26

26

மக்கள் வாழ கஷ்டப்பட்டிருக்கும் போது அமைச்சர்கள் விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளக்கு சுற்றுப்பயணம் !

பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம் உள்ளதால் நாட்டு மக்கள் நிர்க்கதியாகியுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாடு பாரிய நிதி நெருக்கடியை தற்போது எதிர்க்கொண்டுள்ளது. தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிர்வாக கொள்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது. சிறந்தவர்களின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதில்லை. நாடு நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையுள்ளதால் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் பெறும் சிரமங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு காலையில் இருந்து வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொது மக்கள் அன்றாட வாழ்க்கையினை கடத்துவதற்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது குடும்பத்தாரை காண அமெரிக்கா சென்றுள்ளார்.

மறுபுறம் பல அமைச்சர்கள் விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம் உள்ள காரணத்தினால் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளார்கள்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“மனச்சோர்வு, பணவீக்கம், துக்கம், கண்ணீர் மற்றும் வலி ஆகியவை மட்டுமே அரசால் கொடுக்கப்பட்ட ஒரே நிவாரணப் பொதி.” – சஜித் குற்றச்சாட்டு !

“சில அமைச்சர்கள் மக்களுக்கு நிவாரணப் பொதி கொடுப்போம் என்று தம்பட்டம் அடித்தாலும், மனச்சோர்வு, பணவீக்கம், துக்கம், கண்ணீர் மற்றும் வலி ஆகியவை மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரே நிவாரணப் பொதி.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) ஹம்பாந்தோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள சந்தைப்பகுதிகளுக்குச் சென்று ‘மனிதாபிமானத்தின் பயணம்’ எனும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்ததோடு இந் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் பேசிய அவர்,

அரசாங்கம் இன்று “உழவுப் போர்” பற்றி பேசினாலும், நாட்டில் “பஞ்ச யுத்தம்” ஏற்பட்டுள்ளது.  தன்னிச்சையான முடிவுகளின் காரணமாக நாட்டின் விவசாயத்தை அழித்த அரசாங்கம், வீடு வீடாக எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் நாடாக இந் நாட்டை மாறியுள்ளது. சில அமைச்சர்கள் மக்களுக்கு நிவாரணப் பொதி கொடுப்போம் என்று தம்பட்டம் அடித்தாலும், மனச்சோர்வு, பணவீக்கம், துக்கம், கண்ணீர் மற்றும் வலி ஆகியவை மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரே நிவாரணப் பொதி.

17 வருடங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தமாக வந்த சுனாமி அனர்த்தம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்து விட்டது. தற்போதைய அரசாங்கம் இயற்கை அனர்த்தத்திற்குப் பதிலாக, தாங்களே உருவாக்கிய பேரழிவைக் கொண்டு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. அன்று இயற்கை சுனாமியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இன்று ‘பொஹொட்டு சுனாமியால் முழு நாட்டு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நடந்து கொண்டிருப்பது வெள்ளை டை கொள்ளை. எமக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ மக்களுடனான டீல் மட்டுமே உள்ளது.

நகரத்திற்கும் சந்தைக்கும் வந்திருந்த மக்கள் மற்றும் வியாபாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு,நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தயாரிக்கப்பட்ட “குடும்ப ஆட்சியே, நாட்டின் அழிவு” என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தையும் அவர்களிடையே விநியோகித்தார்.

விண்ணில் செலுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கி !

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனம்  இணைந்து உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கி உள்ளன.
பூமி தனித்துவமானதா? பூமியைப் போன்ற கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கான ஆய்விற்கு, வானியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்த உள்ளனர்.
மிகவும் சக்திவாய்ந்த இந்த தொலைநோக்கியானது, தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஏவுதளமான பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ரொக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக நாசா கூறி உள்ளது. பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர்கள், (930,000 மைல்கள்) தொலைவில் உள்ள அதன் இறுதி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மியன்மாரில் கருப்பு கிறிஸ்மஸ் – கிராம மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்ற இராணுவம் !

கிறிஸ்துமஸ் தினமான சனியன்று மியன்மார் இராணுவத்தினர் கிராம மக்களை சுற்றிவளைத்து 30 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தீ வைத்துள்ளனர்.

இவ்வாறு பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகள்/ சிறுவர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தினால் ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனிதாபிமான குழுவின் இரு உறுப்பினர்களும் காணாமல் போயுள்ளதாக ஆதாரங்களை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரின் கிழக்கு மோ சோ கிராமத்திலேயே இந்த சம்பவம் நடத்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து சனிக்கிழமை ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ள சேவ் தி சில்ட்ரன் அமைப்பு, மனிதாபிமானப் பணிகளைச் செய்துவிட்டு வீடு நோக்கி பயணித்த இரண்டு ஊழியர்கள் சம்பவத்தின் பின்னர் காணாமல்போயுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேநேரம் அவர்களின் தனிப்பட்ட வாகனம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதையும் அது உறுதிபடுத்தியுள்ளது.

நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஏறக்குறைய 11 மாதங்களுக்கு முன்பு இராணுவம் கவிழ்த்ததில் இருந்து மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது.  பாதுகாப்புப் படையினரின் ஒடுக்குமுறையில் 1,300 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

“ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய கூடாது.” – தொடரும் தலிபான்களின் அடக்குமுறை !

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
“ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ஹிஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது. பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் பெண்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சி தொடர்களை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையின் அனுமதி பெறாமல் திருகோணமலை எண்ணெய் குதங்களை கையாள புதிய துணை நிறுவனம் !

திருகோணமலை எண்ணெய் குதங்களை கையாள்வதற்கான புதிய துணை நிறுவனமொன்றை உருவாக்குமாறு அமைச்சர் உதயகம்மன்பில இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு முன்னரே இந்த நிறுவனத்தை உருவாக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிறுவனத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அமைச்சரவையின் அனுமதியை பெறுமாறு ஜனாதிபதி தனக்கு உத்தரவிட்டுள்ளார் என உதயகம்மன்பில இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித்விஜயசிங்கவிற்கு தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி அலுவலகம் அமைச்சின் செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருகோணமலை எண்ணெய் குதங்களை கையாள்வதற்காக புதிய நிறுவனத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆரம்பித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய நிறுவனம் டிரிங்கோ பெட்ரோலியம் டேர்மினல் லிமிடட் என அழைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்ஐஓசியுடன் எரிசக்தி அமைச்சு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. எல்ஐஓசியுடன் எண்ணெய் குதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

யுகனதேவி மின்நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையிலேயே திருகோணமலை எண்ணெய் குத நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏலத்திற்கு வருகிறது நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவி – தென்னாபிரிக்க அரசு எதிர்ப்பு !

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா அதிபராவதற்கு முன் தனது வாழ்வில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
தென்னாப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் ராபன் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த சிறையில் காவலராக இருந்த கிறிஸ்டோ பிராண்ட் என்பவர் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரானார்.
இதற்கிடையே, நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட கிறிஸ்டோ பிராண்ட் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கர்ன்சேஸ் என்கிற ஏல நிறுவனம் ஜனவரி 28-ம் திகதி இந்த ஏலத்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விடுவதற்கு தென் ஆப்பிரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏலம் நடத்துவதை நிறுத்தவேண்டும் என கர்ன்சேஸ் நிறுவனத்தையும், கிறிஸ்டோ பிராண்டையும் அரசு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் கலாசார மந்திரி நாதி தெத்வா கூறுகையில், இந்த ஏலம் குறித்து எங்கள் அரசோடு எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த சாவி தென் ஆப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது. அதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்தார்.

நோபல் பரிசு பெற்ற பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் காலமானார் !

தென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர், கேப்டவுனில் காலமானார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பேராயர் எமரிடஸ் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவு, நமது தேசத்தின் துக்கத்தின் மற்றொரு அத்தியாயமாகும் என ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார்.

1931 ஆம் ஆண்டு கிளர்க்ஸ்டோர்ப்பில் பிறந்த அவர், 1984 இல் தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான அவரது பங்கிற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1975 ஆம் ஆண்டில் ஜொகன்னஸ்பர்க்கில் உள்ள செயின்ட் மேரிஸ் கதீட்ரலின் டீனாக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின தென்னாப்பிரிக்கர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊசிபோட்ட தாதியின் இடுப்பை பிடித்தவர் கைது – மாங்குளத்தில் சம்பவம் !

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் ஊசிபோட்ட தாதி ஒருவரின் அங்கத்தை தொட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியினை பெற்றக்கொள்ளசென்ற நபர் ஒருவர் தாதி ஊசிபோடும் போது தாதியின் இடுப்பினை பிடித்துள்ளார்.

இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

அதன் பின்னர், டிசெம்பர் 24 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் போது அவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினரால் பாதுகாப்பான மற்றும் இலகுவான முறையில் மக்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசி ஏற்றும் போது எந்த தாக்கமோ, வருத்தமோ, இல்லாத நிலையில் மக்கள் தடுப்பூசியை பெற்று வருகின்றார்கள் இவ்வாறு தடுப்பூசியினை பெறசென்றவர் தனக்கு கையில் வலி ஏற்பட்டபோது அதனை தாங்கமுடியாமல் தாதியின் அங்கத்தினை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையர் வெளிநாட்டு பிரஜையொருவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியமாம் !

வெளிநாட்டு பிரஜையொருவரை திருமணம் செய்யவிரும்பும் இலங்கை பிரஜை  பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் அனுமதியை பெற்ற பின்னரே திருமணப்பதிவை முன்னெடுக்கவேண்டும் என பதிவாளர் நாயக திணைக்களம் சுற்றறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வாழ்க்கை துணைவர்கள் தங்கள் உடல்நலம் குறித்து ஆவணமொன்றை சமர்ப்பிக்கவேண்டும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களா அல்லது தடுப்பூசிசெலுத்திக்கொண்டவர்களா என்ற விபரங்களையும் வெளியிடவேண்டும் என பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்கள் தாங்கள் ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் கிசிச்சைக்கான செலவு அனைத்தையும் பொறுப்பேற்கவேண்டும் என்பது தங்களிற்கு தெரிந்துள்ளது என்ற ஆவணத்தையும் சமர்ப்பிக்கவேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவின் பேரிலேயே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என பதிவாளர் நாயகம் டபில்யூஎம்எம்பி வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற தீயநோக்கங்களிற்காக பல வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்ய முயல்வதை அவதானிக்க முடிகின்றது அதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது இலங்கையின் திருமண சட்டங்களில் உள்ள பலவீனங்களை சில தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.