28

28

“சமையல் சிலிண்டர்கள் போலவே இந்த அரசும் வெடித்து சிதறும்.” – ஐக்கிய மக்கள் சக்தி

நாட்டில் சமையல் எரிவாயுக்கள் வெடித்துச் சிதறுவதைப் போன்று இந்த அரசும் விரைவில் வெடித்துச் சிதறும் என முன்னாள் காணி அமைச்சரும் தற்போதையாய் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில்,

“வடக்கு, கிழக்கில் இளைஞர்களையும் தேசிய விவசாயத்துறையில் இணைத்துக்கொள்ள – அவர்களுக்குத் தேவையான நிலத்தைப் பெற்றுக்கொடுக்க மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளதாக காணி அமைச்சர் அண்மையில் கூறினார். வடக்கு, கிழக்கில் 40 கிராமங்களுக்கு அதிகமான பகுதிகளில் 75 ஆண்டுகளாக அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை நாமும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தேன். அதேபோல் அவர்களின் காணிகளுக்கான உறுதிப்பத்திரத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் நிலங்களை சட்ட ரீதியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும். எனினும், சட்ட ரீதியில் பல இழுத்தடிப்புகள் இடம்பெறுவதால் அவர்களுக்கு உரிய நிலம் வழங்கப்படாது, நிலம் பாவிக்கப்படாது கைவிடப்பட்டுள்ளது.

தேசிய காணி கொள்கை ஒன்றை உருவாக்கி சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் இந்த அரசிடம் உள்ளதா என்ற கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

நான் காணி அமைச்சராக இருந்த காலத்தில் பல வேலைத்திட்டங்களைக் கொண்டு வந்தேன். அதேபோல் காணி சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தோம். சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தபோதும் ஆட்சி மாற்றத்துடன் அவை நிறுத்தப்பட்டுவிட்டன . மக்களின் காணிப் பிரச்சினைக்கு முறையான தீர்வுகளை வழங்குங்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்க வேண்டும். அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம்.

அதேபோல் மலையக மக்கள் பாரிய நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசின் முட்டாள்தனமான தீர்மானங்களே காரணம். மலையகத் தேயிலைத் தோட்டங்களைத் தனியார் மயப்படுத்தி, நிறுவனங்களுக்கு வேறு காரணிகளுக்காக விற்கும் நடவடிக்கை காரணமாக மலையகத்தைச் சார்ந்த எமது மக்கள் துன்பப்படுகின்றனர். சிறு தேயிலைத் தோட்டங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடுத்த ஆண்டில் பாரிய நெருக்கடி நிலையொன்று நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும்.

சமையல் எரிவாயுக்கள் வெடித்துச் சிதறுவதை போன்று இந்த அரசும் வெடிக்கும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் அரசுக்குள் ஏற்பட்டு வரும்  வெடிப்பைப் பார்க்கையில் அவ்வாறே நினைக்கத் தோன்றுகின்றது. இன்னும் குறுகிய காலமே இந்த அரசு இருக்கப்போகின்றது. அதற்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்க வேண்டும்” – என்றார்.

ஒமிக்ரோன் பயங்கரமானது இல்லை – இங்கிலாந்து விஞ்ஞானி அறிவிப்பு !

புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு பேரழிவை ஏற்படுத்தாதென இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா ஒமிக்ரான் குறித்து உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு பேரழிவை ஏற்படுத்தாது- இங்கிலாந்து விஞ்ஞானி –  Athavan News

அந்தவகையில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு குறித்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளதாவது, இது பேரழிவை ஏற்படுத்தாது.

மேலும் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி இருக்கின்றனர். ஆனால் அவர்கள், நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன். இதேவேளை தடுப்பூசியால் கிடைக்கின்ற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் கடன் வலைக்குள் சிக்கிய உகாண்டா – பறிபோகவுள்ள விமான நிலையம் !

ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள உகாண்டா நாடு ஏழ்மையான நிலையில் உள்ளது. அந்த நாடு சீனாவிடம் கடந்த 2015-ம் ஆண்டு கடன் வாங்கியது. கடனுக்கு ஈடாக உகாண்டாவில் உள்ள எண்டெபெ விமான நிலையம் உள்ளிட்ட சொத்துக்கள் சீனாவிடம் அடமானம் வைக்கப்பட்டது. 207 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தொகை வழங்கப்பட்டது. ஆனால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் உகாண்டா அரசு திணறி வருகிறது.
கடனை செலுத்த முடியாமல் போனால் எண்டெபெ விமான நிலையத்தை சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று கடன் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் உள்ள அந்த விதியை நீக்க வேண்டும் என்று உகாண்டா அரசு சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதனை ஏற்க சீனா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உகாண்டாவின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் சீனா வசம் செல்வது உறுதியாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாததால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவிகளை உகாண்டா கோர முடியாத நிலை உள்ளது.
அதேசமயம், உகாண்டா விமான நிலையத்தை சீனா கையகப்படுத்துவதாக வெளியான தகவலை உகாண்டாவின் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளரும், ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான சீன டைரக்டர் ஜெனரலும் மறுத்துள்ளனர்.

“பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்த அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவர்.” – அரசு எச்சரிக்கை !

தமிழர்கள் கூறும் ‘மாவீரர்கள்’ பயங்கரவாதிகள். நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவர்களை நினைவுகூரவே முடியாது. எனவே, வடக்கு, கிழக்கில் இன்று பயங்கரவாதிகளை நினைவேந்திய அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள்.” என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், காவற்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. துயிலும் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவீரர்கள் நினைவாக மக்கள் ஈகைச்சுடரேற்றினார்கள். இந்தநிலையிலேயே அரசு மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் பேசிய தினேஷ் குணலவர்த்தன,

“தமிழர்கள் கூறும் ‘மாவீரர்கள்’ பயங்கரவாதிகள். அவர்கள் இந்த நாட்டை அழித்தவர்கள்; பலரைக் கொலைசெய்தவர்கள். இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவர்களை நினைவுகூரவே முடியாது. பயங்கரவாதிகளை நினைவேந்த எமது அரசும் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை.

எனவே, வடக்கு, கிழக்கில் இன்று பயங்கரவாதிகளை நினைவேந்திய அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்” – என்றார்.

உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரோன் வைரஸ் – அறிகுறிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் நோய் அறிகுறிகள் உலக நாடுகள் சிலவற்றில் தற்போது கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரோன்   நோய் அறிகுறிகள் சம்பந்தமாக தென் ஆபிரிக்காவின் மருத்துவ பேரவை அடிப்படையாக ஆய்வுகளை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.

தசைவலி, லேசான இருமல், உடல் சோர்வு என்பன இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கொரோனா தொற்றிய நோயாளிகளிடம் காணப்பட்ட வாசணையை நுகர முடியாத தன்மையை இந்த புதிய வைரஸ் திரிபிடம் காண முடியவில்லை என தென் ஆபிரிக்க மருத்துவப் பேரவையின் மருத்துவர் எஞ்சலிக் கோழுடிசி தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் திரிபு பரவுகிறது என்ற எச்சரிக்கையை இந்த மருத்துவரே முதலில் விடுத்திருந்தார்.

கடந்த 18 ஆம் திகதி தன்னிடம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொரோனா தொற்றாளிகள் என அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார்.

தொற்றாளர்களிடம் நடத்தப்பட்ட மரபணு ரீதியிலான ஆக்கிரமிப்பு சம்பந்தமான பரிசோதனைகளில் இந்த புதிய திரிபு கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும் ஒமிக்ரோன் என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தென் ஆபிரிக்காவில் முதலில் பரவியது என்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதே நேரம் புதிய வகை கொரோனா இலங்கைக்குள் நுழைவதை அதிகாரிகளால் தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா நாட்டிற்குள் நுழைவதை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளன என பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்

மலையக பெருந்தோட்ட மக்களை தேசிய இனமாக அங்கீகரியுங்கள் – நாடாளுமன்றத்தில் கோரிக்கை !

இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

மேலும் பெருந்தோட்ட தேசிய இனத்தின் தொழில்சார் உாிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் அவர்களுக்கான காணி பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் செல்வம் அடைக்கநாதன் கோரிக்கை விடுத்தார்.

மலையக மக்களுக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நன்மை தரக்கூடிய அனைத்து செயற்திட்டங்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்கும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதற்கிடையில் பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்கள் பகிரப்படும் போது தொழிலாளர்கள் மத்தியில் அது பகிரப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம் ராமேஸ்வரன் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்தார்

விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பே – காரணங்களுடன் தடையை நீட்டித்தது ஐரோப்பிய நீதிமன்றம் !

விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி “பயங்கரவாதச் செயல்” என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.

(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்;
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;

(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;

(d) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை.

(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;

(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;

(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;

(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;

(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;

(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.

இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
– விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.

– பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.

– பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினர் கைதாம் !

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் இராணுவத்தினர் மூவர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை (27) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன்மீது இராணுவத்தினரால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இன்றையதினம்(28) முல்லைத்தீவு நகரில் தாக்குதலை கண்டித்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முன்னதாகவே இராணுவத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு நகர்த்த பெரும் முயற்சி – ஊடுருவும் சிங்களவர்கள் !

யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் தலைவராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.”  என  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சிறிதரன் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்திலே இருக்கின்ற குறிப்பாக வடக்கையும், கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ள பனை  அபிவிருத்தி சபை என்பது  இப்போது கொழும்பை நோக்கித் தள்ளப்படுகின்றது. அதனுடைய தலைவராக தற்போது முதன்முதலாக ஒரு சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார். நான் அவர் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், பனை  அபிவிருத்தி சபை தமிழர்களின் பாரம்பரிய தொழிலை அடிப்படையாகக்கொண்டது. எனவே, தயவு செய்து அதனைத் தமிழர்களிடம் விடுங்கள். ஒரு கித்துள் திணைக்களத்துக்கோ அல்லது தென்னை அபிவிருத்தி திணைக்களத்துக்கோ தமிழ்த் தலைவரை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை.

பனை  அபிவிருத்தி சபை கம்பணக்காளர், உத்தியோகஸ்தர்களில் கூட அதிகளவான சிங்களவர்கள் இணைக்கப்படுகின்றனர். பனை அபிவிருத்தி சபையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகினறன. அது வடக்கு, கிழக்குக்கு உரியது. அதில் உள்ள தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று அறிகின்றோம்.  பல பேரின் மாற்றங்களில்  தமிழர் நீக்கப்பட்டு சிங்களவர் நியமிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வடக்கு மாகாண செயலருக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியாத ஒரு சிங்கள மொழி பேசுபவர். நாங்கள்  மொழி ரீதியாக அவருடன் பேச முடியாது. வடக்கு மாகாண ஆளுநரால் கூட தமிழ் பேச முடியாமல் உள்ளது. அவ்வாறான நிலைமைக்குள்தான் நாம் தொடர்ந்தும் தள்ளப்படுகின்றோம்.

ஒரு கல்வி அமைச்சை எடுத்தீர்களேயானால் அங்குள்ள மேலதிக செயலாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. பல அரச திணைக்களங்களில் இதே நிலைதான். தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பதற்கு கூட ஆட்கள் இல்லை. இன விகிதாசாரம் கூட பேணப்படாது நிலைமை மோசமாக இருக்கின்றது. தயவு செய்து இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்துங்கள்” – என்றார்.

முல்லைத்தீவில் இராணுவத்தின் அடாவடி – ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து வடக்கில் போராட்டம் !

வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பனவற்றின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று காந்திப் பூங்காவில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபி முன்றலில் இடம்பெற்றது.

நேற்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது இராணுவத்தினாரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், அண்மையில் திருகோணமலை கிண்ணியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் அதற்கான நீதி கோரியும் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கரணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற அடக்குமுறைகளை நிறுத்து, தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாகக் கைது செய், ஊடகவியாளர்களைத் தாக்காதே, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும், ஊடகவியலாளர்களைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதி, இராணுவ அடக்குமுறை ஒழிக, அரசே ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து, சிறைப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களை உடன் விடுதலை செய், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினரைக் கைது செய் போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி முன்றலில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது பின்னர் ஊர்வலமாக ஆரம்பித்து மணிக்கோபுரத்தின் ஊடக காந்திப் பூங்கா முன்நுழைவு வாயில் வழியாக காந்தி சிலையருகே சென்று அங்கும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.