December

December

உலகை அச்சுறுத்த ஆரம்பித்துள்ள ஒமிக்ரோன் – இந்தியா உட்பட 29 நாடுகளில் ஊடுருவல்!

இந்தியாவிற்குள்ளும் ஒமிக்ரோன் தொற்று ஊடுருவியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய முதன் முறையாக இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலேயே இந்த இரு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 29 நாடுகளிலும் மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளன.

குறிப்பாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

“இந்த பௌத்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் அமைப்பை உருவாக்க வேண்டும்.” – அர்ஜுனரணதுங்க

நல்ல ஊழல் அற்ற குழுவை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட அழைத்தால், தான் தேர்தலில் போட்டியிடத் தயங்கப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (01) தலதா மாளிகையில் வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த போது,

“இந்த பௌத்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் அமைப்பை உருவாக்கும் அதே வேளையில், திருட்டு, ஊழல் மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இளைஞர்களை முன்னோக்கிக் கொண்டு வர வேண்டும். அரசியலில் தேசங்கள், கட்சிகள், மதங்கள் என்று பிரிவினைகள் இருக்கக் கூடாது. மேல் மனிதன் முதலில் திருடுவதை நிறுத்த வேண்டும். அதன்பின் கீழ் திருட்டு நடக்காது. அப்படி ஒரு குழு சேர்ந்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

எரிவாயு சிலிண்டர்களின் இரசாயனக் கலவையை மாற்றுவதற்கு முன், சேதத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும். இன்று இந்த நாடு பணத்தின் செல்வாக்கின் கீழ் உள்ள நாடாக மாறிவிட்டது. நாட்டிலும் விளையாட் டிலும் இவ்வாறு நடப்பது துரதிஷ்டவசமானது என ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் 8 லட்சம் முதல் 9 லட்சம் இளம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பொய் சொல்லி வாக்குகளைப் பெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏஞ்சலோ மெத்திவ்ஸை காண மைதானம் வந்த சிறுவன் – மெதிவ்ஸின் நெகிழ்ச்சியான பதில் !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய போட்டியை காண வந்த சிறுவனின் கையில் இருந்த காட்சி பலகை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.

தனது குட்டி ரசிகருக்கு மெத்திவ்ஸ் விடுத்த அறிவிப்பு!சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸை பார்க்கும் நோக்கத்தில் தான் போட்டியை காண வந்ததாக குறித்த காட்சிப் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பதிவை மேற்கொண்டிருந்தார்.

அதில், போட்டியின் நான்காவது நாளான இன்று சிறுவன் போட்டியை காண வர வேண்டும் என்றும், அங்கு அவரை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

“தேசத்தை பாதுகாக்க வந்தவர்களால் சமயலறையை கூட பாதுகாக்க முடியவில்லை.” – எஸ்.எம்.மரிக்கார்

தேசத்தை பாதுகாக்கவென வந்த அரசுக்கு வீட்டின் சமையலறையைப் பாது காக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

முட்டாள் தனமான பேச்சுக்களை நிறுத்தி விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த நிறுவனங்களுக்கு இதனை விட்டு விட்டுச் செல்ல முடியாது. இரண்டு காரணங்கள் உள்ளன.

எரிவாயு சிலிண்டர் வெடிக்காவிட்டாலும் எரிவாயு கசிவின் மூலமாகத் தான் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிவாயு வெடிப்புகள் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கணிசமான இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தவிர நுகர்வோர் அதிகார சபை சிஐடி மூலம் முறையான பரி சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.

இதன் பின்புறம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய தொழில்நுட்பம் மூலமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையை மாற்றியதற்கான காரணம் என்ன? யார் மாற்றினார்? அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“பயணத்தடைகளால் ஒமிக்ரோன் வைரஸை கட்டுப்படுத்த முடியாது.” – உலக சுகாதார ஸ்தாபனம்

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டஒமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறித்த பாதிப்புள்ள தென்னாபிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹொங்கொங், பிரித்தானியா, உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணத் தடைகள் மூலம் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்ததுள்ளது.

மேலும் பயணத் தடைகள் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும் என்றும் ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கரு்கலைப்பு உரிமை பிறக்காத மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.” – மைக் பென்ஸ்

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய 1973 ஆம் ஆண்டு ரோ வி வேட் வழக்கை இரத்து செய்யுமாறு முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த தீர்ப்பு மில்லியன் கணக்கான பிறக்காத குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான முடிவு என்றும் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 15 வாரங்களுக்குப் பின்னர் கருக்கலைப்பைத் தடைசெய்யும் மிசிசிப்பி சட்டத்தின் மீதான வாதங்கள் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

இதனை அடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு அடுத்த கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1973 ஆம் ஆண்டு தீர்ப்பு அமெரிக்காவில் பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமையையும், இரண்டாவது மூன்று மாதங்களில் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் வழங்கியது.

“வடக்கு காணி பிரச்சினைகள் தொடர்பில் சட்டத்தை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியாது.” – வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

நீண்ட கால காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும்முகமாகவே காணிப் பிரச்சினை உள்ளோரை சந்திக்க விரும்பினேன் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

பல வருடங்களாக காணிப் பிரச்சினை என்பது தமிழ் மக்களுக்கு காணப்படுகின்றது. சில பேருக்கு 20 வருடங்கள் சில பேருக்கு 30 வருடங்கள் சிலர் தமது காணியினை இன்று வரை தெரியாதவர்களும் உள்ளார்கள். அவர்களுக்கு தமது காணி எங்கு உள்ளது என்பது தெரியாது அவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் அவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு படிமுறை உள்ளது.

அதன்படி தற்போது புதிய சில வழிமுறைகளும் வந்துள்ளன இவ்வாறான காணி பிரச்சனை விடயம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருந்தன எனினும் தற்போதுமூவாயிரமாக குறைந்துள்ளன.

எனவே ஏனைய தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஒரு நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறிப்பாக காணி பற்றி நாங்கள் பேசும் போது மிகவும் மனவேதனையாக உள்ளது. சிலர் கூறுவார்கள் தனது தாய் தந்தையர் வழங்கிய காணி என, சிலர் உற்றார் உறவினர்கள் வழங்கிய காணி என்பார்கள் எனவே இதற்கு ஒரு முடிவினை எடுத்து இந்த காணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும்.

பொதுமக்களின் காணிகளை சட்ட திட்டங்களை மீறி கையகப்படுத்த முடியாது. தற்பொழுது சிலர் அறிக்கையிட்டுள்ளார்கள். ஏதோ கூட்டம் வைக்கிறாராம் காணியை வேறொருவருக்கு வழங்கப் போகிறார் என,  நான் அவ்வாறு கூறவில்லை. நான் சந்திக்க போவது என்ன விடயம் என்றே கூறவில்லை. எனவே நான் கூறாத ஒரு விடயத்தினை அறிக்கையிட்டுள்ளார்கள். அதாவது நான் ஆளுநர் பதவியில் உள்ள ஒருவன் சட்டத்தின் படியே சட்டத்தின் படி முறையின் படியே காணி பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும்.

எனவே சட்டத்தை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவே ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டுமாக இருந்தால் நான் சட்டத்தின் படியே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“பாடசாலை மாணவர்களி்டம் வசதிக்கட்டணம் அறவிடுவதை உடனடியாக நிறுத்துங்கள்.” – சஜித் பிரேமதாச வலியுறுத்தல் !

பாடசாலை மாணவர்களிடம் வசதிக் கட்டணம் அறவிடுவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தலையிட்டு மாணவர்களிடமிருந்து வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் அறவிடுவது தொடர்பில் கல்வி அதிகாரிகளிடம் விசாரணையை முன்னெடுப்பது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் ஒரு மாணவரிடம் ரூ. 3,000 மற்றும் மற்றுமொரு மாணவரிடமிருந்து ரூ. 2,400 வசதி கட்டணமாக பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வசதி மற்றும் சேவைக் கட்டணங்களை இடைநிறுத்தும் சுற்றறிக்கையை வெளியிடுமாறு கல்வி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்,

அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவித்தார்.

புலிகளின் தங்கத்தை தேடிய பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணி இடைநீக்கம் !

இறுதி யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் புலிகளின் தங்கம் தேடிய சம்பவம் தொடர்பில் சரத் வீரசேகரவின் அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு செயலாளர் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வௌியான செய்திகள் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளிடம் கோரியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தக் காலத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத் தொகையொன்றை இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்த அமைச்சரவை அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த செயலாளர்கள் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் சட்டம் மற்றும் ஒழங்கு அமைச்சரின் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

“உலகிலேயே முன்பள்ளிக் கல்வித் திட்டம் இல்லாத ஒரே நாடு இலங்கை.” – சிறீதரன்

உலகிலேயே முன்பள்ளிக் கல்வித் திட்டம் இல்லாத ஒரே நாடு இலங்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

”நாட்டின் சாதாரண பாடசாலைகளுக்குக் கிடைக்கின்ற வளங்கள் தேசிய பாடசாலைகளுக்குக் கிடைப்பதில்லை.

இலங்கையில் மொழி காரணமாகவே பல பிரச்சினைகள் ஏற்பட்டது. கல்வி அமைச்சு உள்ளிட்ட எந்த ஒரு அமைச்சிலும் தமிழ் மொழியில் சேவையை வழங்க ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்” என்றார்.

அதேபோன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டுமே முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவம் சம்பளம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.