23

23

சடுதியாக அதிகரித்துள்ள இலங்கையின் கடன்கள் – சுட்டிக்காட்டியுள்ள உலக வங்கி !

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால், பல பிரச்சினைகளை இலங்கை எதிர்கொண்டுள்ளதென்றும் அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உண்டெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையின் முக்கிய பிரச்சினை, மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் கடனைச் செலுத்தும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பது முக்கிய தேவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள்.”- நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் !

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை போன்ற சிறிய நாட்டில் வருமானத்தை மீறிய மிகவும் பெரிய தொகையை, ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் பாதுகாப்புக்காக ஒதுக்குகின்றது. இதுவே இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகுவதற்கு முக்கிய காரணமாகும்.

இதேவேளை அரச சேவையாளர்கள் நாட்டிற்கு சுமை  என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையாக படைத் தரப்பே சுமையாகும். ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சி செய்வதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்புக்கும் இராணுவத்தின் வாக்கு வங்கிக்காகவும்தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள்.

மேலும், அரச சேவையாளர்களில் நிபுணத்துவம் கொண்டவர்களை தவிர்த்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகளை அமைச்சின் செயலாளர்களாகவும் பணிப்பாளர்களாகவும் நியமித்து, நிபுணத்துவ அரச சேவையாளர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றமையினால், இன்று பல அமைச்சுக்களில் இருந்து நிபுணர்கள் பலர் தாமாக பதவி விலகியுள்ளார்கள்.

இதேவேளை நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு தடுக்கின்றது. குறிப்பாக உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் முதலீடு செய்வதற்கு முன்வந்தால், அவர்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் அவர்களின் முதலீடுகள் தடுக்கப்படுகின்றது.

மேலும் சுற்றுலாப்பிரயாணிகளாக அதிகளவு நாட்டுக்கு வருகை தருகின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களாவர். பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள அவர்களினால்தான் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.