13

13

“சுமையாக மாறியுள்ள அரச சேவையாளர்கள். ஒரு சலுகையையும் இப்போதைக்கு இல்லை.” – நிதியமைச்சர் பசில் ராஜபக்ச

“அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது. அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமாயின் அதற்காக பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும்.” என  நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக  கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்  போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது. அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமாயின் அதற்காக பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும். இதன் காரணமாக மேலும் ஒரு வருடத்திற்கு அரச சேவைக்கு பொது நிதியை செலவிட முடியாது.

இலங்கை சுதந்திரமடையும் போது நாட்டின் பொது மக்களில் 118 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். எனினும் தற்போது 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார். இந்த அரச ஊழியர்களில் பலர் காலம் கடந்து திருமணம் செய்கின்றனர். இந்த அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திலேயே அவர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர் என்பது மட்டுமல்ல, உயர்கல்வியை கற்க ஆரம்பிக்கின்றனர்.

இது அரச ஊழியர்களுக்கு பெரிய பிரச்சினை. இதன் காரணமாகவே நாங்கள் அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மேலும் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளோம். தற்போது அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 55 இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

அத்துடன் அரச சேவைக்கு அனுபவம் கொண்ட ஊழியர்கள் அவசியம். எதிர்காலத்தில் வருடாந்தம் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் சதவீதத்திற்கு அமைய புதிய தொழில் வாய்ப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

பாடசாலை மாணவி கடத்தல் சம்பவம் – மூவர் கைது !

எம்பிலிபிட்டியவில் 16 வயது பாடசாலை மாணவியை கடத்தியமை தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (12) பகல் பாடசாலையிலிருந்து வௌியேறிய போது, முச்சக்கரவண்டியில் சென்ற மூன்று பேர் மாணவியை பலவந்தமாக தூக்கிச்சென்றுள்ளனர்.

செவனகல பகுதிக்கு கடத்திச்செல்லப்பட்ட மாணவி, அங்குள்ள பாழடைந்த வீடொன்றினுள் வைத்து, ஒருவரால் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும், மாணவி குறித்த நபர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

தற்போது மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

“ஆயுதங்கள் கனரக வாகனங்களுடன் பாராளுமன்றம் சுற்றிவளைக்கப்படும்.” – வெளியாகியுள்ள பரபரப்பு எச்சரிக்கை!

ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைக்கும் தயார் நிலைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.

கனரக வாகனங்களும் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் ஆயுதங்களுடன் கூடிய இந்தச் சுற்றிவளைப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் அன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதனால், நாட்டில் நிலவும் பசளைப் பிரச்சினை அன்றைய தினத்திற்கு முன்னர் தீர்க்கப்படவில்லை என்றால் இந்தச் சுற்றிவளைப்பு நடக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறு விவசாயிகளுடன் ஆயுதங்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளது என நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டு வரப்படவுள்ளன என்பது குறித்த தகவலை அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்பதற்காக ஒரு வரவு செலவுத்திட்டம்.” – இரா.சாணக்கியன்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்தார்.

​​வெளிநாட்டு முதலீடுகள் மூலமே வருவாயை ஈட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும் நிலையில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வெட் மற்றும் வரிவிதிப்பு முறை மாற்றப்பட்டாலும், தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அது போதுமானதாக இருக்காது என இரா.சாணக்கியன் கூறினார்.

கடனை அடைப்பதற்கும் கையிருப்பில் டொலர்களை வைத்திருப்பதற்குமான எந்தவித திட்டங்களும் இந்த வரவுசெலவு திட்டத்தில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையின் பிரச்சினைகளுக்கும் தீர்வை தர முடியாத வரவு – செலவு திட்டத்தை முன்வைத்துள்ள ராஜபக்ஷக்கள் !

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிப்பதை அவரின் மூன்று சகோதரர்கள் முன்வரிசையில் அமர்ந்து அவதானிக்கும் படத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா மக்களின் சீற்றத்தை குறைப்பதற்கு இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்

தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

முன்வரிசையில் அமர்ந்துள்ளமூன்று ராஜபக்ச சகோதரர்கள் நான்காவது சகோதரர் தனது முதலாவது வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிப்பதை செவிமடுக்கின்றனர்.

பின்வரிசையில் உள்ள ராஜபக்சாக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மக்களின் சீற்றத்தினை குறைப்பதற்கு என்ன செய்யபோகின்றார்கள் என பார்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை “2022 வரவு செலவு திட்டம் அடிப்படை பிரச்சினைகளிற்கு தீர்வை காணவில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளிற்கு தீர்வை வரவுசெலவுதிட்டம் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுதிட்ட பற்றாக்குறை மற்றும் அந்நியசெலாவணி நெருக்கடி ஆகியவற்றிற்கு தீர்வை காண்பதற்கு வரவுசெலவுதிட்டம் தவறியுள்ளது, ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்தவேண்டிய விடயங்கள் எவையும் இல்லை,ஏற்றுமதி அதிகரித்தால் மாத்திரமே அந்நிய செலாவணி நாட்டிற்குள் வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் அதிபர் சம்பள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நிதிஒதுக்க்ப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள எரான் விக்கிரமரட்ண ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதா என உறுதியாக தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுதீயத்திற்கு ஒதுக்கப்பட்டநிதியும் போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பிரதான பதவியை நிராகரித்த கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் !

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பிரதித் தலைவர் பதவியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa) தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் (R.Sampanthan) தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் அந்த பதவியை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன் அதில் 125 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.