மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
காலி மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும் வோரிக்கான் 3 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மேயர்ஸ் 45 ஓட்டங்களையும் பிரத்வெயிட் 41 ஓட்டங்களையும் கோர்ன்வோல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரவீன் ஜெயவிக்கிரம 4 விக்கெட்டுகளையும் ரமேஸ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் லக்மால், எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
156 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை கிரிக்கெட் அணி, 348 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதன்போது இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கோர்ன் வோல் மற்றும் வோரிக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 349 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக போனர் ஆட்டமிழப்பின்றி 68 ஓட்டங்களையும், ஜோசுவா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 5 விக்கட்டுக்களையும், ரமேஷ் மென்டிஸ் 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 29ஆம் திகதி காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.