November

November

“சம்பளம் குறைவு – செலவு அதிகம்.” – மலையக தோட்டத்தொழிலாளர்கள் போராட்டத்தில் !

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று (29.12.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றதோடு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதாகவும், தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதுடன், தொழிற் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர்கள் அரசாங்கத்தால் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் நிர்வாகத்தால் நிர்ணயக்கப்படும் கொழுந்தினை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தோடு, தேயிலை செடிகளில் கொழுந்தின் விலைச்சல் பாரிய சரிவை ஏற்பட்டதன் காரணமாக 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 40 ரூபா வீத சாரத்தில் சம்பள கணக்கு முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளதோடு, குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தங்களது ஆதங்களை வெளிப்படுத்தினர்.

மேலும், திடீரென கோதுமை மாவின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தாம் ஒவ்வொரு நாளும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உட்கொள்வதால் விலை அதிகரிப்பு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தோட்ட நிர்வாகமும் தேயிலை மலைகளுக்கு உரம், மருந்து தெளித்தல், துப்பரவு செய்தல் போன்ற காரியங்களை செய்வதில்லை.

இவ்வாறான நிலைமையால் தாம் சொல்லல்லா துயரங்களை அனுபவித்து வருவதாக இவர்கள் தெரிவிப்பதுடன், அரசாங்கம் தமது பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை எனவும் மலையக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை பெறுவதற்கு வருவதாகவும், இனி வாக்கு கேட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததுடன் தமக்கு உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத் தர சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

முன்னாள் அரசியல் கைதியை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு !

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே, எதிர்வரும் 01.12.2021 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியல் கைதிக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக,  எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு 12 ஆம்  மாதம் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு கெப்பிட்டல் கட்டடம் நாரயன்பிட்ட முகவரியில், 3ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தொடர்ந்தும் அதிகரிக்கும் சிலிண்டர் வெடிப்புக்கள்.” – நாடாளுமன்றில் ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர் !

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் தற்போது அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இது தொடர்பில் பல அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவை இந்த வாரத்தில் வழங்கப்பட உள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மூன்று விசாரணை அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சு அல்லது நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு உண்மைகளை மறைக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர்கள் தகவல்களை வழங்குவார்கள். நிலைமையை தணிப்பதே தமது நோக்கமாகும். 2015 ஆம் ஆண்டு முதல் இது போன்ற 233 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை இரு மாதிரிகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டதாகவும், சனிக்கிழமையன்று ஒரு அறிக்கை கிடைத்ததாகவும், அது மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மதிப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து 12 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று அறிக்கைகள் பெறப்பட்டு, மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இந்த விடயம் தொடர்பில் குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

வேகமெடுக்கும் omicron – எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் !

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள omicron கொரோனா திரிபு வைரஸ் மிக பயங்கரமான வைரஸாகும்.

அந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளெங்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தரான டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

அதனால் பல்வேறு நாடுகள் தமது நாட்டு எல்லைகளை பாதுகாப்பதற்கான பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசாங்கம் கடந்த காலங்களில் பெற்றுக் கொண்டுள்ள அனுபவத்துடன் உடனடியாக நாட்டின் எல்லைகள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள் துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

அத்துடன் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவ மயமாக்கலை நோக்கி நகரும் இலங்கை – சாணக்கியன் கண்டனம் !

நாடு இராணுவமயமாக்கலை நோக்கி நகர்கிறதா..? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கண்டன  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது கடந்த 27ஆம் திகதி இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முள்ளியவாய்க்கால் கிழக்கில் வசித்து வரும் குறித்த ஊடகவியலாளர் கடந்த 27ஆம் திகதி செய்தி சேகரிப்பிற்காக முல்லைத்தீவு சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையினை ஒளிப்படம் எடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் ஊடகவியலாளரை கேள்வி கேட்டு அடையாளப்படுத்த சொல்லி கோரிய போது குறித்த ஊடகவியலாளர் அடையாள அட்டையினை எடுத்து காட்ட முற்பட்ட வேளையில் படையினர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய படையினர் இராணுவ சீருடையிலும் கடமை அல்லாத நேரத்தில் இராணுவம் அணியும்,  அரை காச்சட்டையுடனும் ரி சேட்டுடனும் நின்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இராணுவம் தாக்குதலுக்காக பயன்படுத்திய பச்சை பனை மட்டை ஒன்றில் முள்ளு கம்பிகள் சுற்றப்பட்ட ஆயுதம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இராணுவத்தினர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதுடன், பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வெறும் கண்துடைப்பு கைதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்களை பார்கின்ற போது, எம்முள் அச்ச உணர்வு ஒன்று தோன்றுவதுடன், நாடு இராணுவ மயமாக்கலினை நோக்கி நகர்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

இதனை கூட்டமைப்பு என்ற வகையில் பலமுறை உரக்கச்சொல்லியிருக்கின்றோம். இதுகுறித்து இராணுவத் தளபதி மற்றும் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் மௌனம் காக்கின்றமை வருத்தமளிக்கின்றது. குறித்த இருவரும் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தற்போதைய அரசாங்கத்தின் கடந்த ஆட்சிக்காலத்தின் போதும் மிக மோசமான ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்களைக கடத்திப் படுகொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்தநிலையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படமாட்டார்கள் என கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

எனினும் தற்போதைய அரசாங்கத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறிப்பாக பிழைகளை சுட்டிக்காட்டுகின்ற ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எமது மக்களுக்கும் சுதந்திரமில்லை ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரம் இல்லை. சுதந்திர ஊடக முடக்கமானது ஒரு நாட்டின் முடக்கத்துக்கு ஒப்பானது. அரச சார்பான தமிழ் அரசியல்வாதிகள் இவ் அரசின் இவ்வாறான செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் பக்கச் சார்பாக செயல்படுவதும் அவர்களுக்கு சார்பான செயற்பாடுகளை சரி எனவும் நிறுவிக்கொண்டுள்ளார்கள்.

இந்த அரசின் காலத்திலேயே எம் மக்கள் பல இன்னல்களை அதிகளவாக அனுபவித்தனர் அனுபவித்துக்கொண்டும் வருகின்றனர்.“ எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் பலவீனமான ஒரு உறுப்பினரை தலைமை ஏற்க கோரும் மாவை.சேனாதிராஜா !

இலங்கை நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இன பாராளுமன்ற அங்கத்தவர்கள் தொகை மிகக்குறைவு. அதிலும் தெரிவாகியுள்ள தமிழ்தலைமைகள் ஆளுக்கொரு கட்சி கொள்கைக்கொரு கட்சி என பிரிந்து போயுள்ளனர். மக்களுக்கான அரசியலை முன்னெடுக்காது அவர்கள் தங்களுக்கான அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுள் தனியாக தெரிபவர் சித்தார்த்தன். அவர் தொடர்பில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு ஏன் செல்கிறார்..? மக்கள் பிரச்சினைகளில் எதனை இவர் பேசுகிறார்..? எப்போது பேசியுள்ளார்..? என பல வினாக்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பாராளுமன்றத்தில் உள்ள பலவீனமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் சித்தார்த்தனும் இடம்பெற்றிருக்கின்றரார்.

 

இவையெல்லாம் ஒருபுறமிருக்க “தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு  சித்தார்த்தனே தலைமை தாங்கி, அதனை முன்கொண்டு செல்ல வேண்டும் என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டில், நாங்கள் பயணிக்கவில்லை என்பதை பெரும்பாலானோரின் கருத்துக்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன. ஆகவே, அதற்கான பொறுப்புகளை தானும் ஏற்க வேண்டி இருப்பதுடன், நாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிற விடயம் நீண்ட காலமாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லையெனவும் அவர் கவலை வெளியிட்டிருந்தார். இருப்பினும், அதற்காக நாங்கள் இதை கைவிட்டுவிட முடியாது இதை கைகூட வைக்கின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக கருதுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில் கிறித்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் !

யாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

“சமையல் சிலிண்டர்கள் போலவே இந்த அரசும் வெடித்து சிதறும்.” – ஐக்கிய மக்கள் சக்தி

நாட்டில் சமையல் எரிவாயுக்கள் வெடித்துச் சிதறுவதைப் போன்று இந்த அரசும் விரைவில் வெடித்துச் சிதறும் என முன்னாள் காணி அமைச்சரும் தற்போதையாய் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில்,

“வடக்கு, கிழக்கில் இளைஞர்களையும் தேசிய விவசாயத்துறையில் இணைத்துக்கொள்ள – அவர்களுக்குத் தேவையான நிலத்தைப் பெற்றுக்கொடுக்க மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளதாக காணி அமைச்சர் அண்மையில் கூறினார். வடக்கு, கிழக்கில் 40 கிராமங்களுக்கு அதிகமான பகுதிகளில் 75 ஆண்டுகளாக அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை நாமும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தேன். அதேபோல் அவர்களின் காணிகளுக்கான உறுதிப்பத்திரத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் நிலங்களை சட்ட ரீதியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும். எனினும், சட்ட ரீதியில் பல இழுத்தடிப்புகள் இடம்பெறுவதால் அவர்களுக்கு உரிய நிலம் வழங்கப்படாது, நிலம் பாவிக்கப்படாது கைவிடப்பட்டுள்ளது.

தேசிய காணி கொள்கை ஒன்றை உருவாக்கி சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் இந்த அரசிடம் உள்ளதா என்ற கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

நான் காணி அமைச்சராக இருந்த காலத்தில் பல வேலைத்திட்டங்களைக் கொண்டு வந்தேன். அதேபோல் காணி சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தோம். சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தபோதும் ஆட்சி மாற்றத்துடன் அவை நிறுத்தப்பட்டுவிட்டன . மக்களின் காணிப் பிரச்சினைக்கு முறையான தீர்வுகளை வழங்குங்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்க வேண்டும். அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம்.

அதேபோல் மலையக மக்கள் பாரிய நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசின் முட்டாள்தனமான தீர்மானங்களே காரணம். மலையகத் தேயிலைத் தோட்டங்களைத் தனியார் மயப்படுத்தி, நிறுவனங்களுக்கு வேறு காரணிகளுக்காக விற்கும் நடவடிக்கை காரணமாக மலையகத்தைச் சார்ந்த எமது மக்கள் துன்பப்படுகின்றனர். சிறு தேயிலைத் தோட்டங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடுத்த ஆண்டில் பாரிய நெருக்கடி நிலையொன்று நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும்.

சமையல் எரிவாயுக்கள் வெடித்துச் சிதறுவதை போன்று இந்த அரசும் வெடிக்கும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் அரசுக்குள் ஏற்பட்டு வரும்  வெடிப்பைப் பார்க்கையில் அவ்வாறே நினைக்கத் தோன்றுகின்றது. இன்னும் குறுகிய காலமே இந்த அரசு இருக்கப்போகின்றது. அதற்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்க வேண்டும்” – என்றார்.

ஒமிக்ரோன் பயங்கரமானது இல்லை – இங்கிலாந்து விஞ்ஞானி அறிவிப்பு !

புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு பேரழிவை ஏற்படுத்தாதென இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா ஒமிக்ரான் குறித்து உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு பேரழிவை ஏற்படுத்தாது- இங்கிலாந்து விஞ்ஞானி –  Athavan News

அந்தவகையில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு குறித்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளதாவது, இது பேரழிவை ஏற்படுத்தாது.

மேலும் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி இருக்கின்றனர். ஆனால் அவர்கள், நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன். இதேவேளை தடுப்பூசியால் கிடைக்கின்ற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் கடன் வலைக்குள் சிக்கிய உகாண்டா – பறிபோகவுள்ள விமான நிலையம் !

ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள உகாண்டா நாடு ஏழ்மையான நிலையில் உள்ளது. அந்த நாடு சீனாவிடம் கடந்த 2015-ம் ஆண்டு கடன் வாங்கியது. கடனுக்கு ஈடாக உகாண்டாவில் உள்ள எண்டெபெ விமான நிலையம் உள்ளிட்ட சொத்துக்கள் சீனாவிடம் அடமானம் வைக்கப்பட்டது. 207 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தொகை வழங்கப்பட்டது. ஆனால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் உகாண்டா அரசு திணறி வருகிறது.
கடனை செலுத்த முடியாமல் போனால் எண்டெபெ விமான நிலையத்தை சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று கடன் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் உள்ள அந்த விதியை நீக்க வேண்டும் என்று உகாண்டா அரசு சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதனை ஏற்க சீனா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உகாண்டாவின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் சீனா வசம் செல்வது உறுதியாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாததால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவிகளை உகாண்டா கோர முடியாத நிலை உள்ளது.
அதேசமயம், உகாண்டா விமான நிலையத்தை சீனா கையகப்படுத்துவதாக வெளியான தகவலை உகாண்டாவின் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளரும், ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான சீன டைரக்டர் ஜெனரலும் மறுத்துள்ளனர்.