17

17

இரா.சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என குறிப்பிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறீதரன் வழங்கிய பதில் என்ன..?

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை கீழ்த்தரமான அரசியல்வாதியென திட்டித்தீர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், எந்தத் தகுதியும் திலீபனுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று  கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை “மொஹமட் சாணக்கியன்“ என தனது உரையில் கூறியிருந்தார்.

எனினும் இதன்போது சாணக்கியன் சபையில்லை என்பதால் உடனடியாக ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி திலீபனின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , இராசமாணிக்கம் இராஜபுத்திர சாணக்கியன் என்கிற பெயரை மாற்றி மொஹமட் சாணக்கியன் திலீபன் தனது உரையில் கூறுகிறார். இதுவொரு கீழ்த்தரமான செயலாகும். அதனால், இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை தவறாக கூறுவது பாராளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு முரணானது என்றார். இந்த (திலீபன்) படிக்காத பாராளுமன்ற உறுப்பினரை திருத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழில் வீட்டின் மீது பெற்றோல்குண்டு வீசுமாறு வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணம் – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் !

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த மாதம் 10ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் CCTV காட்சிகளின் அடிப்படையில் , உடுவில் மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் , தாக்குதல் நடத்துமாறு தமக்கு வெளிநாட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து , யாழில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு தொடர்புள்ளதா..? என பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா !

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156 லட்சம் கோடி டொலராக இருந்தது. அது 2020-ம் ஆண்டில் 514 லட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக இருந்துள்ளது.

இதன் மூலம் சீனா நாட்டின் சொத்து மதிப்பு அதி வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக சீனா ஆவதற்கு முன்பு 2000-ம் ஆண்டில் அந்நாட்டின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டொலராக இருந்தது.

2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கு மேல் 10 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.

மேலும் உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மற்றவைகள் உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவு சார் சொத்துக்கள், காப்புரிமைகளில் உள்ளன.

“கஞ்சா ஏற்றுமதியே இலங்கையின் கடன் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு.” – நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது. கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்ததானியாவில் மனைவியை குத்திக்கொலை செய்த இந்தியவம்சாவளி நபர் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

பிரித்தானியாவில் மனைவியைக் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) ஆகியோர் பிரித்தானியாவின் மில்டன் கினிஸ் நகரில் வசித்து வந்துள்ளதுடன், இருவருக்கும் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் ஒன்றாக போதைப்பொருள் பயன்படுத்தும்போது, போதைப் பொருள் வழங்கும் ஆண் நபருக்கும், தனக்கும் உள்ள தொடர்பு குறித்து ரஞ்சித் கில், அவரது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அனில் கில், கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தைப் போர்வையில் சுற்றி அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் அவர் வீசி சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து அயலவர்கள் அளித்த முறைப்பாடுக்கமைய, அனில் கில்லை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலதிக விசாரணையில் மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்ததுடன், அதில் அனில் கில் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதற்கமைய, குற்றவாளியான அனில் கில் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நடனக்கலைஞருக்கு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது !

இலங்கையின் நடனக் கலையைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேனவுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லேவினால் அலரிமாளிகையில் வைத்து இன்று (17) இந்த விருது வழங்கப்பட்டது.

வருடந்தோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, 2020ஆம் ஆண்டிற்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேனவுக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் ஹிந்தி மொழியைப் பிரபலப்படுத்தி இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்துக் கடந்த 8ஆம் திகதியன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தினால் வழங்கப்பட்ட இவ்விருதை, பேராசிரியர் இந்திரா தசநாயக்க சார்பில் அவரது மகள் வத்சலா தசநாயக்க பெற்றுக்கொண்டார்.

கலாநிதி பண்டித் டப்ளிவ்.ஏ.அமரதேவ 2002 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு !

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் 1-ந்திகதி அந்த நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஆங் சான் சூகி, மட்டுமின்றி முன்னாள் அதிபர் வின் மைன்ட் மற்றும் மியான்மர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் மீதும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றதும், இதனை ஏற்க மறுத்த ராணுவம் புரட்சி செய்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

100 ரூபாய் வரை விலை அதிகரிக்கப்படவுள்ள சிகரட் ஒன்றின் விலை – சமாதி ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிவிப்பு !

சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரட் ஒன்றின் விலையை ரூபா 5 ஆல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த வருடம் அரசாங்கம் சிகரெட்டிலிருந்து 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக, சுகாதார அமைச்சின் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விலைச் சூத்திரத்தின்படி 2022 ஆம் ஆண்டில் ஒரு சிகரெட்டின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்பதுடன், அதனை அண்மையில் நிதியமைச்சர் வரவு செலவு திட்ட யோசனையாக முன்வைத்து, சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு சிகரெட்டின் விலை 70 ரூபாவாக உள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

இவ்வாறு சிகரெட் ஒன்றினால் அதிகரிக்கின்ற 5 ரூபா நாட்டின் வரி வருமானத்தில் நேரடியாக சேரும். இதில் 5 சதம் கூட நாட்டின் புகையிலை தொழிலுக்கு சொந்தமில்லை. இன்னும் 5 வருடத்தில் ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபாவை நெருங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று சிகரட் பாவனையால் நாளாந்தம் 60 பேர் மரணமடைகின்றனர். விலை சூத்திரத்தின் மீதான வரி அதிகரிப்பினால் சிகரெட் விற்பனை 1.1 வீதத்தால் வீழ்ச்சியடையும். கடந்த வருடம் 2.2 பில்லியன் சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டடுள்ளன. இந்த 5 ரூபா அதிகரிப்பினூடாக 2022 ஆம் ஆண்டில் 25 மில்லியன் சிகரெட்டுக்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் என்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 03 வருடங்களின் பின்னர் சிகரெட்டின் விலை அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதாவது 2 வருடங்களின் பின்னர் மதுபானத்தின் விலை அதிகரித்துள்ளது. பியர் மீது 250 ரூபா வரி அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வரி, மிகவும் முக்கியமானது. அந்தப் பணம் முழுவதையும் இலங்கை அரசாங்கம் அடுத்த வருடம் நேரடி அரசாங்க வருவாயாகப் பெற்றுக்கொள்ளும். அதற்கிணங்க அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை மதுபானத்தின் மூலம் மொத்த வருவாயாக பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வைரசுடன் இணைந்து அரசை அழிக்க சஜித் தரப்பு முயற்சி.” – சரத் வீரசேகர

“எதிரக்கட்சியினர் வைரசுடன் இணைந்து அரசாங்கத்தை அழிக்கக்கூடாது.”என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியினர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (16) ஏற்பாடு செய்த பல கூட்டங்களை அரசாங்கம் தடுத்து நிறுத்த காவல்துறையினரை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்திய வேளையில் அதற்கு பதில் தெரிவித்த போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சிக்கு துளியளவேனும் நாட்டின் மீது பற்று இருக்குமென்றால் எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் எதிர்கட்சிகள் செய்ய வேண்டியது என்னவென்றால், அரசாங்கத்துடன் இணைந்து வைரஸை அழிக்க வேண்டுமே தவிர, வைரசுடன் இணைந்து அரசாங்கத்தை அழிக்கக்கூடாது.

ஆனால் எதிர்க்கட்சி அரசாங்கத்தை அழிக்கவே முயற்சிக்கின்றது. நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே காவல்துறையினர் உள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் அல்லது மக்கள் கூட்டங்களினால் வைரஸ் பரவுகின்றது என சுகாதார தரப்பினர் ஏதேனும் ஆலோசனைகளை வழங்கினால் அதனையும் காவல்துறையினரே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே சட்டத்தை காப்பாற்றும் பணியையே காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோல் தேசிய பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். எதிர்கட்சியின் தரப்பில் ஒருவரது தந்தை, நாட்டில் குண்டு வெடிக்கப்போவதாக கூறியும் அது குறித்து கவனத்தில் கொள்ளாது உறங்கிவிட்டு மக்களின் உயிரை பறிகொடுக்க வேடிக்கை பார்த்த நபர்கள் எதிர்க்கட்சி தரப்பிலே உள்ளனர்.

எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஆனால் சுகாதார தரப்பின் வலியுறுத்தலுக்கு அமைய காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

மாவீரர் நிகழ்வுகளுக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோரவுள்ள முல்லைத்தீவு காவல்துறையினர் !

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோர உள்ள முல்லைத்தீவு காவல்துறையினர் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது. இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி குறித்த தடை உத்தரவுகள் நாளையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற உள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு காவல்துறையினரினால் 12 பேர் மற்றும் அவர்களோடு இணைந்த குழுவினருக்கும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு பலதரப்பட்டவர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.