03

Monday, December 6, 2021

03

பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வி – கோலியின் 9 மாத மகளுக்கு பாலியல் மிரட்டல் !

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 24-ம் திகதி நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இதற்கிடையே, இந்திய அணி தலைவர் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு மர்ம நபர் ஒருவர் ஒன்லைன் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த டெல்லி பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், விராட் கோலி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த விசாரணையை டெல்லி மகளிர் ஆணையம் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதுதொடர்பாக டெல்லி போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பிய மகளிர் ஆணையம், மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரம், எப்ஐஆர் நகல், கைது செய்யப்பட்ட விவரம் தொடர்பாக 8-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.
இதுகுறித்து மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறுகையில், டுவிட்டர் மூலம் 9 மாத குழந்தைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது அவமானத்திற்கு உரியது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களை அளிக்கும்படி போலீசாரிடம் தெரிவித்தோம் என்றார்.

“எவரையும் தோற்கடிப்பதற்காக நாம் கட்சியை உருவாக்கவில்லை.” – பஸில் ராஜபக்ஷ

எவரையும் தோற்கடிப்பதற்காக நாம் கட்சியை உருவாக்கவில்லை, நாட்டு மக்களை வெற்றிபெற வைக்கவே கட்சியை உருவாக்கினோம் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 5ஆவது தேசிய மாநாடு நேற்று கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியை எவரையும் தோற் கடிக்கும் நோக்கில் நாம் உருவாக்கவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெற வைக்கவே கட்சியை கட்டியெழுப்பினோம். இன்றும் அதே கொள்கையுடன் பயணிக்கின்றோம்.

எமது கட்சிக்கு நாடு முழுவதும் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அங் கத்தவர்கள் உள்ளனர். எதிரிகளால் விடுக்கப்படும் சவால்களைக் கூட நாம் ஆசிர்வாதமாக ஏற்றே பயணித்தோம். அத்தகைய சவால்களே எம்மை பலப்படுத்தின. எதிர்காலத்திலும் பிரமாண்டமான அரசியல் வெற்றிகளை பெறுவோம். அதன் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவைகள் வழங்கப்படும் என்றும் விரோதம், வைரமின்றி அனைவருடனும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியானது ஒரு இனத்துக்கு, மதத்துக்கு, குலத்துக்குரிய கட்சி கிடையாது. சகலருக்குமான கட்சியாகும். எமது சகோதரக்கட்சிகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவோம். எதிர்காலத்தில் பல சவால்கள் உள்ளன. அவற்றுக்கு முகங்கொடுப்போம். பின்வாங்க வேண்டாம். கிராம மட்டத்தில் உரிய தலைமைத்துவத்தை வழங்குமாறு கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

“தைரியமான மனிதர்கள் யார் என்றால் இங்குள்ளவர்களையே நான் குறிப்பிடுவேன்.” – கிளிநொச்சியில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க

தைரியமான மனிதர்கள் யார் என்றால் இங்குள்ளவர்களையே நான் அழைத்து வந்து காண்பிக்க வேண்டும். தைரியமுள்ள மனிதர்கள் இங்குதான் உள்ளனர்.” என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கிளிநொச்சியில் வைத்து தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணி வெடி அகற்ற்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலைதான் தெற்கு பகுதியில் இருந்து இங்கு வந்தேன். பாடசாலைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் செல்வதனை கண்டேன். தெற்கு பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்லும் போது சில அறிவுறுத்தல்கள் பதாதைகள் ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றது. ஆனால் இங்கு அவ்வாறான நிலை இல்லை. அது மிகவும் சந்தோசமான விடயமாக உள்ளது. அதேபோன்று இங்கு விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபடுவதனையும் அவனதானித்தேன். சுபீட்சத்தை நோக்கி எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இங்குள்ள விவசாயிகள் பெரும் பங்காற்றுகின்றனர்.

தைரியமான மனிதர்கள் யார் என்றால் இங்குள்ளவர்களையே நான் அழைத்து வந்து காண்பிக்க வேண்டும். தைரியமுள்ள மனிதர்கள் இங்குதான் உள்ளனர். இங்கிலாந்து சுவீடன் நோர்வே உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து இங்கு புதைக்கப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சுபீட்சத்தை நோக்கிய இலங்கை என்ற தொனிப்பொருளில் மக்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மிக குறைந்த அளவிலான கண்ணிவெடி அகற்றும் பணிகளே இங்கு காணப்படுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வருட வரவு செலவு திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்படும். அதன் ஊடாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கான பணம் அதிகளவில் பெற்றுக்கொள்ளமுடியும். நான் எதிர்பார்க்கின்றேன் மிக குறுகிய காலத்திற்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளிலிருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐசிசி ரி20 பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் முதலிடத்தில் வனிது ஹசரங்க !

ஐசிசி ரி20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க முதல் இடத்தை தனதாக்கி உள்ளார்.

முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரீஷ் ஷம்சியை பின்தள்ளி அவர் முதல் இடத்தை தனதாக்கியுள்ளார்.

அத்துடன் சகலதுறை போட்டியாளர்கள் வரிசையிலும் அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“மாகாணசபைகளே தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை முறையை முழுமையாக அமுல்ப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

முகமாலையில் சுமார் 316 ஏக்கர் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“1987ம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் கிடைத்த வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை முறையை முழுமையாக அமுல்ப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை அன்று எனக்கிருந்தது. இதே கொள்கையையே நான் இன்றும் கொண்டுள்ளேன். அப்போது இதை எதிர்த்தவர்களும் பின்னர் மாகாணசபை முறையை ஏற்றுக்கொண்டு தேர்தல்களின் போட்டியிட்டு பதவிகளையும் பெற்றுக்கொண்டனர்.

அப்போதே இதை ஏற்றுக்கொண்டு அமைதிவழியில் நல்லிணக்க வழிமுறையில் தமிழ் மக்களுக்குத் தீர்வுகாண முனைந்திருந்தால் அதன் பின்னர் ஏற்பட்ட யுத்த அழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வாறில்லாமல், அழிவு யுத்தத்ததைத் தொடர்ந்ததன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் சொல்கிறேன், இந்த அழிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடாது என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது.

எனவே, தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தினை வளர்ப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதே இலக்காக இருக்கின்றது.

மேலும், தனக்கு கிடைத்திருக்கின்ற அமைச்சு அதிகாரத்தின் ஊடாக பலமான பொருளாதார கட்டமைப்புக்களை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இச்சந்தர்ப்பத்தினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேணடும் எனவும் கேட்டுக்கொண்டார்

“ராஜபக்ஷக்கள் அரச சொத்துக்களை விற்கின்றனர்.” – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு !

“அரச சொத்துக்களை விற்பனை செய்ய மாட்டோம் என ஆட்சிக்கு வந்த ராஜபக்ஸ அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தில் அரச சொத்துக்களை பங்கிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தெரிவித்துள்ளார்.

வவுனியாவில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் ஒரே நீதி, ஒரே சட்டம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இங்கு நீதி இல்லை. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். எமது கட்சி கடந்து வந்த காலங்களில் பல ஜனநாயக ரீதியான தலைவர்களை உருவாக்கியது. மக்களுடைய ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். தற்போது உள்ள சஜித் பிரேமதாச அவர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைவராக உள்ளார். குறிப்பாக இளைஞர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராவார்.

கடந்த தேர்தலில் வவுனியா  மாவட்டத்தில் கணிசமான மக்கள் அவருக்கு வாக்களித்து இருந்தனர்.  அதற்கு நாம் நன்றிக் கடனாக இருப்போம். இந்த நாட்டில் அனைத்து மதங்களும் வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். 5 மதத்தவர்களும் சமனாக வாழக் கூடிய நிலையை உருவாக்க வேண்டியது எமது பொறுப்பு. நாட்டில் தற்போது கோவிட் தொடர்பான சிறந்த கட்டமைப்பு இல்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. எந்த பிரச்சனைக்கும் சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை. கோவிட் தொற்று காலத்தில் எந்த விடயமும் நேரம் கடந்த விடயமாகவே எங்களுக்கு கிடைத்தது.

சரியான நேரத்தில் தீர்மானங்களை எடுத்திருந்தால் தொற்றாளர்கள் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம். கோவிட் தொற்றால் மரணமடைந்தவர்களை குறைத்திருக்கலாம். இங்கு சரியான நிர்வாகம் இல்லை என்பதை அழுத்திச் சொல்கின்றோம். இந்த அரசாங்கத்தின் சீனி மோசடி. பருப்புக்கான விலை, தேங்காய் எண்ணெய் சந்தையில் இல்லை. ஒரு ரின் மீனைக் கூட வாங்க முடியவில்லை. எரிவாயுவின் பயங்கர அதிரடியான விலையேற்றம். மக்கள் வாழ முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் மாற்று அரசாங்கததை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாட்டில் டொலர் இல்லை. பசளை இல்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் எங்களுடைய ஆட்சியில் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவித்தோம். வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தோம். தாரளமாக டொலர்கள் இருந்தன. எங்களுடைய காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. உள்ளுர் உற்பத்தி நிறைவு பெற்றிருந்தது. எனவே அதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பசளை தொடர்பில் பேசப்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள சிலர் அந்த பசளை வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசாங்கத்தில் உள்ள இன்னும் சிலர் அந்த பசளை வேண்டாம் என்கிறார்கள்.

அவர்களுக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான அரசாங்கத்தை எங்களுடைய அரசாங்கமாக வைத்திருக்க வேண்டுமா? எனவே, சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சி மலர நாம் செயற்பட வேண்டும்.

குறிப்பாக அரச சொத்துக்களை விற்பனை செய்ய மாட்டோம் என ஆட்சிக்கு வந்த ராஜபக்ஸ அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தில் அரச சொத்துக்களை பங்கிட்டு விற்பனை செய்து வருகின்றனர். எனவே ஊழல் நிறைந்த, வளங்கள் இல்லாத இந்த ஆட்சியை மாற்ற வேண்டும். இந்த நாட்டின் முதுகெலுப்பாகவுள்ள விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு நாம் சஜித் பிரமேதாசவை பலப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சிங்கள மொழி அரச சேவையாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் !

சப்ரகமுவ மாகாணத்தில் கடமை புரியும் சிங்கள மொழி அரச சேவையாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் என்பன இணைந்து இந்த செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இரத்தினபுரி புஸ்சல்ல பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான தமிழ் மொழி கற்பித்தல் நடவடிக்கைகளை சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஊழியர்கள் மத்தியில் தமிழ் மொழியில் உரையாற்றினார்.

கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை – யாழில் ஆரம்பம் !

கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கிராமத்துக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து கள மட்டத்தில்  பொதுமக்களுக்கு சேவை - யாழ்ப்பாணத்தில் பணிகள் ஆரம்பம் - Muthalvan News

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் அந்தக் கிராம சேவையாளர் பிரிவில் வாரத்தில் மூன்று நாள்கள் சேவையில் ஈடுபடவேண்டும்.

கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் பிணக்குகளைத் தீர்த்துவைத்தல் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அந்தக் கிராமத்துக்கு கடமைக்கு அமர்த்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெடுப்பார்கள்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து வருகை தந்த மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முயற்சி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

“இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் திட்டம் ஆரம்பம்.” – தொடக்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

“இலங்கைத் தமிழா்களின் நலன்காக்க தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவா்கள் அல்லர்.” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 106 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக முதல் கட்டமாக ரூ. 142.16 கோடி மதிப்பில் 3 ஆயிரத்து 510 புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதைத் தவிர, முகாம்களில் ரூ.30 கோடியில் அடிப்படை வசதிகள், ரூ.12.41 கோடியில் உயா்த்தப்பட்ட பணக் கொடை, ரூ.4.52 கோடியில் கைத்தறித் துணிகள் என ரூ.225.86 கோடி மதிப்பிலான 12 வகையான நலத்திட்ட உதவிகள் செயற்படுத்தப்படவுள்ளன.

இதனடிப்படையில், வேலூா் மேல்மொணவூா் முகாமில் உள்ள 220 குடும்பங்களுக்கு ரூ. 8.91 கோடி மதிப்பில் புதிய வீடுகள் உட்பட ரூ.10.03 கோடி மதிப்பில் 11 நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடக்கிவைத்தாா்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“இலங்கைத் தமிழா்கள் என்பது ஒரு அடையாள சொல். மற்றபடி தமிழா்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். இலங்கைத் தமிழா்கள் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவா்கள்.

இலங்கையில் தமிழா்கள் பாதிக்கப்பட்ட காலம் முதலே அவா்களுக்காக குரல் கொடுத்துவரும் இயக்கம் திமுக. 1983ஆம் ஆண்டில் அவா்கள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனா். இந்த முகாம்கள் மோசமாக இருந்த நிலையில் ஏராளமான திட்டங்களை 1997இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி செயற்படுத்தியதால் தன்னிறைவு அடைந்தனா்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் இலங்கைத் தமிழா்களுக்காக எந்த நன்மையும் செய்யப்படவில்லை. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு மீண்டும் நல்வாழ்வுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அகதிகள் முகாம்கள் என்பதை மாற்றி, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அறிவிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழா்களின் நலன் காக்க தி.மு.க.வும் தி.மு.க அரசும் எப்போதும் துணை நிற்கும். அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்லர். என்னை இலங்கை தமிழா்கள் உடன்பிறப்பாக நினைத்துக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“சினோபார்ம் தடுப்பூசி மூன்று மாதங்களே தாக்குப்பிடிக்கும்.” – விசேட வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா

இலங்கையில் உபயோகிக்கப்படுகின்ற கொரோனா தடுப்பூசிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியே செயற்திறன் குறைந்தது என விசேட வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இலங்கை மருத்துவ சங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

குறித்த தடுப்பூசியின் மூலம் கிடைக்கப் பெறும் பாதுகாப்பு 6 மாதங்களின் பின்னர் குறைவடையத் தொடங்கும் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டலுவல்களின் தரவுகள் மற்றும் பேராசிரியர் நீலிகா மலவிகேவினுடைய ஆய்வுகளின் அடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் அதன் மூலம் கிடைக்கப் பெறும் பாதுகாப்பு குறைவடையும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 – 6 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்றாம் கட்ட தடுப்பூசியை செயலூட்டியாக வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதே வேளை பைசர் மற்றும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி , அறிகுறிகள் தென்பட்டாலும் 6 மாத காலத்திற்கு நோய் தாக்கத்தின் தீவிர நிலைமையை அடைதல் மற்றும் மரணமடைதல் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரு கட்டங்களாக சினோபார்ம் தடுப்பூசியை பெற்றிருந்தாலும் , மூன்றாம் கட்டமாக பைசர் அல்லது அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியை வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார்.