17

17

40வயது பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த 70 வயது முதியவர் !

நெல்லியடி கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவருக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ச்சியாக கொடுத்துவந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய முதியவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.

மத்தொணி பகுதியைச் சேர்ந்த முதியவரே, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் குறித்த 40 வயதுடைய பெண் பணிபுரிந்து வருகின்றார். அவர் தினந்தோறும் பேருந்து ஏறுவதற்காக வரும் போது மேற்படி முதியவர் வாய் மற்றும் கை சைகைகளை பயன்படுத்தி குறித்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண் நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றையதினம் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்த பொழுது , கைகளை பயன்படுத்தி பெண்ணை வெளியில் வருமாறு அழைத்து சைகை மூலம் சில்மிஷம் செய்துள்ளார்.

குறித்த முதியவரின் துன்புறுத்தல் தாங்கமுடியாத பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த பட்டிருந்தார்.

வழக்கினை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் அவரின் மனநிலை தொடர்பில் மனநோயியல் வைத்தியரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நெல்லியடி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழில் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – மூவர் கைது !

யாழ்ப்பாணம் மானிப்பாயில் கடந்த புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து பெற்றோல் குண்டுத்தாக்குதலை நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்குள் புகுந்த கும்பல் பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

வைத்தியர் ஷாபி விடயத்தில் உரிய விசாரணைகளை நடத்துங்கள் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கோரிக்கை !

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கடிதத்தை மீளப்பெற்று உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அத்துடன் ஷாபி விடயத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபியை மீண்டும் பணிக்கு அழைப்பதும் அவருக்கான கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கான முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மூலமாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கிலாந்தை விரட்டும் கொரோனா – ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா பாதிப்பு !

இங்கிலாந்தில் ஒரு பக்கம் ஒமிக்ரோன் தொற்று தீவிரம் காட்டத்தொடங்கி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அங்கு ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் மக்கள் இதையொட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறபோது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.

தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி தேவையில்லாமல் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

வடகொரியாவில் 11 நாட்களுக்கு சிரிக்கவும் அழவும் தடை – மீறினால் கைது !

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம்போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு உடனே கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.

நாடு பொருளாதார சிக்கலில் – நத்தார் கொண்டாட அமெரிக்கா சென்றுள்ள பஷில்ராஜபக்ஷ !

நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், எவ்வித தடையுமின்றி நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக நிதியமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘கிராமத்திலிருந்து ஆரம்பிப்போம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 15ஆம் திகதி தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது டொலர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் துறைமுகத்தில் விடுவிக்க முடியாத கொள்கலன் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் சமையல் அறைகளில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாவதுடன்,  யுகதனவி ஒப்பந்தம் விவகாரம் உச்சத்தில் இருக்கும் வேளையில் நாட்டின் நிதியமைச்சர் தனிப்பட்ட விடயங்களுக்காக வெளிநாடு செல்வது சரியல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு வருடகாலத்திற்குள் ஆயிரக்கணக்கிலான சிறுவர் வன்முறை சம்பவங்கள் !

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10,713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 1,632 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை வருத்தமளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் 6 முதல் 10 வயதுக்கிடைப்பட்ட 2,626 சிறுவர்களும் அடங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்