November

November

ரஞ்சன் ராமநாயக்கவுக்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய நான் தயார்.” – ஹரின் பெர்னாண்டோ

தற்போது சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ தயாராக இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய நான் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என்றும் தனது தேசியப் பட்டியல் பதவியை ராஜினாமா செய்தால், சஜித் பிரேமதாசாவுக்கு அல்லது கட்சியின் பொதுச் செயலாளருக்கே பொருத்தமான நபரை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க அதற்குத் தகுதியற்றவர் என இலங் கையில் எந்தவொரு நபரும் கூற மாட்டார்கள்.

வீதியில் இறங்கிப் போராட எனக்குத் தெரியும் என்றும் ரஞ்சன் பாராளுமன்றில் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் ஏனென்றால் தவறு செய்யாமல் ஒருவர் சிறைக்ஷகுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் ஆரம்பமானது தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம் – முக்கிய தமிழ்தேசிய கட்சிகள் பங்கேற்கவில்லை!

யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஸ் பட்லர் அதிரடி – இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இங்கிலாந்து !

டி20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை எதிர்த்தாடிய இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 101 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இயன் மோகன் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் வணிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பானுக்க ராஜபக்ஷ மற்றும் தசுன் சானக ஆகிய இருவரும் தலா 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மொய்ன் அலி, ஆதில் ரஷீத்,கிரிஸ் ஜோர்தன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலுள்ள நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் !

இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தபடும் ISIS அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாத ஒழிப்பு பிரினால் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய புலனாய்வு பிரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியை பரிசோதனை செய்த போது குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியசந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய அடிப்படையவாதியான சஹ்ரான் ஹசீமின் புகைப்படங்கள், குரல் பதிவுகள் மற்றும் காணொளிகள் குறித்த தொலைபேசியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டபாயராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – கிளாஸ்கோ நகரில் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் !

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச பருவ நிலைமாற்ற மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவருடைய வருகைக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ஷ கொலை குற்றவாளி என விமர்சிக்கும் விளம்பர பதாகைகள், லேசர் ஒளி காட்சிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் கிளாஸ்கோ நகரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

கோத்தபாய ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. கோத்தபய ராஜபக்சே செய்த படுகொலைகள் தொடர்பாக ஸ்காட்லாந்து பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன.

பதவிகளை பணயம் வைத்துள்ளோம் – பதறுகிறார் அமைச்சர் கம்பன்பில

பதவிகளை பணயம் வைத்து நானும் எனது குழுவினரும் போராடி வருகின்றோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய சட்ட அபிவிருத்தி அதிகார சபையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது பங்காளிகளுடன் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபடாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தின் பிரச்சினைகள் வெளியில் பேச வேண்டி இருந்தது. தற்போதைய அரசாங்கம் 16 கட்சிகளின் கூட்டமைப்பாகும். உள்ளக பேச்சுவார்த்தைகள் இல்லாத போது பிரச்சினைகள் நிரம்பி வழியும். பதவிகளை பணயம் வைத்து நானும் எனது குழுவினரும் போராடி வருகிறோம். எங்களை விரட்டினால் அந்தப் பதவிகளைப் பெற்றுவிடலாம் என நினைத்தவர்களே எம்மை அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கோருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

வயல் வரம்பில் நடக்கத் தெரியாதவர் விவசாய அமைச்சர் – மைத்திரி காட்டம்

விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை தொடர்பில் நான் கூறும் கருத்துக்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.
பகமூன பிரதேசத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசினாலும் அரசாங்கம் அதனை செவிமடுப்பதில்லை. விவசாயத்துறை அமைச்சர் வயலில் உள்ள வரம்புகளில் கூட செல்லத் தெரியாதவராவார். சில இராஜாங்க அமைச்சர்கள் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளால் என்னால் பொலன்னறுவை மாவட்டத்திற்கு செல்ல முடியாதுள்ளது என்று கூறினேன். இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த இராஜாங்க அமைச்சர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். எனினும் அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை. நான் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்க மாட்டேன். சேதன உரத்தினைப் பயன்படுத்தி விவசாயத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளை பழக்கப்படுத்த வேண்டும் என்றார்.

பொறுப்பின்றிச் செயற்பட்டால் மீண்டும் முடக்கம் – எச்சரிக்கிறார் ஹேமந்த ஹேரத்

நாட்டில் தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. அதாவது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்படவில்லை. போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற திருமண வைபங்கள், மரண சடங்குகள், உற்சவங்கள், மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துவது தெளிவாகிறது.

எனவே நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும். இவ்வார இறுதி நீண்ட விடுமுறை காலமாகும். இதன் போது அநாவசிய பயணங்களை தடுக்க முடியுமெனில் அதுவே முக்கியத்துவமுடையதாகும்.
தீபாவளி பண்டிகை உள்ளிட்ட சமயம் சார் நிகழ்வுகளில் அத்தியாவசியமானவர்கள் மாத்திரம் இவற்றில் பங்குபற்ற வேண்டும். இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்துகின்றோம். அத்தோடு ஏதேனுமொரு வகையில் தொற்று அறிகுறிகள் அல்லது உடல்நலக் குறைவு காணப்படுமாயின் அவ்வாறானவர்கள் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

“தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாததாலேயே தமிழர்கள் “ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் இல்லை.” – ஞானசார தேரர்

ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையில்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மூன்று முஸ்லீம் உறுப்பினர்கள் கூட அவசியமில்லை என நான் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தாலும் இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கின்றார்களா..? முஸ்லீம்கள்இருக்கின்றார்களா..? என கேட்கின்றார்கள் என தெரிவித்துள்ள அவர் ஏன் அப்படி கேட்கின்றார்கள் திறமையே முக்கியமானது திறமைக்கு வாய்ப்பளிக்கும்போது தமிழர்-முஸ்லீம்-சிங்களவர்கள் அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

கண்டி தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டால் அதனை யாழ்ப்பாண தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவே உண்மை சொந்த சமூகத்திற்குள்ளேயே ஒற்றுமை இல்லாத சூழ்நிலையில் பிரதிநிதிகளை தெரிவு செய்வது குறித்து நாங்கள் கவனமாகயிருக்கவேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.

“குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுவேன்.” – விவசாயத்துறை அமைச்சர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எவ்வித ஊழல் – மோசடி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுவேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று இரசாயன உர இறக்குமதி நிறுவனங்களால் வீண் அச்சத்தை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு நாட்டில் எவ்வித உணவு தட்டுப்பாடும் ஏற்படப் போவதில்லை.

என்னுடைய உருவப்படங்கள் வைக்கப்பட்ட கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இலைகளை ஊட்டுகின்றனர். விவசாயிகள் எந்த இடத்திலும் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள்.

இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இடம்பெறுகிறது. இவ்வாறு எதனை செய்தாலும் நாம் முன்னெடுத்துச் செல்லும் மாற்றம் சரியானது என்பது எனது மனசாட்சிக்கு தெரியும்.

அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எவ்வித ஊழல் – மோசடி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுவேன் என்றார்.