10

10

பாகம் 19: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் நிலை – கழகத்தில் பெண்களின் பாத்திரம்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 19 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 19

தேசம்: தோழர் நாங்கள் இவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் இது ஒரு முற்றுமுழுதான ஆண்களுடைய அமைப்பு மாதிரி. ஆனால் நிறைய பெண்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக பாசறைகளில் நிறைய பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல நீங்கள் முதல் ஒரு தடவை குறிப்பிட்டது போல மத்திய குழுவிலும் சரோஜினி இருந்திருக்கிறார்.

அசோக்: சரோஜினிதேவி இருந்தவர்.

தேசம்: அப்போ இந்த பெண்களுடைய பாத்திரம் எப்படி இருந்தது. உண்மையிலேயே மத்திய குழுவில் 20 பெயரில் ஒரே ஒருவர்தான் இருந்திருக்கிறார். ஆனால் அந்த சூழலும் அப்படித்தான் இருந்திருக்கு. பெண்கள் அரசியலுக்கு வருவது மிக குறைவாக இருந்த காலகட்டம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

அசோக்: நான் அதை பற்றி பெரிதாக கதைக்கவே இல்லை . எல்லாம் ஆண் ஆதிக்க சிந்தனைதான் நமக்கு. உண்மையில் பெண்கள் அமைப்பு பற்றி கதைக்காமைக்கு காரணம், இதுபற்றி தனியாக கதைக்கலாம் என்றிருந்தேன். அத்தோடு பெயர்கள் குறிப்பிட்டு உரையாடுவதில் எனக்கு தயக்கம் இருந்தது.

புளொட்டின் பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்ளிலும் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பாக செல்வி, யசோ, நந்தா இருந்தவங்க. அப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவங்களுக்கும் அரசியல் பாசறைகள், வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. பெண்ணியம் தொடர்பாகவும் தேசிய விடுதலைப்போராட்டம் வர்க்க விடுதலை இதன் இணைவு, முரண்பாடு, போதாமை தொடர்பான விமர்சனங்ளோடு கூடிய அரசியல் அறிவை பெண்கள் அமைப்பின் தோழர்கள் பலர் பெற்றிருந்தனர். அந்தளவிற்கு அரசியல் சிந்தனை இருந்தது. ஏனென்றால் மாணவர் அமைப்புகளில் இருப்பவர்கள் பெண்கள் அமைப்புகளில் இருப்பார்கள். கூடுதலாக பெண்கள் அமைப்புகளில் கல்வி ஊட்டல்கள் நடந்தது.

அந்த நேரத்தில் தோழி என்றொரு பெண்ணிய அரசியல் சஞ்சிகை வெளியிடப்பட்டது. செல்வி அதற்கு பொறுப்பாக இருந்தார். அரசியல்பார்வை கொண்ட கலை, இலக்கிய சஞ்சிகையாக அது இருந்தது. அதைப் பார்த்தீர்கள் என்றால் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆக்கங்கள் அதில் வெளிவந்துள்ளது.

மத்திய குழுவில் ஒரு பெண் இருந்தது தொடர்பாக கேட்டீர்கள் தானே. மத்திய குழுவில் பெண் பிரநிதித்துவம் மிக மிக குறைவு. தோழர் சரோஜினிதேவி மாத்திரம் தான் இடம் பெற்றிருந்தார். உண்மையிலேயே அதை கூட்டியிருக்கலாம். நிறைய பெண்கள் இருந்தவர்கள். திறமை வாய்ந்த அரசியல் வளர்ச்சி கொண்ட பெண் தோழர்கள் தளத்தில் இருந்தார்கள். உண்மையிலேயே 20 பேர் கொண்ட மத்திய குழுவில் குறைந்தபட்சம் நான்கு பேராவது பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் தளத்திலிருந்தார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைப் பற்றி யாரும் கதைக்கவும் இல்லை. நான் உட்பட எல்லார்கிட்டயும் அந்தத் தவறு இருக்கு. கட்டுப்பாட்டு குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். அது நடக்கல்ல.

தேசம்: அது மட்டும் இல்லை. இருந்த அந்தப் பெண் தோழருக்கும் பெரிய பாத்திரம் கொடுக்கப்படவில்லை. சம்பிரதாயத்துக்கு அவர்களை வைத்திருந்த போல. சரோஜினிதேவி பற்றி ஒரு குறிப்பான அறிமுகத்தை வைக்கிறது நல்லம் என்று நினைக்கிறேன்.

அசோக்: அவர் ஆரம்பகால உறுப்பினர். காந்தியத்துக்கூடாக வந்தவர். தோழர் சண்முகலிங்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மலையகத்தில் வேலை செய்த ஒரு இடதுசாரி தோழர். காந்திய குடியேற்றங்களில் முன்னணியில் இருந்த தோழர் அவர். அவர் சரோஜினிதேவியினுடைய தம்பி. தோழர் சண்முகலிங்கம் கனடாவில் இறந்திட்டார். சரோஜினிதேவி இப்ப கனடாவில் தான் இருக்கிறார்கள்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் பார்த்தனுடைய ஜென்னியும் முக்கியமான ஆளாக இருந்தவா.

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜென்னி இந்தியாவில் கம்யூனிகேஷன் பயிற்சி முடித்து தளத்துக்கு வாராங்க. ஒரு கட்டத்தில் தளத்துக்கான பெண்கள் அமைப்பை அவர்தான் பொறுப்பெடுக்கிறார்.

தேசம்: இதில உண்மையா பெண்களின் பங்களிப்பை பொறுத்தவரைக்கும் ஆக பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் பெண்கள் பொறுப்பாக போடப்படுதா? விடுதலைப் புலிகளிலும் இதே பிரச்சனை தானே இருந்தது. விடுதலைப்புலிகள் பெண்களும் சரிசமமாக யுத்தகளத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட பதவிகள் பொறுப்புகள் என்று வரும்போது பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் அவர்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அரசியல் பிரிவுகளில் அவர்களுடைய பாத்திரம் பெருசா…

அசோக்: ஒரு காலகட்டத்தில் புளொட்டில் முரண்பாடுகள் வந்த பிற்பாடு மாநாட்டுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் நேசன் ஆட்கள் வெளியில போனபிறகு நேசனின் இடத்துக்கு பெண் தோழர் தான் நியமிக்கபட்டவர். வனிதா என்று நினைக்கிறேன்.

தேசம்: யாழ் மாவட்ட பொறுப்பாளராக

அசோக்: ஓம். யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்த வங்க.

தேசம்: இதில 85 ஆம் ஆண்டு கால கட்டங்களில் என்று நினைக்கிறேன் மணியம் தோட்டத்தில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அது புளொட் என்று சொல்லியும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தில் புஷ்பராஜா கூட பதிவு செய்திருக்கிறார். அது சம்பந்தமாக நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்.

அசோக்: மணியம் தோட்டத்திலிருந்து பெண்களுடைய சடலம் எடுக்கப்பட்டதாக கதை ஒன்று வந்தது. ஆனால் அதற்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை.

தேசம்: அப்படி உடலங்கள் உண்மையில் எடுக்கப்பட்டதா?

அசோக்: எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புளொட் என்று சொல்லி வதந்தி உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அதற்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். அதற்கான சாத்தியம் இல்லை.

தேசம்: மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்த நேரம் அரசியல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய பாத்திரம் எவ்வாறு மதிக்கப்பட்டது? அது அங்கீகரிக்கப்பட்டதா? அதற்கான அங்கீகாரம் இருந்ததா?

அசோக்: எல்லா மாவட்டங்களிலும் விடுதலைக்கான உத்வேகம் இருந்தது தானே. அந்த அடிப்படையில் பெண்களின் பாத்திரம் மதிக்கப்பட்டது. பெண்கள் தொடர்பாக ஒரு வித்தியாசமான, இரண்டாம் பட்சமான பார்வை இருக்கவில்லை. சமநிலையான போக்கு, கண்ணோட்டம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

தேசம்: எல்லா இயக்கங்களுக்குள்ளையும் நடந்த பல்வேறு முரண்பாடுகள் சகோதர படுகொலையாக இருக்கட்டும் எல்லாம் முரண்பாடுகளிலும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் கூடுதலாக அவர்களுடைய வாழ்க்கையும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கு.

அசோக்: பிற்காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கு. இயக்கங்கள் உடைவடைந்து பெண்கள் வெளியேறின பிற்பாடு இந்த சமூகம் பார்த்த பார்வை ஒரு சிக்கலான பார்வை. அது ஆய்வு செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு குடும்ப பாதுகாப்போ சமுகப் பாதுகாப்போ எதுவுமே கிடைக்கவில்லை. உடல் ரீதிலும் உள ரீதிலும் இப் பெண்கள் மிக மிக பாதிக்கப்பட்டடார்கள். நாங்கள் இந்த சமூகம் கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.

தேசம்: 2010ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு விடுதலை புலிகள் இருந்த பெண்கள் கூட மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இருக்கு. அந்த வகையில் புளொட் போன்ற அமைப்பில் நிறைய பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்புகள் வெற்றிகரமாக செயற்படாமல் தோல்வியுற்ற போது இந்தப் பெண்கள் எப்படி வீடுகளுக்குப் போய் … அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அசோக்: நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல பெண்களுக்கு எல்லா இயக்கங்களிலும் இது நடந்துள்ளது .வீடுகளுக்கு போனபோது வீட்டுக்கார ஆட்கள் விரும்பினாலும் கூட சுற்றியிருந்த சமூகம் அந்தப் பெண்கள் மீது ஒரு வித அபிப்பிராயம் கொண்டு இருந்ததால அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது. புளொட்டை பொறுத்தவரை இவ்வாறான நிகழ்வுகள் மிகக்துறைவு. நாங்கள் பெண்கள் அமைப்பினை உருவாக்கம் செய்தபோது தளத்தில்மிக கவனமாக இருந்தோம். முதலில் அவர்கள் முழுமையாக எங்களைப் போன்று விட்டை விட்டு வெளியேறி இயக்கதிற்கு வரும் மனநிலையை மாற்றினோம். வெளியேற்றத்தை எப்போதும் நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அப்படி வெறியேறி வந்த ஒருசிலரை அவர்களை தொடர்ச்சியான அவர்களின் கல்வியை தொடர எல்லா முயற்சிகளையும் நாங்க செய்தம். இவர்கள் மாணவர் அமைப்பிலும் இருந்தபடியால் இது எங்களுக்கு சாத்தியமானது.

இதில் தோழர் குமரனின் ஒத்துழைப்புமிக மிக பெரியது. கடைசி காலங்களில் சில தோழிகளை எங்களுடைய தோழர்களே பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையில் திருமணம் செய்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு. ஒரு ஆணாதிக்க நிலவுடமை சமுக கொடுர மனநிலையை இன்னும் விடாப்பிடியாக தக்க வைத்திருக்கும் சமூகம் எங்களுடையது. இது பற்றி நிறைய கதைக்கலாம். ஆனால் அது என் மன உளச்சலை இன்னும் கூட்டுவதாக போய் விடும். இது ஒரு அரசியல் சமூக ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம். ஏன் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று. ஏனென்றால் எங்களுக்கு சமூகத்துக்கான மனோபாவம் ஒன்று இருக்குதானே. அந்த கோணத்தில் ஆராயவேண்டும் நிச்சயமாக.

தேசம்: திருமணம் செய்து போயிருந்தாலும் பிற்காலத்தில் கூட, அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்திருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு. இந்தப் போராட்ட சூழலா அல்லது சூழல் ஏற்படுத்திய தாக்கமா அதைப்பற்றி நீங்கள் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: நான் முதலில் சொன்னதுதான். புளொட் ஒரு இடதுசாரி இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் புளொட்டில் இருந்த தோழர்கள் எல்லாம் முற்போக்காக இருப்பார்கள் என்று நாங்கள் கருதினால் அது தவறு. இருந்த தோழர் ஒரு பெண்ணையோ தோழியையோ திருமணம் செய்த போது அந்தக் குடும்பங்களில் முற்போக்காக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. ஏனென்றால் நான் சொன்னேன் தானே முற்போக்காக வாழ்வது என்பது ஒரு கோட்பாடு சார்ந்த வாழ்க்கை முறைமை. அது எமது அகநிலையோடும் புற வாழ்வோடும் இணைந்தது. நாங்கள் அரசியல் சமூக தளங்களில் முற்போக்கு என்ற முகமூடியை தரிப்பது என்பது மிகச் சுலபம்… ஆனால் தனிப்பட்ட குடும்பவாழ்வில் முற்போக்கு முகமுடியை நீண்ட காலத்திற்கு அணிந்து ஏமாற்ற முடியாது. எப்படியும் எங்க உண்மை முகம் தெரிந்துவிடும். நாங்க மிக விரைவில அம்பலபட்டு போவம்.

இங்க எங்களுக்கு நடந்த சூழல் துரதிஷ்டவசமானது. நாங்கள்தான் முற்போக்கு முகமூடிகளை தரித்துக் கொண்டமேயொழிய உண்மையான இடதுசாரிகளாகவோ மாக்சிச ஐடியோலொயி கொண்டவர்களாகவோ அதை எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாகவோ நாங்க இருக்கல்ல. அனேகமான குடும்பங்களில் வெறும் ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருந்திருக்கிறோம். குடும்பத்தில் சமநிலையைப் பேணாமை. பெண்களுக்கான உரிமையை கொடுக்காமை. சினேகிதியாக தோழியாக பார்க்கிற தன்மை மிகக் குறைவாகத்தான் இருந்தது.

தேசம்: மற்றது அண்மையில் நீங்கள் எழுதி இருந்தீர்கள் அது ஏற்கனவே ஜென்னி அவர்களும் எழுதி இருந்தார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த பெண் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பற்றி. அது சம்பந்தமாக சுருக்கமாக சொல்ல முடியுமா. அந்த சம்பவம் பற்றி. பெயரைக் குறிப்பிடாமல் சொல்லலாம்.

அசோக்: தீப்பொறி பற்றிய உரையாடலுக்குப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.

“நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட மற்றும் ஆக்கபூர்வமான முறையில் முன்னேறும்.” – பிரதாமர் மகிந்த ராஜபக்ஷ

முழு அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 வரவு -செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சு பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொடர்புடைய கொள்கைகளை உள்ளடக்கும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும், நிலையான அபிவிருத்திச் சபையும் இது தொடர்பில் பொறுப்பான பணியை நிறைவேற்றுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அனைத்துக் கொள்கைகளும் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமும் இந்த விடயத்தில் பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்படவுள்ள விவசாயிகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தை 2023 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட மற்றும் ஆக்கபூர்வமான முறையில் முன்னேறும் என அரசாங்கம் நம்புவதாகவும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் செய்துள்ள பெருமளவான கண்தானம் – கண்கள் எவ்வாறு கிடைத்தது.?

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அதேநேரம் வடகிழக்கில் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டியும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைவேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் மட்டக்களப்பு மாவட்ட சங்க உறுப்பினர்கள்,அருட்தந்தையர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணைவேண்டும் என்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தமது உறவுகளை மீட்டுத்தரவும் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையினை வெளிப்படுத்தவும் சர்வதேச சமுகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கமே ஒப்படைக்கப்பட்ட,சரணடைந்த பிள்ளைகள் எங்கே,அச்சுறுத்தாதே அச்சுறுத்தாதே அரச புலனாய்வுத்துறையினர் மூலம் அச்சுறுத்தாதே,சர்வதேசமே மறுக்கப்படும் நீதியைப்பெற்றுத்தா,இலங்கை அரசே உம்மிடம் கையளித்த எங்கள் பிள்ளைகள் எங்கே,சர்வதேசமே இலங்கை அரசுக்கு துணைபோகாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் பெருமளவான கண்தானம் செய்துள்ளதாக அந்த நாடுகளில் உள்ள முக்கிஸ்தர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த கண்களை இலங்கை அரசாங்கம் எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள்   உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் ஆகியோரினால் கோரப்பட்டது.

கொக்கட்டிச்சோலையில் மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை !

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் குடும்பப்பெண் ஒருவர் தூக்கிட்டு நேற்று (09) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகிழடித்தீவு பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான கதிராமப்போடி தேவதேவி வயது 61 என்பவரே தனது வீட்டில் சமயல்வேலைகளை முடித்து விட்டு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சமயலறையில் தனக்குத்தானே சுருக்கிட்டு தற்கொலைக்கு முயன்றபோது சம்பவத்தை கண்ட அவரின் மகன் தூக்கிலிருந்து மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“எனக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்கவில்லை.” – ரணில் விக்கிரமசிங்க

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்வதற்கு எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லையெனத் தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் என்றும் கூறினார்.

பிரதமர் பதவியை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என தகவல்கள் கசிந்திருந்தன. அதில், உண்மை எதுவும் இருக்கின்றதா? என்பது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணிலிடம் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்கத்துக்குள் இணைத்துக்கொண்டால், பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்ப முடியுமென்பது பலரது கருத்தாக இருக்கிறதென பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில், தற்போது ஏற்பட்டிருக்கும் ஐக்கிய அமெரிக்க டொலர் பற்றாக்குறை, அடுத்தவருடம் ஜனவரி இறுதி வரையிலும் இருக்கும். பொருளாதாரமும் மிகவும் கடினமான நிலையில் நிற்கிறது என்றும் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் கடினமான வருடமாக இருக்கும் என்றார்.

தமிழ் பேசும் மக்களை பிரிக்கும் செயற்பாட்டுக்கு துணைபோகும் பிள்ளையான் – நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டிய சாணக்கியன் !

தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும். விசேடமாக நீங்கள் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால், இதற்கு ஆதரவாக வாக்களிக்க நீங்கள் சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.

“நீண்டகாலமாக சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, முகநூல் பதிவுகளுக்காக சிறைகளிலுள்ளவர்களின் விடுதலை, வடக்கு – கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துங்கள்.“ என நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.

அதேபோன்று இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால், ´ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தால் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகதத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விடுதலை, கொரோனாவினால் உயிரிழப்போரின் ஜனாசாக்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதனை நிறுத்துங்கள், ஞானசார தேரர் தலைமையிலான செயலணியினை கலையுங்கள்.“ உள்ளிட்ட நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.

மேலும் அண்மையில் கிண்ணியாவில் படகுவிபத்தில் உயிரிழந்த சிறுவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அங்கே சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் இங்கே களனிபாலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனையும் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அத்துடன், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பிள்ளையானும் துணைபோகின்றார்.´ எனத் தெரிவித்துள்ளார்.

93 மேலதிக வாக்குகளால் 2022 க்கான பாதீடு !

அடுத்த வருடத்துக்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாதீ்ட்டுக்கு ஆதரவாக  157  வாக்குகளும் எதிராக  64  வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்றுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து, இன்று மாலை 6 மணியளவில் இதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமானது. பாதீட்டுக்கு ஆதரவாக பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ்.தௌபீக், இஷாக் ரஹ்மான், நஷீர் அஹமட் ஆகியோர் வாக்களித்திருந்தனர்.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி எதிராக வாக்களித்தது.