20

20

பிலிப்பைன்ஸ் புயல் – உயிரிழப்பு 208 ஆக உயர்வு !

தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை ‘ராய்’ புயல் புரட்டிப் போட்டது.
கடந்த 2 நாட்களாக 121 கி.மீட்டர் முதல் 168 கி.மீட்டர் வேக அளவுக்கு வீசிய சூறாவளி காற்றுக்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
சூறாவளிக் காற்றுடன் பயங்கர மழை பெய்ததால் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வாகன போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்தன. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கி உள்ளன. விவசாய பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன.
இந்த புயலுக்கு 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ராய் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
50-க்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர். அவர்களின் கதி என்ன வென்று தெரியவில்லை. அங்கு மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

35 வயதில் சிலியின் ஜனாதிபதியாகிறார் கேப்ரியல் போரிக் !

தென்அமெரிக்கா நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இளம் இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக இளம்வயது அதிபர் என்ற பெருமையை போரிக் பெற்றுள்ளார். கேப்ரியல் போரிக், 35 வயதாகும் இவர் தான் சிலி நாட்டின் அதிபர் பதவியை அலங்கரிக்க இருக்கும் இளம் கம்யூனிஸ்ட் தலைவர். அதிபர் பதவி புதிது என்ற போதும் கடந்த காலங்களில் சிலி அரசின் முடிவுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டக்களங்களில் கேப்ரியல் போரிக் மிகவும் பிரபலம்.

சிலி நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாபெரும் போராட்டம் நாட்டையே உலுக்கியது. தரமான கல்வி, உதவி தொகை அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சிலி அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் முக்கிய நபரான போரிக் தான் தற்போது  அந்நாட்டின் புதிய அதிபர். இந்த போராட்டம் தான் தற்போது பதவியிலிருந்து வெளியேறும் அதிபர் செபாஸ்டியன் பெனெரா அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்கும் வாக்கெடுப்பு நடத்தும் நிலையை உருவாக்கியது.

பெரும்பான்மையான சிலி மக்கள் இந்த வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்க ஆதரவு அளித்தனர். புதிய அரசியல் அமைப்பு வரும் 2022 ஆம் ஆண்டு மத்தியில் உருவாக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படவுள்ளது. செபாஸ்டியன் பெனெராவின்  பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து சிலியில் அதிபருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தீவிரமான போராட்டங்களால் இளைஞர்களின் அபிமானத்தையும், ஆதரவினையும் பெற்ற முன்னாள் மாணவர் தலைவர் கேப்ரியல் போரிக்கை இடதுசாரி கட்சி களத்தில் இறக்கியது. வலதுசாரி தரப்பில் ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட் என்பவர் போட்டியிட்டார்.

பொது சுகாதார அமைப்பு, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, பெரும் செல்வந்தர்களுக்கு அதிகவரி, தனிநபர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட போரிகின் தேர்தல் வாக்குறுதிகள் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றது. பரபரப்பான தேர்தல் பரப்புரைகளை அடுத்து சிலி அதிபருக்கான தேர்தல் நடைபெற்று, முடிவுகள் ஞாயிறு அறிவிக்கப்பட்டன. இதில் 55. 87% விழுக்காடு வாக்குகள் பெற்று சிலியின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார் கேப்ரியல் போரிக். கேப்ரியல் போரிகின் வெற்றியை நாடுமுழுவதிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சாலைகளில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சிலியின் தேசிய கொடிகளை ஏந்திய படி ஆடிப்பாடினர். போரிக்- கை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி தலைவர் ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட் 44% வாக்குகளை பெற்றிருந்தார். கேப்ரியல் போரிக் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி சிலி நாட்டின் அதிபராக முறைப்படி பதவி ஏற்க உள்ளார். அரசியலில் தீவிரம் காட்டி வந்ததால் கேப்ரியல் போரிக் சட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை. இன்னும் திருமணம் ஆகாத அவருக்கு ஐரீன் என்ற காதலி இருப்பது குறிப்பிடத்தக்கத்து.

“அதிகாரப் பரவலாக்கம் அர்த்தமுள்ள வகையில் தமிழர்களுக்கு ஒரு போதும் கிடைக்காது.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு !

“அதிகாரப் பரவலாக்கத்தை அர்த்தமுள்ள வகையில் செயற்படுத்தும் ஒரு வழிமுறையை இலங்கை அரசியலின் ஒற்றையாட்சி ஒருபோதும் வழங்கப்போவதில்லை.” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாக ஈழத்தமிழர் உறவுகள் எதிர்பார்த்து நிற்பது சர்வதேச நீதியை. உள்ளகப் பொறிமுறையும் அல்ல. கலப்புப் பொறிமுறையும் அல்ல. வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கைத் தீவில் இன அழிப்பின் ஓர் அங்கமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதைச் சர்வதேசப் பொறிமுறை ஊடாக விசாரிக்குமாறு கோரவேண்டிய தமிழ் அரசியற்தரப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

இதுவரை சர்வதேச நீதிக்கான வாய்ப்பு உருவாகியபோதெல்லாம் அதை நீர்த்துப்போகச் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசுமீது மேற்குலகம் இந்தியாவின் ஆதரவுடன் கொண்டுவரவுள்ள அடுத்த தீர்மானத்தை இலங்கை அரசு சாதிப்பதற்காகத் தனது இராஜதந்திர நகர்வுகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அதேவேளை, பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா உதவவேண்டும் என்று விண்ணப்பிக்க ரெலோவின் வழிகாட்டலில் புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எவ் மற்றும் நீதியரசரர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

அதாவது ஓர் அணி பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாக வைத்துக்கொண்டு அதற்கு மேலே பையப்பையச் சென்று ஏதோ சமஸ்டியை எட்டிப்பிடித்துவிடலாம் என்ற ஒரு தவறான திசையை அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் என்று சொல்கிறது. மற்றைய அணி பதின்மூன்றை 1987 இல் இருந்தவாறே அப்படியே தந்தால் போதும் என்று ஏற்னவே தவறாகிப் பாதகமாகிவிட்ட திசையைக் காட்டித் தமிழ்த் தேசியத்தைக் கெடுக்க முயல்கிறது.

பதின்மூன்று என்ற ஒரு பலனற்ற கம்பத்தைப் பிடித்துக்கொண்டு இடப்புறமாக ஓர் அணி சுற்றுவது போலவும் மறு அணி பதின்மூன்று பிளஸ் என்று வலப்பக்கமாகச் சுற்றுவதும் போலவும் அர்த்தமற்ற ஆரம்பப் புள்ளியிலேயே தமிழத் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு அணிகளும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்களைக் குழப்பி முடக்கியுள்ளன. முரண்பட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட தரப்புகளில் ஒன்றான நாம் பொறுப்புக்கூறல் பற்றிய நகர்வுகளை இவர்களின் இந்த நடவடிக்கைகள் பற்றிய எமது கருத்தைத் தெரிவிக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

அதிகாரப் பரவலாக்கத்தை அர்த்தமுள்ள வகையில் செயற்படுத்தும் ஒரு வழிமுறையை இலங்கை அரசியலின் ஒற்றையாட்சி ஒருபோதும் வழங்கப்போவதில்லை. சமஸ்டி என்று கதைப்பவர்கள் ஏன் அதிகாரப்பரவலாக்கம் என்ற சொற்பிரயோகத்தைக் கையாளவேண்டும் என்பதே எமது கேள்வி. ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் வடக்கும் கிழக்கும் இணைந்த பாரம்பரியத் தாயகம் என்பதை தமிழர் தரப்பு இந்தியாவைப் பகிரங்கமாக அங்கீகரிக்குமாறு கோரவேண்டும்.

அதைப் போலவே, ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் வடக்கு,கிழக்கு உள்ளடக்கப்படல் ஆகாது என்றும் அது ஒரு சம அந்தஸ்துள்ள சுயாட்சி அரசாக, தனக்கேயுரிய வெளிவிவகார உரிமைகளைப் பெற்றதாக அமையவேண்டும் என்றும் இந்தியா அங்கீகரிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தவேண்டும்.

இந்தியாவிடம் ஈழத்தமிழர்களாக நாம் எதைக் கோரவேண்டும் என்பதில் எம்மைச் சார்ந்து எமது கட்சிகளின் தலைமைகள் சிந்திப்பது அவசியம்.

இந்தியா ஈழத் தமிழர்களுக்கான தனியான வெளியுறவை அங்கீகரிக்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய தருணம் இது. உள்ளகப் பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியற் தீர்வுப் பொறிமுறையையே உடனடித் தீர்வாகவும் ஆரம்பப் புள்ளியாகவும் இந்தியா வலியுறுத்தவேண்டுமாறு தமிழர் தரப்புக் கோரவேண்டும்.

அப்போது மாத்திரமே, இங்கே பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கான சர்வதேச நீதிக்கான கதவுகள் திறக்கும். ஒருபோதும் இலங்கையின் ஒற்றையாட்சி சர்வதேச நீதிக்கான கதவுகளை திறக்க அனுமதிக்காது என்பதைப் புரிந்த நிலையில் தமிழர் தரப்புக் கட்சிகளின் முடிவுகள் அமையவேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் விகாரையின் முன்னிருந்த பிள்ளையார்சிலை மாயம் !

யாழ். காங்கேசன்துறை குமார கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையைக் காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை குமார கோவில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து , குமார கோவில் புனரமைக்கப்பட்டு ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி இரவு ஆலயத்தில் இருந்த விநாயகர் சிலை இருப்பிடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலய வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.” – சுரேன் ராகவன்

“இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன். எனவும் சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் கரிசனை கொண்டுள்ளதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் சீன தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,

“இலங்கை சுயாதீனமான சுதந்திரமான நாடு என்ற ரீதியிலும் எங்களுடைய எதிர்காலத்திற்காகவும் வெளிவிவகார உறவினை எங்களுடைய நாட்டின் பெருமைக்காகவும் தனித்தன்மைக்காகவும் பாவிக்க வேண்டியதாக உள்ளது. இலங்கை ஒரு நாட்டின் பகடைக்காயாக மாறக்கூடாது. அண்மையில் இடம்பெற்ற சீனத் தூதுவரின் விஜயம் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதைவிட அவர் அங்கே கூறிய கருத்துக்கள் எமக்கு கரிசனையாக இருக்கின்றது.

அவை இந்தியாவையும் இலங்கையையும் பகை செய்யும் விடயங்களாக சிலர் ஊடகங்களில் கூறியிருக்கிறார்கள். இந்தியா எங்களுடைய தொப்புள்கொடி உறவு, எங்களுடைய உண்மையான தாய்நாடு, அங்கிருந்து வந்த மதம், மொழி எல்லாமே எங்களுக்கு சொந்தமாகியிருக்கிறது.

எனவே இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன். எனவே வருகின்ற நாட்களில் இந்த அரசியல் விடயம் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களிடையே மோதல் – 5 மாணவர்கள் காயம் !

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஜமானியை கண்ட துண்டமாக வெட்டி தங்க நகைகளை களவெடுத்த தந்தையும் மகளும் – மட்டக்களப்பில் சோகம் !

மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை கண்டம் துண்டமாக வெட்டியதையடுத்து அவர் உயிரிழந்ததையடுத்து அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து சொப்பின் பையில் கொண்டு செல்ல  முற்பட்ட அங்கு வேலை செய்த வேலைக்காரி அவரின் தந்தை ஆகிய  இருவரை பொதமக்கள் மடக்கிபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது  இதனையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பார்வீதியைச்சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவர், வாழ்ந்துவருகின்ற நிலையில் சம்பவதினம் இன்று பகல் கடந்த காலத்தில் அங்கு வீட்டுவேலை பார்த்துவந்த பெண் ஒருவர்;  தந்தையாருடன்  சென்று தனது கஸ்டத்தை தெரிவித்துள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் மதியபோசன உணவை சாப்பிட்டுவிட்டு நித்திரை கொள்வதற்கு மேல்மாடிக்கு சென்றுள்ளா.

அதேவேளை மகளும் உணவை உண்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளனர் அதேநேரம் உயிரிழந்தவர் குறித்த வேலைக்காரி மற்றும் அவரின் தந்தையாரை உணவு உண்டுவிட்டு போகமாறு அமர்த்தியுள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்ணை கத்தியால் கழுத்து மற்றும் கைகளை துண்டாகவெட்டியதையடுத்து அவர் உயிரிழந்ததையடுத்து அவரின் கழுத்தில் இருந்த தங்க ஆபரணங்களையும் காதில் உள்ள தோட்டை காதுடன் அறுத்தெடுத்து செப்பின் பையில் போட்டு எடுத்துக் கொண்டு ஆட்டோ ஒன்றில் தப்பியேயாட முயற்சித்தபோது அங்கு விதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்தனர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்ட பெண் திருமணம் முடித்துள்ளதாகவும் இவர்கள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர். அதனையடுத்து பொலிஸ் தடயவியல் பிரிவு  வரவழைக்கப்பட்டு இது தொடர்பான  மேலதிக விசாணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

“நாட்டை முன்னேற்ற நாம் தயாராக இருக்கிறோம்.” – அநுரகுமார திஸாநாயக்க

இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது, விலைகள் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியும் துறைமுகத்தில் சிக்கியுள்ளது .

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்க் கொண்டு, இலங்கை கடனை அடைக்க முடியுமா என்பது அனைவருக்கும் உள்ள கேள்வியாக உள்ளது.

மக்களின் முன்னேற்றத்துக்காக நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளை வழிநடத்த மக்கள் விடுதலை முன்னணி சக்தி தயாராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் – உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் !

தமிழர் தாயகப் பகுதியில் சிறுமியின் சடலம் மீட்பு - உடற்கூற்று பரிசோதனையில்  வெளியான திடுக்கிடும் தகவல் - ஐபிசி தமிழ்

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்த போது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி முல்லைத்தீவு மூங்கிலாறு கிராம மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூங்கிலாறு கிராமத்தில் இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அன்று பாழடைந்த வளவின் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 13 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக/ அல்லது கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார். அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

யோகராசா நிதர்ஷனா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (18)இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். திருகோணமலைக்கு இவரது குடும்ப அங்கத்தவர்கள் சென்றிருந்த நிலையில் தாயாருடன் தனிமையில் வீட்டில் இருந்த சிறுமி அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களை நிறுத்த சென்ற சமயத்தில் கடந்த 15 ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாக இவரது தாயாரால் கடந்த 15 ஆம் திகதி மாலை 2 மணிக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலையில் உள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற சிறுமி , கடந்த ஜூலை மாதம் வீடு திரும்பியிருந்தார். அதன்பின்னர் அவர் வீட்டிலேயே குடும்பத்தினருடன் வசித்து வந்திருந்தார். காணாமல் போயிருந்த சிறுமி தனது வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பாழடைந்த வளவின் பற்றைக் காணி ஒன்றில் நேற்று முன்தினம் 18ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட் நீதிமன்ற பதில் நீதவான் ரி .பரஞ்சோதி முன்னிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவின் விசாரணையோடு சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் சடலம் மீதான பரிசோதனைகள் இடம்பெற்றது. குறித்த பரிசோதனையில் சிறுமியின் பெண் உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநர் சட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அத்தோடு சடலம் மீதான பரிசோதனையில் சிறுமி 2 மாத கருவுற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டாரா? கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டாரா? சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டாரா? போன்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.