21

21

அத்துமீறினால் அரசுடமை – எச்சரிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுக்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும் எனவும், அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈட்டை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே வெடிப்புக்கு காரணம்!

எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே எரிவாயு வெடிப்புகளுக்கு காரணம் என, எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பலகே இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், சிலிண்டர்களிலிருந்து எரிவாயுக் கசிவு ஏற்படுவதை சோதனை செய்ய லிட்ரோ நிறுவனத்திடம் உரிய முறைமைகள் எதுவும் இல்லை என்பதும் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பேக்கரி உற்பத்திகளுக்கும் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்

இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பல் என்பவற்றின் அடிப்படையிலேயே விலைகள் தீர்மானிக்கப்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சொல்பேச்சைக் கேட்க மறுத்த உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் உட்பட இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகவும் இன்று (21) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரவு செலவுத் திட்டத்தில் நடுநிலை வகிப்பதாக கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடி சமூகநலன் சார்ந்து முடிவு எடுக்கப்பட்ட போதும் குறித்த உறுப்பினர் எதிர்த்து வாக்களித்துள்ளதாக க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் கட்சியின் முடிவை மீறி செயற்பட்ட காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவரும் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக க.சுகாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நடுநிலை வகித்திருந்தால் வரவு செலவுத் திட்டம் தவிசாளரின் மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.