11

11

இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் 09 மாதக்குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது !

டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம்  தோல்வியடைந்தது.  இரண்டாவது ஆட்டத்தில்  நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.  இந்தியா அணி தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது.  இதுகுறித்து, இந்திய வீரர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில்  பலர் விமர்சனம் செய்து வந்தனர்.  இந்த விமர்சனங்களை கண்டித்து தலைவர் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில்  நபர் ஒருவர் கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து, தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையமும் இந்த மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தன. பின்னர், சம்பவம் குறித்து விசாரணை குறித்து நடத்தப்பட்டு வந்தது.
மேலும்.  மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர்.  இதனைத்தொடர்ந்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் இறங்கினர்.  விசாரணையில், தெலுங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த அகுபதினி ராம் நாகேஷ் (23) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.  மேற்கொண்ட விசாரணையில்,  வாலிபர் நாகேஷ்  சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  பணியாற்றி  வந்துள்ளார்.  தேடப்பட்ட நிலையில், மும்பை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.
மேலும், கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நாகேஷ் தனது ட்விட்டர் பெயரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளதைக் கண்டுபிடித்த போலீசார், வாலிபர் மீது ஐபிசி பிரிவு 374 (ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 மற்றும் 67 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் பல சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகம் – கனடாவில் தமிழர் கைது !

கனடாவின் ஒஷாவா பகுதியை சேர்ந்த 70 வயது நபரை 25 ஆண்டுகளுக்கு முந்தைய துஸ்பிரயோக வழக்கில் ரொறன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், தற்போது 70 வயதாகும் அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல் 1996 வரையான காலகட்டத்தில் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

9 முதல் 14 வயதுடைய சிறார்களை இவர் துஸ்பிரயோகம் செய்துள்ளது ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமக்கு நெருக்கமான மற்றும் நன்கு அறிமுகமான சிறார்களையே இவர் சீரழித்துள்ளதும், ஸ்கார்பரோ பகுதியில் பல இளம் பெண்களை இவர் துஸ்பிரயோகத்திற்கு இலக்காக்கியதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபர் 28ம் திகதி, அரசகுமார் சவரிமுத்து மீது உத்தியோகப்பூர்வமாக 13 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், அவர்களும் பொலிஸ் அதிகாரிகளை அணுகி நடந்தவற்றை புகாராக தெரிவிக்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

“சாக்கு போக்கு சொல்லுவதை ஜனாதிபதி நிறுத்த வேண்டும்.” – ஐக்கிய மக்கள் சக்தி அறிவுரை !

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு 20% ஆல் குறைக்கப்பட்டுள்ளதாகவும்  2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3% ஆல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் இது தொடர்பில் பேசிய அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது இது தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றுக்கொள்ள முடியும்.  வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.  உண்மையில் ஒதுக்கீடு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர். ஒரு கிளர்ச்சி ஏற்படும் போது, ​​எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதற்கு பதிலாக அரசாங்கம் தனது கொள்கைகளை திருத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துவதைத் ஜனாதிபதி தவிர்க்க வேண்டும்..

அதற்கு பதிலாக மக்கள் செவிசாய்க்கவும், ஏனையவர்களின் குறைகளைக் காணக்கூடாது என்பதற்காக தனது கொள்கைகளை திருத்தவும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

 

தடுப்பூசி போடா விட்டால் பொது இடங்களில் நுழையத்தடை – வரவுள்ள புதிய சட்டம் !

இலங்கையில் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கண்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தின் முதலாம் கட்டத்தை திறந்து வைக்கும் போது சுகாதார அமைச்சர் இதனை கூறினார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும். அதற்கமைய, இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை விதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

“சஹ்ரான் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.?” – ரணில் கேள்வி !

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என்பது ஆதாரங்களின்படி தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் சஹ்ரானின் மனைவி விசாரிக்கப்பட்டதாகவும், தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை சந்தித்ததாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். தான் ஆதாரங்களின் பதிவுகளை ஆய்வு செய்ததாகவும் அவருடைய கணவர் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்தது பற்றி எந்த ஆவணங்களும் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சஹ்ரானுக்கு புலனாய்வுப் பிரிவுகளுடன் அல்லது பாதுகாப்புப் படையினருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இதே நேரம் சஹ்ரான் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது , “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதப் பயிற்சிப் பெற்ற எந்தவொரு நபராலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விடயத்தை யாரும் அரசியல் மயப்படுத்தக்கூடாது. விசாரணை அறிக்கைகளை ஏன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதுவே எமது கேள்வியாகும். சாதாரணமாக எந்தவொரு ஆணைக்குழுவில் விசாரணைகள் நடக்கும்போதும் சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.

இவற்றை சபையில் இருந்து மறைக்க முடியாது. அவ்வாறு விசாரணைகளை மறைப்பது எமது வரப்பிரசாதங்களை மீறும் செயற்படாகும். தாக்குதல் இடம்பெற்ற உடனனேயே, பொலிஸாரும் சி.ஐ.டியினரும் இணைந்துதான் பொரளை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த சூத்திரதாரிகளை கைது செய்தார்கள். மாறாக புலனாய்வுப் பிரிவினர் அல்ல என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

குற்றத்தை நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டு உடன் விலகுவேன். – மைத்திரிபால சிறீசேன காட்டம் !

நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகுவதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மஹிந்தானந்த தெரிவித்த கருத்துக்குத் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் ஜனாதிபதி ஒருவா் ஓய்வு பெற்ற பின்னா், அவருக்கு அமைச்சா் ஒருவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தாம், இன்று வசிப்பது அமைச்சா் ஹெகலிய ரம்புக்வெல்ல வசித்த வீடாகும் என்றும்  அவர் தெரி வித்துள்ளார்

ஆப்கானில் 3 மாதங்களில் 600 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது – தலிபான்கள் அறிவிப்பு !

கடந்த 3 மாதங்களில் 600 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டின் பாதுகாப்பு நிலவரமும் மேம்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், ஆகஸ்ட் 30 ஆம் திகதி காபூல் சர்வதேச விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி ஐஎஸ் தீவிரவாதிகள் தலிபான்களுக்கு சவால்விடுத்தனர். அதனைத் தொடர்ந்து மசூதிகளில் தாக்குதல், காபூல் மருத்துவமனையில் தாக்குதல் என ஆப்கானிஸ்தானின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாகிவிடக் கூடாது என்பதுதான் தலிபான்களுக்கு உலக நாடுகள் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீச்சு – சந்தேகநபர் கைது !

பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மீது நேற்றுமுன்தினம் (09.11.2021) பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிலினி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் பம்பலப்பிட்டி, அதிமலே வீதியை சேர்ந்த ஹுசேமா அப்பாஸ் கென்போய் என்ற நபரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது வீட்டில் இருந்து இரண்டு பெற்றோல் குண்டுகளை கொண்டுவந்து பள்ளிவாசல் மீது வீசியுள்ளார். எனினும் சந்தேகநபரால் வீசப்பட்ட இரண்டு பெற்றோல் குண்டுகளும் வெடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் எவ்வித வாக்குமூலமும் வழங்கவில்லை என காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்..” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளதால்  வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேணும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்.இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். எனவே அவர்களுக்கு விரைவாக இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக தபால் மூலமாகவேணும் அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தும் என நம்புகின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு குற்றவாளியை ஜனாதிபதி செயலணியின் தலைவராக்கியுள்ளார்கள்.” – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கவலை !

“இனங்களுக்கு இடையேயான இன ஒற்றுமையை ஒழிக்கவா “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி..? என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் பாதுகாப்புக்கு சம்பந்தமில்லாத சில சட்டங்களை பாதுகாப்புக்கு தொடர்பில்லாமல் நூற்றாண்டு காலமாக சில சமூகங்கள் பின்பற்றிவரும் தனியார் சட்டங்களை மாற்றவேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி செயலணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

தனியார் சட்டங்களுக்கும் பாதுகாப்புக்கும் எந்த அடிப்படையில் தொடர்பிருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன். இன ரீதியாக சமூகங்களை பிளவுபடுத்தி சமூகங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற நிலையை இந்த செயலணி ஏற்படுத்திவிடுமா என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செயலணிக்குழுவுக்கு தலைமை தாங்கும் மதகுருவான கலகட அத்தே ஞானசார இந்த நாட்டின் பல நீதிமன்றங்களை அவமதித்து, சட்டத்தை கையிலெடுத்ததனால் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவர். அப்படிப்பட்டவர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த செயலணி மீது நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது.

இது சம்பந்தமாக நீதியமைச்சரே தனக்கு தெரியாமல் நடந்ததாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் அதிருப்தியுற்று இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நியமன விடயம் தொடர்பில் எமது நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற சகல இன மக்களும் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவரும் எங்களை இந்த செயலணியின் செயற்பாடுகளினால் அமைதியின்மையும், பிளவையும் உண்டாக்கிவிடுமா எனும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நாட்டை நேசிக்கும் இலங்கையன் என்ற ரீதியில் செயலணி சகல விடயங்களுக்கும் ஆப்பாக அமைந்துவிடும் எனும் கவலை என்னுள் உருவாகியுள்ளது. இந்த நாட்டில் நிம்மதியான, ஒற்றுமையான, நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அரசிலுள்ள சில தலைவர்கள் முயற்சிக்கும் இந்த தருணத்தில் நாங்கள் வேண்டிக்கொள்வது “ஒரே நாடு ஒரே சட்ட செயலணி”யை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் பொருளாதார உயர்வுக்கான திட்டங்களை வகுத்து மக்களின் வாழ்வுக்கு உதவும் நல்ல திட்டங்களை முன்வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.