24

24

இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் – லிற்றில் எய்ட் ஒளிவிழாவில் வண பிதா எஸ் கே டானியல் சிறப்புரை

தமிழ் இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பில் நத்தார் தினத்தையொட்டி நடந்த ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வண பிதா எஸ் கே டானியல் தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் பணத்துக்கு அடிமையாகி கூலி அடிமைகளாக மாறும் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்த வண பிதா டானியல் எல்லா சமயங்களும் அன்பையே போதிக்கின்றன, யேசுபிரான் அன்பின் அவதாரமாகவே பிறந்து இந்த உலகத்தை காக்கின்றார் என்றும் அன்பையும் காருண்யத்தையும் உடையவர்கள் யேசுவின் சகோதரர்கள் ஆவீர்கள் என்றும் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் மாணவிகளாலும் மாணவர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். லண்டனில் இருந்து தாயகம் செய்னிறருந்த லிற்றில் எய்ட் அமைப்பின் உறுப்பினர் டொக்டர் பொன் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து மாணவ மாணவியருக்கு பரிஸில்களை வழங்கினார்.

மேலும் லிற்றில் எய்ட் கிளிநொச்சி உறுப்பினர் குகனும் லிற்றில் எய்ட் ஆசிரியை அனுஷியாவும் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினர். லிற்றில் எய்ட் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி, கணணி தொழில்நுட்ப ஆசிரியர்கள் பவதாரனி, கோபி ஆகியோர் நிகழ்வை மேற்பார்வை செய்து மாணவ மாணவிகளுக்கு அணுசரனையாகச் செயற்பட்டனர்.

மாணவிகளின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் செல்வி அ அன்பரசி வருகைதந்தோரை வரவேற்றுக்கொள்ள வண பிதா போல் அனக்கிளிற் ஆசியுரை வழங்கினார். மாணவன் ச தர்சன் தலைமையுரை நிகழ்த்தி விழாவை ஆரம்பித்து வைக்க மாணவர்கள் கி ஐதுஷிஹன், அ கடல்வேந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வு முற்றிலும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களினாலேயே நிகழ்த்தப்பட்டமையும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி விருத்தியுடன் மட்டும் நின்று விடாமல் அவர்களின் ஆளுமை விருத்தியையும் மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்றது. காலம்சென்ற வயித்தீஸ்வரன் சிவஜோதி லிற்றில் எய்ட் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் கிளிநொச்சியின் சமூக மையத்தளமாக லிற்றில் எய்ட் வளர்க்கப்பட வேண்டும் என்ற கனவுக்கு அவர் உரமளித்திருந்தார்.

மாணவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய வண பிதா போல் அனக்கிளிற் நாங்கள் அனைவரும் அன்பினால் இணைக்கப்பட்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பையும் விதந்துரைத்தார்.

இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக காட்டமாக தனது கருத்துக்களை முன்வைத்த வண பிதா டானியல் அண்மையில் கிளிநொச்சி சாந்தபுரத்தில் வாள்வெட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையைச் சுட்டிக்காட்டி இவ்வாறான வழிகளில் இளைஞர்கள் செல்வதை தடுப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் சரியானவர்களாக நடக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். வ சிவஜோதியின் வழிகாட்டலில் வளர்ந்த இந்த மாணவர்கள் அப்படிச் செல்லமாட்டார்கள் என்றும் அவ்வாறு சென்றால் அது சிவஜோதியின் கனவுகளை மிதிக்கின்ற அவருடைய ஆத்மாவை அவமதிக்கின்ற செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த இளைஞர்களை வழிப்படுத்துவதில் வழிநடத்துவதில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பு மிகக் காத்திரமானது எனத் தெரிவித்த வண பிதா டானியல், இவர்களின் இந்த சேவை இந்தப் பகுதிக்கு மிக அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் லிற்றில் எய்ட் இணைப்பாளர் மற்றும் ஆசிரியர்களோடு உரையாடிய லண்டனில் இருந்து வந்திருந்த லிற்றில் எய்ட் உறுப்பினர் டொக்டர் பொன் சிவகுமார் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டியும் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக தனது சேவைகளை கிளிநொச்சி மண்ணில் வழங்கி வரும் லிற்றில் எய்ட் கணணிக் கற்கை நெறிகளோடு சுயதொழில் வேலை வாய்ப்பிற்கான தையல் மற்றும் வடிவமைப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. ஆங்கில மொழிக் கல்வி லிற்றில் எய்ட் இல் வழங்கப்படுவதுடன் கிளி விவேகானத்தா பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழி வகுப்புகளை நடத்துகின்றனர். மேலும் கல்வியூட்டலுக்கு அப்பால் மாணவர்களின் ஏனைய துறைகளை வளர்ப்பதற்காக விளையாட்டு – செஸ் கிளப் நடத்தப்படுகின்றது. லண்டனில் இருந்து சேனன் இதனை நடத்துகின்றார். மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கான சிரமதானம், கலைநிகழ்வுகள், விழ்ப்புணர்வு நிகழ்வுகள் என்பனவற்றையும் மாணவர்கள் தம் பொறுப்பில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இலங்கை மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் உள்ளிட்ட மீனவர் அமைப்புகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து மீனவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றல் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மீனவர்கள் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

A9 வீதியை மறித்து மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதால், போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அரசுடைமையாக்கி, மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் இதன்போது கூறினார்.

கடற்றொழில் அமைச்சரின் உறுதிமொழியினையடுத்து, ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 68 இந்திய மீனவர்களையும் அவர்தம் 10 படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்தாவது நாளாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாம்பன் மீனவர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்வதுடன், தங்கச்சிமடம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

“எண்ணெய்க்கு பதில் தேயிலை.” – ஈரானுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட அமைச்சுக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கைத்தொழில், சுரங்கம் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் ஈரான் இஸ்லாமியக் குடியரசும் கடந்த 21 ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கைச்சாத்திட்டன.

இலங்கை பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கைத்தொழில், சுரங்க, வர்த்தக பிரதி அமைச்சர் அலிரேசா பேமன்பக் ஆகியோர் அந்தந்த அரசாங்கங்களின் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

பொருளாதார உறவுகள் துறையில் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, எண்ணெய்க் கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு சிலோன் தேயிலையின் விற்பனையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, நிறுவனத் தோட்ட சீர்திருத்தங்கள், தேயிலை மற்றும் இறப்பர் தொடர்பான பயிர் அறுவடை மற்றும் தொழிற்சாலைகளை நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை / இறப்பர் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யூ.டபிள்யூ.டி. சுமித் விஜேசிங்க, இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் நாயகம் அனுர சிறிவர்தன, இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தொழில், சுரங்க, வர்த்தக பிரதி அமைச்சர் அலிரேசா பேமன்பாக் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக மரியாதை நிமித்தம் சந்தித்து, பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர்.

வைத்தியர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட 500 வைத்தியர்களுக்கான நியமனங்கள் தொடர்பில் தங்களது சங்கத்தின் ஆலோசனை பெறப்படவில்லை என்பது உள்ளிட்ட ஒரு சில விடயங்களை தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (20) முதல் மன்னார், நுவரெலியா, திருகோணமலை, இரத்தினபுரி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஆரம்பமான இப்பணிப்புறக்கணிப்பு போராட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை (21) முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குறித்த போராட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருப்பதிக்கு சென்றார் மகிந்த

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) காலை திருப்பதி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பிரதமர் உள்ளிட்டோருக்காக திருப்பதி ஆலயத்தில் இன்று விசேட ஆசீர்வாத பூஜையும் இடம்பெற்றது.

இத்தனிப்பட்ட விஜயத்திற்காக பிரதமர் அரச நிதி எதனையும் பயன்படுத்தவில்லை என்றும் சகல செலவுகளையும் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? – பொன்சேகாவிடம் சிவாஜிலிங்கம் கேள்வி !

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் பொன்சேகா என்பவர் இரட்டை வேடமாக செயற்படுகின்ற ஒருவர். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தோர் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இருந்தவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்ற ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் இலங்கையினுடைய தலைவர்களாக, பிரதமராக இருந்தோர் மற்றும் ஏனையோர் எட்டாம் ஆண்டு பத்தாம் ஆண்டு படித்தவர்கள். பல்கலைக்கழகப் படிப்பு அல்லது பட்டப் படிப்பினை முடித்தவர்களல்ல. ஆனால் அனைவருமே சாதாரண மட்டத்திலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். எனவே இவ்வாறு பல உதாரணங்களைக் கூற முடியும்

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய 15ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டார். அவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு தோற்றவில்லை. அதேபோல ஏனைய இயக்கங்களினுடைய தலைவர்களையும் எடுத்துப் பார்த்தால் அவர்களும் உயர் படிப்புகளை படித்திருக்கவில்லை. ஆனால் அனுபவங்களின் மூலம் செயற்பட்டவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நடைமுறை அரசை ஒரு முப்படையினை கொண்டு வழிநடத்தியவர். குறிப்பாக ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையை ஓயாத அலை என்னும் முறியடிப்பு சமர் மூலம் முறியடித்த பெருமை பிரபாகரனையே சேரும். எனவே அவ்வாறான திறமைகளை புரிந்தவரை இரட்டைவேடம் போடும் பொன்சேகா போன்ற நடிகர்கள் படிக்காதவர் என்று கூறும் அளவுக்கு அவர் எளிதானவர் அல்ல.

இவருடைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? அவருடைய கல்வி நிலை பற்றி பொன்சேகா அறிய வேண்டும். அது தொடர்பிலும் பொன்சேகா தனது கருத்தினை கூற வேண்டும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை கூறி இருக்கலாமே? ஏன் அவ்வாறு கூறவில்லை. அவர் ஒரு நடிகர். இரட்டை வேடம் போடும் நபர் எனவேதான் அவர் தற்போது தென்பகுதி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக சில கதைகளை கூறி வருகின்றார். நாங்கள் இன்று மகிழ்கின்றோம். ஏனென்றால் இவ்வாறான ஒரு வரை ஜனாதிபதியாக நியமித்திருந்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.