26

26

யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் !

யாழ்ப்பாணம்-குருநகரில் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள்  கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் எனத் தெருவித்ததை எதிர்த்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

“உலக அமைதியை நிலை நிறுத்துவோம்.” – சீனா அறிவிப்பு !

சீனா அனைத்து வகையான மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியல், ஒருதலைப்பட்சத்தை எதிர்கிறது” என சீன ஜனாதிபதி ஜிஜின்பிங்  தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி, மேம்பாடு, நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய மதிப்புகளை ஊக்குவிக்குமாறு அனைத்து நாடுகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாய்வான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தாய்வான் உருவானது. என்றாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.

தேவைப்பட்டால் தாய்வானைக் கைப்பற்ற, படை பலத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் சில மாதங்களுக்கு முன்பு கூறினார். தொடர்ந்து தாய்வான் சீனாவுடன் இணையும் என்று அவர் தெரிவித்து வந்தார்.

சீனா சமீபத்திய ஆண்டுகளில் தாய்வானைச் சுற்றி தனது போர்ப் பயிற்சியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 ஆகிய திகதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தாய்வான் இடையிலான எல்லையைக் கடந்துள்ளன என்றும், அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தாய்வான் அதிபர் சாய் இங்-வென் கூறி இருந்தார்.

சீனா தைவானை தாக்கினால் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலையில் உலக அமைதியை நிலை நிறுத்துவோம் என்று சீனா  கூறியுள்ளது.

தென்னாபிரிக்க அணியினர் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு ஆதரவு – பிரபல வீரர் டி காக் விலகியதற்கான காரணம் என்ன ..?

இனவெறிக்கு எதிராக இனி ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் தென் ஆப்பிரிக்க அணியினர் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் காவலர் டெரிக் செவின், அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் ஏதோ திருடிவிட்டார் எனக் கருதி அவரின் கழுத்தில் முழங்காலை மடக்கி அமர்ந்து கொலை செய்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து எதிர்ப்பலைகளை உருவாக்கியது, கண்டனத்தை எழுப்பியது. இனவெறிக்கு எதிராக மற்றொரு போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலை இந்தச் சம்பவம் உருவாக்கிவிட்டதாகக் கருத்துகள் பரவின.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு, கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இனவெறிப் பிரச்சினையாலே கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த தென் ஆப்பிரிக்காவும் இனவெறிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் லாசன் நைடோ வெளியிட்ட அறிக்கையில், “இனவெறியை அனைவரும் கடந்து வருவதற்கு ஒற்றுமையாக இருந்து, பிணைப்புடன் இருந்து நமக்குள் வலிமையை ஏற்படுத்த வேண்டும். இனவெறி நம்முடைய பலவீனத்தைப் பயன்படுத்தி விடக்கூடாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இனவெறி என்று வரும்போது அனைவரும் அதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.

எங்களின் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டூடுவின் 90-வது பிறந்த நாளில் உலகெங்கும் இருக்கும் தென் ஆப்பிரிக்க மக்கள் பங்கேற்றனர். தென் ஆப்பிரிக்காவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தவருக்கு சிறந்த அஞ்சலியாக இருந்தது. ஒன்றுபட்ட தென் ஆப்பிரிக்காவுக்காகப் பணியாற்றுகிறோம் என்பதையும் உணர்த்தியது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வீரர் டி காக் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில்  வென்ற தென்னாப்பிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு தேர்வு செய்தது. சொந்தக் காரணங்களுக்காக இந்த ஆட்டத்திலிருந்து பிரபல வீரர் டி காக் விலகியுள்ளதாக தெ.ஆ. அணி தலைவர் பவுமா தெரிவித்தார். இது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மேலும் .ஆ. கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையால் அதிருப்தி அடைந்து, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்க முடியாத காரணத்தால் இந்த ஆட்டத்திலிருந்து அவர் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டி காக்கை பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். எனினும் இதுகுறித்த தன் நிலைப்பாட்டை டி காக் விரைவில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் திருமணத்துக்காக அரச வாழ்க்கையை துறந்த ஜப்பான் இளவரசி மகோ !

ஜப்பான் இளவரசி மகோவும் சாமானிய பிரஜையான கெய் கொமுருவும் இன்று (26) திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி இன்று (26) முற்பகல் 10 மணியளவில் குறித்த இருவரும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் மகோ கல்வி பயின்றபோது அவருக்கு கெய் கொமுரு அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துக்கொள்ளவிருந்த நிலையில், அதற்கு பல எதிர்ப்புகள் காணப்பட்டன.

ஜப்பானிய வழக்கத்தின் படி, அரச குடும்பத்தில் உள்ளவர்கள் சாதாரண பிரஜையொருவரை திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், ஜப்பானிய இளவரிசியான மகோ தமது காதலருக்காக அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதாக அறிவித்திருந்தார்.

அத்துடன், அரச குடும்பத்தினால் வழங்கப்பட்ட பெருந்தொகையான பணத்தையும் அவர் நிராகரித்துள்ளதுடன், அவர்களின் திருமண நிகழ்வும் மிகவும் எளிமையாக இடம்பெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்னர், மகோ மற்றும் அவரது கணவர் ஆகியோர் அமெரிக்காவில் குடியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக போராடுவோம்.” – முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன்

ஒரு சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உருவப்பொம்மை என்ன எங்களை சுட்டுப்போட்டாலும் எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக போராடுவோம் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்திக்குறிப்பில் மேலும்,

”வடக்கில் றோலர் தொழில் செய்யும் பலர் அரச உத்தியோகத்தர்களாகவும் வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களே. தொடர்சியாக கடல் தொழிலில் ஈடுபடும் ஒரு சிலரே றோலர் வைத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை போலவே கடலையும் நேசிப்பவர்கள். ஆனால் கடலை கொள்ளையடிக்க முதலீடு செய்தவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். அவர்களை கண்டு நாங்கள் பயப்படபோவதும் இல்லை.

ஒரு சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உருவப்பொம்மை என்ன எங்களை சுட்டுப்போட்டாலும் எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக போராடுவோம்.

குடத்தனையில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய நண்பன் கேதீஸை சுட்டுக் கொன்றதனை மறக்கவும் இல்லை அதற்கு பயந்து மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல் பயந்து ஒதுங்கவும் இல்லை. ஆகவே எங்கள் போராட்டம் தொடரும்” என குறிபிட்டுள்ளார்.

“இந்த அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் நாட்டுக்குத்தான் பேரழிவு.” – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை !

தோல்வியடைந்த அரசு வீடு செல்வதே உத்தமம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஊடங்களின் வெளியாகியிருந்ததை நாம் அவதானித்தோம். அதுமட்டுமன்றி ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள், அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

விசேடமாக அரசில் அங்கம் வகிக்கும் சுசில் பிரேமஜயந்த கடுமையான விமர்சனம் ஒன்றை அரசுக்கு எதிராக முன்வைத்தார். இந்த அரசு தோல்வியடைந்து விட்டது என அவர் கூறினார். அரசு எடுத்த அனைத்துத் தீர்மானங்களும் தோல்வியடைந்துவிட்டன என்று அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அரசின் தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளதை, அரசில் அங்கம் வகிப்பவர்களே புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். நாடு மிகவும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசில் அங்கம் வகிப்பவர்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளமை தெளிவாகியுள்ளது.

இந்த அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் நாட்டுக்குத்தான் பேரழிவு” – என்றார்.

“வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும்.” – அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தமது பொறுமைக்கும் எல்லை உண்டு என குறிப்பிட்ட விவசாயிகள் தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் விவசாயத்தை முன்னெடுக்க வழியில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

அமைச்சரினால் இரசாயன உரம் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா என்றும் அவர்கள் சவால் விடுத்தனர்.

இரசாயன உர பாவனைக்கு இலங்கையில் தடை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் சுமார் 60 வீதமானவர்களுக்கு போஷாக்கான உணவுகள் கிடைப்பதில்லை.” – கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி !

இலங்கையில் சுமார் 60 வீதமானவர்களுக்கு போஷாக்கான உணவுகள் கிடைப்பதில்லை என உணவு உரிமை தொடர்பில் கண்காணிக்கும் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுதலின் பின்னர் இவ்வாறு போஷாக்கான உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய 10 மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்களில் 71 வீதமானோர் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர் எனவும், 69 வீதமானவர்கள் வாரமொன்றில் ஐந்து நேரம் உணவு உட்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 14 வீதமானவர்கள் வாரமொன்றில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஒருவேளை உணவையேனும் பெற்றுக்கொண்டதில்லை என கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

“கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல.” – அரசு தரப்பு அறிவிப்பு !

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அதானி நிறுவனம் இலங்கையில் உள்ள ஏனைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயவுள்ளதாக கூறினார்.

முதலீட்டாளர்கள் வருகை தருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அரசாங்கங்கத்தின் பொறுப்பு என குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதானி நிறுவனம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நேற்று இலங்கைக்கு வந்துள்ள கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தபோதும் ஜனாதிபதி ஊடக பிரிவு இதுவரை அதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம்.” என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் என்னை துரோகியாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை: டக்ளஸ் தேவானந்தா -  தமிழ்வின்மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன்பிடியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராயும் வகையிலும் எதிர்காலத்தில் வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரின் அழைப்பினையேற்று இன்று விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வாகரை மீன்பிடி திணைக்கள காரியாலய வளாகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு விசேட சந்திப்பில் மீனவர்களுடன் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட அமைச்சர் முக்கியமாக வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது. வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் உயர்த்துவதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.