December

December

தமிழ் முற்போக்கு கூட்டணியை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்தது தேர்தல் ஆணைக்குழு !

தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்விடயம் தொடர்பான கடிதத்தை, தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,

2015 ஜூன் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்  ஊடாக  தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டது என கூறினார்.

மேலும், எங்களது இந்த கூட்டணி 6 வருடங்களை கடந்துள்ளதுடன் 2 நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு,தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் இயக்கமாக உருவெடுத்து இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மனங்களில், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தேசிய அரங்கில் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் ஊடகவியலாளரை தாக்கவில்லை.” – இராணுவத் தலைமையகம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார் என இராணுவம் கூறியுள்ளது.

இதனை அடுத்து அங்குவந்தவர்களினால் வீதியோரத்திலுள்ள பெயர் பலகையை படமெடுக்கும் போது இராணுவ வீரர்களால் அவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் எனக் கூறும் அளவுக்கு வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டன என்றும் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் முட்கம்பியால் சுற்றப்பட்ட பனைக் குச்சியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் எனவே சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் விடுக்கப்பட்ட அழைப்பு தவறானது என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களுக்கு இடையில் உள்ள ஆரோக்கியமான நல்லிணக்கம் இருப்பதாக தெரிவித்துள்ள இராணுவம் இவ்வாறான சம்பவங்களை கொண்டு ஏமாறவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க சம்பவம் நடந்த போது இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு பின்பு காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இராணுவ தலைமையகம் இப்படியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆள் நடமாட்டமில்லாத வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் !

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது – 51) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தென்னம் தோப்பிற்குள் அமைந்துள்ள வீடடடிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல் வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் பார்த்த பொழுது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து உடனடியாக சாவகச்சேரி காவல்துநையினருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“இலங்கையில் எந்த எரிவாயு சிலிண்டரும் வெடிக்கவில்லை.” – திஸ்ஸ குட்டியாராச்சி

அண்மையில் நாடாளுமன்ற அமர்வின் போது எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பல இடங்களை பட்டியலிட்டு கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த சம்பவங்கள் அசாதாரணமானது என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நாட்டில் இதுவரை எந்தவொரு எரிவாயு சிலிண்டர்களும் வெடிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எரிவாயு அடுப்பைத் தவிர வேறு எரிவாயு  சிலிண்டர்கள் வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், எரிவாயு கலவையில் பிரச்சனை இல்லை. ஆனால் எரிவாயு அடுப்பில்தான் பிரச்சினை இருக்கின்றது.

ஆகவே, எரிவாயு சிலிண்டர்களில் கவனம் செலுத்துவது போன்று எரிவாயு அடுப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கீழ்த்தரமான செயலை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.” – எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் !

முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த நவம்பர் 27ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பில்  ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இலங்கை இராணுவத்தினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியதும் மிகவும் கீழ்த்தரமானதுமாகும்.

குறித்த தினத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது பணியைச் செய்துகொண்டிருந்த வேளை இராணுவத்தினர் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கேட்டுக்கொண்டதையடுத்து தனது அடையாள அட்டையைக் காண்பிக்க முற்பட்ட வேளையே தாக்கப்பட்டார் என்று அறிகின்றோம்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு பின்பு காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டதும் வெறுமனே ஒரு கண்துடைப்பு சம்பவமாகவே நாம் காண்கிறோம்.

இந்த விடயம் தொடர்பாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இது தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயம் கிடைப்பதற்கான  வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை உரிய அதிகாரிகள் மற்றும் அரசிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் ஊடகத்துறைக்குப் பெரும் சவாலாக அமைகின்றது. அண்மைக்காலங்களில் பல்வேறு தரப்பினருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் போலவே குறித்த இந்தச் சம்பவமும் தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாகவும் அவர்களது ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் அமைகின்றது.

தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான விடயங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருந்து பாதிக்கப்படுவோருக்காக எப்போதும் நாம் குரல் கொடுப்போம் – என்றுள்ளது