாக இருப்பவர்கள். தினமும் விவசாயிகள் அவர்களின் துயரங்களைச் சொல்லும் போது மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட யூரியா இன்று பத்தாயிரம் வரை அதிகரித்திருக்கின்றது. இவ்வாறு அதிகமான விலைக்குப் பசளை வாங்கும்போது நெல் விலை அதிகரிக்கும் அதன்மூலம் அரிசி விலை அதிகரிக்கும். எனவே இது வெறுமனே விவசாயிகளின் பிரச்சனை அல்ல. சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை. இது விவசாயிகளுக்கான போராட்டமே தவிர இதில் நாங்கள் அரசியல் இலாபம் தேடவில்லை. அரசோடு இருப்பவர்களுக்கும் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா அண்ணன் வெளிநாடு சென்றமையால் அவரால் வர முடியவில்லை. ஆனால் மற்றைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் வரவில்லை.

ஏன்? விவசாய மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? இது அரசியற் கட்சி சார்ந்த ஒரு போராட்டம் அல்ல. இது மக்களின் போராட்டம் அரசாங்கத்துடன் இருக்கின்றீர்கள் என்பதற்காக மக்களுக்காகப் போராடாமல் இருக்க முடியாது. கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று சொல்லுபவர்கள் உங்கள் மாவட்டத்தில் உங்களுக்கு வாக்களித்த மக்கள் உரமில்லாமல் கஸ்டப்படும் பொழுதும் கூட உங்கள் காரியாலங்களை மூடிக்கொண்டு குளிர் அறைகளில் இருந்து கொண்டிருப்பது மிகவும் கவலையான விடயம்.

இந்த வாரம் முழுவதும் போராட்ட வாரமாகவே இருக்கும். நேற்றைய தினம் எங்கள் மீனவர்களுக்காக, இன்றைய தினம் எங்கள் விவசாயிகளுக்காக, எதிர்வரும் நாட்களிலே காணி அபகரிப்பு, அண் அகழ்வு என்பவற்றுக்கெதிரன போராட்டங்கள் நடைபெறும்.

எனவே இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள்” என தெரிவித்தார்.

“ஜனாதிபதி கோட்டபாய அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற ஏப்ரல் தாக்குதலை பயன்படுத்திக்கொண்டார்.” – கர்தினால் மல்கம் ரஞ்சித் பரபரப்பு குற்றச்சாட்டு !

“கண்ணிற்கு புலப்படுகின்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பால் பலவிடயங்கள் உள்ளன. அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தியது.” என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இணையவழி நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் கர்தினால் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பேசியுள்ள அவர்,

கண்ணிற்கு புலப்படுகின்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பால் பலவிடயங்கள் உள்ளன. அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தியது.  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தினால் அது தனது அரசியல் செல்வாக்கை எவ்வாறு பாதிக்கும் என ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் அவர் உடனடியாக தனது அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் சிலரை தெரிவு செய்தார்,இது அரசியல் தீர்மானம், என குறிப்பிட்டுள்ள கர்தினால் தனது நலன்களை பாதுகாப்பதற்காக எந்த விடயங்களை தெரிவு செய்து நடைமுறைப்படுத்துவது எதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்காகவே அந்த அரசியல் குழுவை ஜனாதிபதி நியமித்தார்.

அறிக்கை வழங்கப்பட்டு இரண்டு நாள்களின் பின்னர் ஜனாதிபதி என்னை தொடர்புகொண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் என்னால் நடைமுறைப்படுத்த முடியாது. சிலவற்றை நடைமுறைப்படுத்தினால் மக்கள் மத்தியில் நான் செல்வாக்கை இழந்துவிடுவேன் என குறிப்பிட்டார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் தனக்கு அவசியமானதை தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதியை கடுமையாக சாடியுள்ள கர்தினால், சட்டமா அதிபரும் அரசாங்கத்தின் பணயக்கைதியாக மாற்றப்பட்டார் என்பது வெளிப்படையான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் தற்போதைய அரசாங்கம்  டிசம்பர் மாதம் கவிழ்ந்து விடும்.” – ஐக்கிய மக்கள் சக்தி ஆருடம் !

இலங்கையில் தற்போதைய அரசாங்கம்  டிசம்பர் மாதம் கவிழ்ந்து விடும் என்றும் அரசாங்கம் வங்குரோத்து நிலைமையை அடையும் என்றும் வெகு விரைவில் முழுப் பொருளாதாரமும் வீழ்ச்சியடையக் கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தை அடையும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இந்த ஆண்டின் இறுதிக்குள், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வங்குரோத்து நிலைமையை அடையும் நாடாக மாறும்.

அப்போதைய நிலையில் நாட்டிற்கு எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உலகின் மோசமான நாடாகச் சரிந்து வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளப்பட்டமைக்கு இந்த அரசாங்கத்தின் அசாதாரண ஆட்சியே காரணமாக அமைந்துள்ளது.  பொருளாதாரச் சரிவில் உலக நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளமையை ஆளுந்தரப்பு உறுப்பினரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் – யாழில் சம்பவம் !

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளரினால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் சில ஒளிப்படங்களை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் கீழ் பணியாற்றும் சிலர் சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னேடுக்கப்படவேண்டும் என்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்களுக்கு பதிலாக பாடசாலைகளில் களமிறக்கப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் !

கிளிநொச்சி மாவட்டத்தில், வரும் 21ஆம் திகதியன்று, பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் ஆசிரியர்கள் வராவிடின், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, கலை பாடங்களை புகட்டக் கூடிய திறமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் உள்ளனர்.

நீண்ட நாள்கள் இடைவெளியின் பின்னர் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும். அன்று, ஆசிரியர்கள் சமூகமளக்காவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களுக்கான விளையாட்டு, கலை பாடங்களை கற்பிக்க முடியும்.

அனைத்து பிரதேச செயலாளர்களும் பாடசாலை நடவடிக்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்” என, இந்தக் கலந்துரையாடலின் போது, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலிருந்து பொலிஸாரை பாதுகாக்க அமைச்சர் சரத்வீரசேகர நடவடிக்கை !

காவல்துறையினருக்கு எதிராக சுமத்தப்பட்ட அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை ஆறுமாதத்திற்குள் பூர்த்தி செய்ய முடியாவிட்டால்- காவல்துறையினரை அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்ய அனுமதிக்கும் சட்டமூலம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும் காவல்துறையினரை காப்பாற்றும் நோக்கத்துடனும் புதிய சட்டமூலத்தை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தங்கள் கடமைகளை உரியைவிதத்தில் நேர்மையாக செய்தவேளைகளில் பொதுமக்கள் அவர்களிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் 35 பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு பதவி உயர்வு வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை ஆறுமாதங்களிற்குள் பூர்த்தி செய்யமுடியாவிட்டால் அவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்வதற்கான சட்டமூலம் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மீது விடுதலைப்புலிகள் சாயம் பூசும் ஆளுங்கட்சி!

இலங்கை ஆசிரியர்கள் தங்களுடைய சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டங்கள் இலங்கையில் மிகப்பெரிய அதிருப்தி அலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. புாராட்டத்தை கட்டுப்படுத்தி பாடசாலைகளை வேகமாக தொடங்க அரசு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டும் இலங்கை ஆசிரியர்கள் உடன்படுவதாயில்லை. இந்நிலையில் போராட்டத்தை முன்நின்று நடாத்தும் ஜோசப்ஸ்டாலின் மீது ஆளுங்கட்சியினர் புலிச்சாயம் பூசி ஆசிரியர்போராட்டத்தை நலிவடையச்செய்ய முயற்சிப்பது போல தோன்றுகிறது.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது இராணுவத்தினர் மக்களைக் கொன்றனர் எனக் குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச் சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின். அவர் புலிகளின் கட்சியைச் சேர்ந்தவர்.

அடுத்ததாக மஹிந்த ஜயசிங்க என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்விக் கட்டமைப்பைக் குழப்புகின்றனர்” – என்றார்.

இலங்கையில் சிறுவர்கள் மீது நாளாந்தம் துஷ்பிரயோகம் !

நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அவர்களுள் 21 சதவீதமானவர்கள் 5 வயதிற்கு குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, நாளாந்தம் 6 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக அவர் தெரிவித்துள்ளார்.