26

26

“சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவிக்கான எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை .” – மசாஹிரோ நொஸாகி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் அரசாங்கம் நிதியுதவிக்கான எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்றும் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் மசாஹிரோ நொஸாகி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், சர்வதேச நாணய நிதியத்தினால் அனைத்து அங்கத்துவ நாடுகளுடனும் குறித்த கால இடைவெளியில் இருதரப்புக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதன்போது பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் ஆராயப்படும்.

அக்கலந்துரையாடல்களின் இறுதியில் அதிகாரிகளால் தயாரிக்கப்படும் அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் கையளிக்கப்படும்.

அதன்படி கடந்த 7 அம் திகதி நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்து தொடர்பில் பேச்சுவார்த்தைகளையும் ஆராய்வுகளையும் முன்னெடுத்திருந்ததுடன் கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை அதன் பணிகளை முடிவிற்கு கொண்டுவந்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் நிதியுதவிக்கான கோரிக்கைகள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்று மசாஹிரோ நொஸாகி தெரிவித்துள்ளார்.

இலங்கை வருகிறது இங்கிலாந்து மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல் !

இங்கிலாந்தின் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

மகாராணியார் செய்தி தாங்கிய இந்தக் கோல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பிரபல தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான பொகவந்தலாவை. கேர்க்கஸ்வோல்ட் தோட்டத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் மகாராணியாரின் செய்தி தாங்கிய கோல், தோட்டத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கமும் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் கேர்க்கஸ்வோல்ட் உட்பட தேயிலைத் தோட்டங்கள் பிரித்தானிய நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்ததுடன் அத் தோட்டங்கள் வெள்ளைக்கார துரைமார்களால் நிருவகிக்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் பொதுநலவாய அமைப்பு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் மகாராணியாரின் செய்தி தாங்கிய கோல், மாலைதீவுகளிலிருந்து ஜனவரி மாதம் 3ஆம் திகதி கட்டுநாயக்கவுக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படவுள்ளது. அங்கிருந்து பிரபல மெய்வல்லுநர்கள் சகிதம் சுதந்திர சதுக்கத்துக்கு கொண்டுவரப்படும் மகாராணியார் கோல் பின்னர் ஒலிம்பிக் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அன்றைய தினம் மகாராணியார் கோலை, அலரி மாளிகைக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளபோதிலும் அதற்கான உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்துடன் ஒலிம்பிக் குழுவின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடக முகாமையாளர் கோபிநாத் சிவராஜா, உபேஷ்கா அஞ்சலி, ஊடகப்பிரிவு தலைமை அதிகாரி எஸ். ஆர். பத்திரவித்தான ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரித்தானிய தூதரகம், பிரித்தானிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு ஜனவரி 3ஆம் திகதி கொண்டுசெல்லப்படும் மகாராணியார் கோல், ஜனவரி 4ஆம் திகதி கண்டி நோக்கி கொண்டு செல்லப்படும். அங்கு பிரித்தானியரால் நிர்மாணிக்கப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கம், ரனபிம றோயல் கல்லூரி ஆகியவற்றுக்கும் பின்னர் ஹந்தானையிலுள்ள இலங்கை தேயிலை நூதனசாலைக்கும் மகாராணியார் டிகோல் எடுத்துச் செல்லப்படும்.

ஜனவரி 5ஆம் திகதியன்று மகாராணியார் கோல், பொகவந்தலாவை, கேர்க்கஸ்வோல்ட் தோட்டத் தொழிற்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு கோலின் முக்கியத்தும் குறித்து தோட்ட அதிகாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் விளக்கப்படும்.  கேர்க்கஸ்வோல்ட்  தமிழ் மொழியில் லெட்சுமி தோட்டம் என அழைக்கப்படுகின்றது. கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்திலிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்படும் மகாராணியார் கோல் விளையாட்டுத்துறை அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் பங்களாதேஷுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மகாராணியார் கோல் 2014இல் கண்டிக்கும், 2018இல் காலிக்கும் வைஸ்ரோய் ரயில் வண்டி மூலம் ஊடகவியலாளர்கள் சகிதம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

மாடுகள் புல் தின்றதால் வந்த வினை – 5 பேர் கைது !

அளுத்கம 17வது கட்டை பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புல் தின்ற சம்பவம் தொடர்பாக 600 மாடுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 5 கால்நடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் வனப்பாதுகாப்பு பிரிவினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் மாடுகள் நீதிமன்ற காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த ஆண்டு இலங்கையில் அரிசியின் விலை 200 ரூபாய் வரை அதிகரிக்கும் !

எதிர்வரம் ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய இந்த நிலை குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில், அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பாக கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ.குணரத்ன, உரத்தட்டுபாடு காரணமாக பெரும்போக விளைச்சல் உரிய முறையில் இல்லை என தெரிவித்துள்ளார்.

நெல் பயிரிடப்பட்டுள்ள போதிலும் உரத்தட்டுப்பாடு காரணமாக பயிர்களில் வளர்ச்சி போதிய அளவில் காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித கடத்தலைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்கத் அரசு திட்டம் !

மனித கடத்தலைத் தடுக்க எதிர்வரும் ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதக் கடத்தலைத் தடுக்க புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் நேரடி ஒருங்கிணைப்பில் வலுவான நிறுவன பொறிமுறையை நிறுவ கடந்த ஜூலை மாதம் மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“விலை தொடர்ந்தும் உயரும். வீட்டில் எதையாவது பயிரிடுங்கள்.” – பந்துல குணவர்த்தன அறிவுரை

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகசந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என தெரிவித்துள்ள அவர் தட்டுப்பாடு காணப்பட்டால் பாரிய கள்ளச்சந்தை விலை காணப்படும்.

இதன் காரணமாக அரசாங்கம் சந்தையில் தலையிட்டு சந்தையை போட்டித்தன்மை மிகுந்ததாக மாற்றுவதை மாத்திரமே அரசாங்கத்தினால் செய்ய முடியும்.

குறுகிய காலத்திற்குள் பயன்தரக்கூடிய காய்கறிகளை உருவாக்கும் திட்டம் உள்ளது இதன் மூலம் ஏப்பிரல் புத்தாண்டிற்கு முன்னதாக பயன் பெறும் நோக்கம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் காணாமல் போன விக்கிரகங்கள் – கொழும்பிலிருந்து மீட்பு !

காங்கேசன்துறை காவற்துறை பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உட்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் காவற்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் இந்த விக்கிரகங்கள் தென்னிலங்கையில் உள்ள வர்த்தகர்களுக்கு விற்பனை செய்ய முகவர்களாக செயற்பட்டுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் காவற்துறையினர் தெரிவித்தனர்.

டிசம்பர் 9 ஆம் திகதிக்கும் டிசம்பர் 23 ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை காவற்துறை பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவற்துறை அத்தியட்சகரின் கீழ் உப காவற்துறை பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது அலைபேசியில் திருடப்பட்ட விக்கிரகங்கள் பலவற்றின் ஒளிப்படங்களும் காணப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்றைய தினம் 2 விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன.

அவை இரண்டும் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. சந்தேக நபரும் தெல்லிப்பளை காவற்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டார். இந்த நிலையில் கொழும்புக்கு விரைந்த உப காவற்துறை பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர்.

அவற்றை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். அவற்றில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றன என்று காவற்துறையினர் கூறினர்.

ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – 2 நிமிடங்கள் மௌன அஞ்சலிக்கு அழைப்பு !

சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.25 தொடக்கம் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலகையே ஆட்டிப்படைத்த கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதேபோன்றதொரு நாளில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஆழிப்பேரலை ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக பதிவாகிய அந்த நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட பேரலையால், ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.

இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை தாக்கியது. ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 898 உயிர்களை காவுகொண்ட இந்த ஆழிப்பேரலை, 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை  நிர்க்கதியாக்கியது.

இலங்யைில் மாத்திரம் 30 ஆயிரத்து 196 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், இந்த அனர்த்தத்தால் 21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, இலங்கையிலும் நாடளாவிய ரீதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

இந்த கொடிய அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் உள்ள அச்சமும் ரணங்களும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

““மக்களுக்கு சாப்பிட உணவில்லை ஆனால் மதுபான உற்பத்தியை ஊக்குவிக்கிறது அரசு.” – தேரர் காட்டம் !

“மக்களுக்கு சாப்பிட உணவில்லை ஆனால் அரசு மதுபான உற்பத்தியை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.” என என ராமன்ய நிக்காயவின் தென்னிலங்கைப் பிரிவு தலைவர் ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டு மக்கள் இன்று உணவு உட்கொள்ள முடியாத நிலையில இருக்கின்றனர், பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது இவ்வாறான பின்னணியில் நிதி அமைச்சு மதுபான உற்பத்திசாலைகளை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றது.

நாட்டின் சமூக சீரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய குடிகார காலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கிலா அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுக்கின்றது..?

அரசாங்கம் புதிதாக மூன்று மதுபான உற்பத்திசாலைகளுக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது அவற்றை மூடி மறைக்கும் நோக்கிலா புதிய மதுபான உற்பத்திசாலைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது .?.

இவ்வாறு அனுமதி பத்திரம் வழங்குவதன் பின்னணியில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்ன ? மெய்யான மக்கள் பிரச்சினைகளை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் உத்தியா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.