30

30

மிகப்பெரிய அரசியலாகிப்போன காணாமல்போனோர் விவகாரம் – ஜனாதிபதி தீர்வு தருவார் என அமைச்சர் மீண்டும் டக்ளஸ் பேச்சு !

காணாமற்போனோர் விவகாரதத்திற்கு தீர்வை காணும் வகையில் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதியினால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில், உறவுகளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையினால் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்றைய சந்திப்பில், காணாமல் போனோரின் உறவினர்களின் விவகாரத்தினை தீர்த்து வைக்கும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

உறவுகள் காணாமல் போனதினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து அவற்றினை தீர்ப்பதற்கும், தேவையான தீர்வை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, உறுதியளித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

 

ஒவ்வொரு தடவையும் காணாமலாக்கப்பட்டோர்களின் உறவினர்களின் போராட்டம் உக்கிரமடையும் போதெல்லாம் அரசு தரப்பிலிருந்து இது போல் ஒரு தமிழ்பிரதிநிதி இதுபோலவே ஒரு அறிக்கையை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வருடத்தில் முன்பொரு முறையும் இரண்டு கிழமைகளுக்குள் காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்குவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வருட ஐ.நா தொடரிலும் காணாமல் போனவர்களுக்கு மரணசான்றிதழ் கொடுக்கவுள்ளதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறையில் பொலிஸார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டுடன் தொடர்புடைய 13பேர் கைது !

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறையினர் கூறினர். சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் ஞானசாரதேரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்..? 

கொடுங்கோல் ஆட்சியைத் தக்க வைக்கவே ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் ஞானசாரருக்கு பதவி என ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில்ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இனவாதம் பேசி, மதவாதத்தைக் கையில் எடுத்து, மக்களைப் பிளவுபடுத்தி, மோதல்களை ஏற்படுத்தியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது எல்லா வழிகளிலும் தோல்வி கண்டுள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அன்று கையாண்ட யுக்திகளை கையாள முயற்சிக்கின்றார்.

ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் இந்த அரசைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்தனர். ஞானசார தேரர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஊடகவியலாளர் என்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தினார். நீதிமன்றத்தை அவமதித்தார். இனங்களை இலக்கு வைத்து பிரசாரம் முன்னெடுத்தார். இப்படியான ஒருவர் தலைமையில் ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி ஏன் அமைக்கப்பட வேண்டும்? இதன் நோக்கம் தெளிவாகின்றது என்றார்.