“மக்கள் அரசாங்கத்தை மாற்ற மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.” – ரில்வின் சில்வா
மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. அதற்காக மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே வெகு விரைவில் அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான நோக்கங்கள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தை வெளிப்படுத்தும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் என எதுவுமே இல்லாது போகும் வேளையில், சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்க வேண்டும் என்ற நிலை உருவாகும் வேளையில் மக்கள் மேலும் மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.
மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. எனவே வெகு விரைவில் அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள்.
ஆனால் இது கலவரமாக அமையாது, ஜனநாயக ரீதியில் மாற்றத்தை உருவாக்க முடியும். குறிப்பிட்ட சிலர் வீதியில் இறங்கினால் அரசாங்கத்தினால் அடக்குமுறையை கையாள முடியும். ஆனால் மக்கள் அலை வீதிக்கு இறங்கினால் அவர்களால் அடக்குமுறையை கையாள முடியாது.
இவ்வாறான நெருக்கடிகளில் மக்கள் பொறுத்துக்கொண்டு இருக்கப்போவதில்லை. எனவே ஜனநாயக ரீதியில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாமும் கூறுகின்றோம்.
மக்கள் ஒன்றாக வீதிக்கு இறங்கி ஆட்சி மாற்றத்தை கேட்பது ஜனநாயக செயன்முறையேயாகும். அதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. இதனை கிளர்ச்சி என அடையாளப்படுத்த வேண்டியதில்லை.
ஆட்சியை எமக்கு தாருங்கள் என நாம் கேட்கவில்லை, தலைமை ஏற்று சகலரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுபோவோம் என்பதே எமது அழைப்பாகும்.
சகல தரப்பும் ஒன்றிணைந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த வேலைத்திட்டத்தில் இனம், மொழி பாகுபாடு இன்றி சகலரையும் இணைத்துக்கொண்டால் மட்டுமே மீள முடியும். அதற்கு சகல மக்களும் தயாராக உள்ளனர்.
தலைமைத்துவமும், சரியான வேலைத்திட்டமுமே தேவைப்படுகின்றது. அதனை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்றார்.