02

02

யாழ்மாநகர முதல்வரின் “தூய நகரம்” திட்டத்தின் கீழ் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஆரியகுளம் !

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது.

இன்று(வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு யாழ் மாநகர முதல்வர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும், சிறப்பு விருந்தினர்களாக தியாகந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும்வகையில் நினைவுக்கல் மூன்று மொழிகளிலும் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆரியகுளம் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துரு திறக்கப்பட்டு, ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாண வேடிக்கைகள், தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

மேலும், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

யாழில் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா !

யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தைச் சீனா இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சீன தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்பு கரிசனை கருதி இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்தது.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன் தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தின. இந்த நிலையில் தற்போது இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

“ஊடகங்களால் ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது.” – பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ

ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கான அசிதிசி காப்புறுதி திட்டம் வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) நடைபெற்றது.

இதில் உரையாற்றிய பிரதமர், ஊடகங்களால் அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் முடியும், அதே அரசாங்கத்தை வீழ்த்தவும் முடியும் என்றார்.

ஆனால் அரசாங்கம் ஒன்றை ஊடகங்களால் பாதுகாக்க முடியாது.  அவ்வாறு பாதுக்காக்குமாக இருந்தால் இதனைவிட (இன்று ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட காப்புறுதி) பாரிய அளவிலான காப்புறுதியை வழங்க நேரும் என்றும் பிரதமர் கூறினார்.

அதேநேரம், தமக்கு ஊடகங்கள் மிகப்பெரிய சக்தியாகச் செயற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் கரையொதுங்கும் மனித சடலங்கள் !

யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரு  சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

இன்றைய தினம் கரையொதுங்கிய இரு சடலங்களுடன், கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கடந்த சனிக்கிழமை வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் இரு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், கடந்த  செவ்வாய்க்கிழமை மருதங்கேணி கடற்கரை பகுதியில் ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தன.

கரையொதுங்கிய ஆறு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஒரே வருடத்தில் 130 வரையான சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் – மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான அறிவுரைகள் !

நாட்டில் இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் 131 எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைகழகத்தில் கூடி ஆராய்ந்த போதே குறித்த குழு இந்த விடயங்களை தெரிவித்துள்ளது.

இதில், எரிவாயு சிலிண்டருக்கு சிறு சேதம் – 05, எரிவாயு விநியோக குழாய் சேதம் – 09, ரெகுலேட்டருக்கு சேதம்- 10, எரிவாயு அடுப்பு வெடிப்பு- 56, வாயு கசிவுகள் – 47, அதிக வெப்பத்தால் ஏற்படும் விபத்துகள் – 04 என பதிவாகியுள்ளன.

தற்போது அவதானிக்கப்பட்டுள்ள சம்பவங்களின் அடிப்படையில் ஆபத்துக்களை தவிர்க்க அவசர நடவடிக்கை எடுக்கப்படுவதன் ஒரு அங்கமாக, பொதுமக்களுக்கு பின்வரும் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

01.நீங்கள் சந்தையில் இருந்து ஒரு எரிவாயு சிலிண்டரை வாங்கும் போது, ​​அந்த சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவு ஏதும் இல்லை என்பதை விற்பனை முகவரிடமிருந்து உறுதிப்படுத்திய பின்னர் வாங்குங்கள்.

02.எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவை நீங்கள் கவனித்தால், அல்லது சந்தேகம் இருந்தால், வீட்டிலிருந்து அகற்றி, சரியான காற்றோட்டத்துடன் திறந்த இடத்தில் வைக்கவும்.

03.பிறகு உங்கள் எரிவாயு முகவரிடமும், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்குங்கள்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி குழுவிற்கு, பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் ஏதாவதொன்றை அழைத்து தகவல் தெரிவிக்கவும், (011 5 811 927 அல்லது 011 5 811 929)

04.எரிவாயு சிலிண்டர்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் சோதிக்கப்படும் வரை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம். ஆபத்தில் இருக்கும் தொகுதிகளின் தேவையற்ற ஆய்வுகளைத் தவிர்க்கவும்.

5.அண்மைய சம்பவங்கள் எதிலும், எரிவாயு சிலிண்டரில் வெடிப்பு நிகழவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விபத்துக்களைக் குறைப்பதற்கான விரைவான நடவடிக்கையாக, உங்கள் எரிவாயு சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டர், எரிவாயு விநியோக குழாய், எரிவாயு அடுப்பு இணைப்புக்கள் சரியாக இயங்குவதையும், எரிவாயு ஸ்டவ் சரியாக பொருத்தப்பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும். பழுதடைந்த எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

6.இலங்கையின் தரநிலை நிறுவனத்தால் செய்யப்பட்ட பரிந்துரையின்படி, 51.5 ~ 1180 ரெகுலேட்டர்கள் மற்றும் 51-5 – 1172 எரிவாயு விநியோக குழாய் மற்றும் பாகங்களை பயன்படுத்துங்கள்.

ஒரு ரெகுலேட்டருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆயுட்காலம் 05 ஆண்டுகள் மற்றும் எரிவாயு விநியோக குழாய்க்கு பரிந்துரைக்கப்பட்ட ஆயுட்காலம் 02 ஆண்டுகள் ஆகும்.

07.பணியிடங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் எரிவாயுவைப் பயன்படுத்தும் போது, ​​பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநரின் ஆலோசனையைப் பெறவும் மற்றும் பொருத்தமான சுற்றுப்புற வெப்பநிலைக்கு இணங்கக்கூடிய துணைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

08.வாயு கசிவு குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சிலிண்டரிலிருந்து வித்தியாசமான  வாசனை வருகிறதா என்பதில் அவதானமாக இருங்கள்.

9.இந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துக்களில் அதிகமானவை அடுப்பின் கண்ணாடி உடைந்தது தொடர்பானவையே.

10.அடுப்பு பாவனை முடிந்ததும், ரெகுலேட்டரை அகற்றாமல், அடுப்பிற்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் ஆழியை திருப்பி, எரிவாயு விநியோகத்தை நிறுத்துங்கள்.

11.சமையலறையில் எரிவாயு அடுப்பை இயக்க ஆரம்பிப்பதற் முன்னர் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து விடுங்கள். மேலும், எரிவாயு விநியோகத்திற்கு முன், அருகில் மின் இணைப்பு, மொபைல் போன்கள் போன்றவை தவிர்த்து விடுங்கள்.

இதேவேளை, இன்றைய தினமும் நாட்டின் சில பகுதிகளில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்த முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 0115811927 மற்றும் 0115811929 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

உலகை அச்சுறுத்த ஆரம்பித்துள்ள ஒமிக்ரோன் – இந்தியா உட்பட 29 நாடுகளில் ஊடுருவல்!

இந்தியாவிற்குள்ளும் ஒமிக்ரோன் தொற்று ஊடுருவியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய முதன் முறையாக இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலேயே இந்த இரு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 29 நாடுகளிலும் மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளன.

குறிப்பாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

“இந்த பௌத்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் அமைப்பை உருவாக்க வேண்டும்.” – அர்ஜுனரணதுங்க

நல்ல ஊழல் அற்ற குழுவை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட அழைத்தால், தான் தேர்தலில் போட்டியிடத் தயங்கப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (01) தலதா மாளிகையில் வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த போது,

“இந்த பௌத்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் அமைப்பை உருவாக்கும் அதே வேளையில், திருட்டு, ஊழல் மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இளைஞர்களை முன்னோக்கிக் கொண்டு வர வேண்டும். அரசியலில் தேசங்கள், கட்சிகள், மதங்கள் என்று பிரிவினைகள் இருக்கக் கூடாது. மேல் மனிதன் முதலில் திருடுவதை நிறுத்த வேண்டும். அதன்பின் கீழ் திருட்டு நடக்காது. அப்படி ஒரு குழு சேர்ந்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

எரிவாயு சிலிண்டர்களின் இரசாயனக் கலவையை மாற்றுவதற்கு முன், சேதத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும். இன்று இந்த நாடு பணத்தின் செல்வாக்கின் கீழ் உள்ள நாடாக மாறிவிட்டது. நாட்டிலும் விளையாட் டிலும் இவ்வாறு நடப்பது துரதிஷ்டவசமானது என ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் 8 லட்சம் முதல் 9 லட்சம் இளம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பொய் சொல்லி வாக்குகளைப் பெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏஞ்சலோ மெத்திவ்ஸை காண மைதானம் வந்த சிறுவன் – மெதிவ்ஸின் நெகிழ்ச்சியான பதில் !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய போட்டியை காண வந்த சிறுவனின் கையில் இருந்த காட்சி பலகை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.

தனது குட்டி ரசிகருக்கு மெத்திவ்ஸ் விடுத்த அறிவிப்பு!சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸை பார்க்கும் நோக்கத்தில் தான் போட்டியை காண வந்ததாக குறித்த காட்சிப் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பதிவை மேற்கொண்டிருந்தார்.

அதில், போட்டியின் நான்காவது நாளான இன்று சிறுவன் போட்டியை காண வர வேண்டும் என்றும், அங்கு அவரை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

“தேசத்தை பாதுகாக்க வந்தவர்களால் சமயலறையை கூட பாதுகாக்க முடியவில்லை.” – எஸ்.எம்.மரிக்கார்

தேசத்தை பாதுகாக்கவென வந்த அரசுக்கு வீட்டின் சமையலறையைப் பாது காக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

முட்டாள் தனமான பேச்சுக்களை நிறுத்தி விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த நிறுவனங்களுக்கு இதனை விட்டு விட்டுச் செல்ல முடியாது. இரண்டு காரணங்கள் உள்ளன.

எரிவாயு சிலிண்டர் வெடிக்காவிட்டாலும் எரிவாயு கசிவின் மூலமாகத் தான் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிவாயு வெடிப்புகள் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கணிசமான இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தவிர நுகர்வோர் அதிகார சபை சிஐடி மூலம் முறையான பரி சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.

இதன் பின்புறம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய தொழில்நுட்பம் மூலமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையை மாற்றியதற்கான காரணம் என்ன? யார் மாற்றினார்? அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.