30

30

குறுகிய காலத்தில் 11 சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் – குற்றவாளிகள் யார்..?

நாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் தொடர்பாக ஆராய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் புலனாய்வொன்றை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்களைத் தொடர்ந்து உள்நாட்டில் தினசரி எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற பல இடங்களை பட்டியலிட்ட பிரேமதாச, கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த சம்பவங்கள் அசாதாரணமானது எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்காக 18 லிட்டர் கலப்பின எரிவாயு உருளையை அறிமுகப்படுத்திய பின்னரே இந்த நிகழ்வுகள் தொடங்கியது என்றும் இது மக்களை ஏமாற்றி பாரிய இலாபத்தை ஈட்டும் அரசின் தந்திரம் என்றும் அவர் கூறினார்.

மேற்கூறிய விடயத்தில் முக்கிய விடயங்களில் ஒன்று வாயு கலவை மாற்றப்பட்டு எடை குறைக்கப்பட்டது எனவும் ஏனைய முக்கிய விடயம் எரிவாயு சிலிண்டர்களில் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் வீதங்கள் பூர்த்தி செய்யப்படாத நிலைக்கு மாற்றப்பட்டமை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக விரைவில் இலங்கை !

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறக்கூடும் என சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் தெரிவித்த அவர்,

“கடற்கரையில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு சிங்கப்பூருடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்ற சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது, அதில் இலங்கையும் பங்கு வகிக்க வேண்டும் என்று விரும்புகிறது.

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்குவதில் பங்களிப்பதற்காக சிங்கப்பூருடன் நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 10,000 மெகாவாட்களை உற்பத்தி செய்யும் கடல்சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஆரம்பிக்கும் சாத்தியம் இலங்கைக்கு உள்ளது.

எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“மன்னார் எண்ணெய் வளத்தை இந்தியாவிடம் கொடுங்கள்.” – செல்வம் அடைக்கலநாதன் அரசிடம் கோரிக்கை !

மன்னாரில் காணப்படுகின்ற எண்ணெய் வளத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் எண்ணெய் வளம் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த பிரதேசத்தை இந்தியாவிற்கு வழங்கி அதன் அனுகூலத்தை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.