28
28
“புத்தாண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்படும்.” என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் டொலர் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு இன்மை, விவசாயிகள் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், பல நாடுகள் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தாய் நாடி உதவி பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்று வழியை முனைவைக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் புத்தாண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்படும் என்றும் அது அரசாங்கத்தை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பால் குடிக்கும் குழந்தைகளுக்கான பால் மா பொதியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாத நேரத்தில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல டொலர்கள் எங்கிருந்து கிடைத்தது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் டொலர்கள் இல்லை எனவும், அரசியல்வாதிகள் குடும்பத்துடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கும், ஆலயங்களில் பூஜைகள் செய்வதற்கும் டொலர்கள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இடது சாரி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்குப் பரம்பரை பரம்பரையாகப் பசியும் பட்டினியும் மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செய லாளர் மேலும் தெரிவித்தார்.
“கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர். ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுவார்.” என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதுளை-செங்கலடி வீதியின் பிபில முதல் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,
ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு ஆரோக்கியமான அபிவிருத்தியை உறுதி செய்வதே ஜனாதிபதியின் முயற்சியாகும். கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்ட போது அனைத்து நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. உலகத் தலைவர்கள் பொது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
ஜனாதிபதியின் விடாமுயற்சியினால் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்றும், திட்டத்தை நாசப்படுத்தவே முயன்றது. குறுகிய காலத்தில் இலங்கை மிகவும் அபிவிருத்தி நாடாக அறியப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாராயின் அதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிவித்துருஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச் சரவையில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும் யுகதனவி ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றதோடு அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமை தவறானதென ஜனாதிபதி தெரிவித்ததாக இன்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமாயின் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி நேற்று குறிப்பிட்டிருந்தாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில, தாம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களும் யுகதனவி விடயத்தில் தவறிழைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தவறிழைத்திருந்தால் மாத்திரமே பதவியிலிருந்து விலக வேண்டும். அத்துடன் அமைச்சுப் பதவியை விட நாடும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் முக்கியமானதெனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாகக் குறித்த வெடிபொருட்கள் தொடர்பில் நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலிற்கு அமைவாக தர்மபுரம் பொலிஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று இன்று அகழ்வு பணிகளை ஆரம்பித்தனர். பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவத்தினர் இணைந்து குறித்த அகழ்வு பணிகளை முன்னெடுத்தனர்.
இதன்போது 12.7 ரக துப்பாக்கி – 01, 12.7 ரக துப்பாக்கி ஸ்ரான்ட் – 02, ஆர் பி.ஜி துப்பாக்கி – 03, ரி 57 ரக துப்பாக்கி – 06, ரி 81 ரக துப்பாக்கி – 03, ஆர் பி ஜி செல் – 10, இயக்க தாமத கடத்திகள் – 11, அணைக்கட்டு தகர்க்கும் ஆயுதம் – 05, எல் எம் ஜி ரவைகூடு – 09, 12.7 துப்பாக்கி கூடு – 01, எம் பி எம் ஜி கூடு – 01, 12.7 ரவை செயின் – 08 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும், வெடி பொருட்கள் ஆகியன துருப்பிடித்துக் காணப்படுவதாகவும், அவை செயல் திறன் உள்ளவையா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வெடி பொருட்கள் மீட்கப்படும் தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாநகர சபை அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து மாநகர முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது முதல்வரின் அராஜகம் ஒழிக, சபையின் மாண்பை காப்பாற்று, வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற கோஷங்கள் மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பபட்டது.
மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வேலைக்காரியால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட தயாவதியான எனது அம்மாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் என தயாவதியின் மகள் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு உயிரிழந்த தயாவதியின் கணவர் மற்றும் மகள் நேற்று திங்கட்கிழமை (27) நீதிமன்றத்தில் வாக்கு மூலம் பதிவு செய்ய சென்று திரும்பியபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.
நான் எல்லா பட்டங்களும் அம்மாவுக்கு சேரவேண்டும் என படித்தேன் ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. இந்த சம்பவம் ஊடகம் ஊடாக வெளிவந்தது எனவே நீதி கிடைக்கும் என நம்புகின்றோம். இது ஒரு படிப்பினை எனவே அப்படியான சம்பவங்களை ஆறவிடாமல் அந்த இடத்திலேயே தண்டனை வழங்கினால் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் செய்யப் போறவனுக்கும் ஒரு பயம் வரும் அப்போது ஒன்றும் செய்யக் கூடாது என்று பயத்தல் இருப்பான்.
எனவே வெட்டி இருக்கிறாள் என அவளே ஒத்துக் கொண்ட பின்னர் அந்த இடத்திலே தண்டனையை வழங்குங்கள் அப்போது தான் நியாயம் கிடைக்கும் தாய் இல்லாமல் ஒரே ஒரு பெண்பிள்ளை படும் வேதனை ஒருவருக்கும் விளங்காது. நான் உயிருடன் இருப்பது அப்பாவுக்காக அதேவேளை பல்கலைக்கழகத்துக்கு படிக்கபோக முடியாது உள்ளது என்ன நடக்கும் என்று பயம் ஏற்பட்டுள்ளது என்பதால். போகமுடியாமல் உள்ளதாக தயாவதியின் மகள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவர் 3 வருடத்திற்கு முன் இலங்கை திரும்பியுள்ளார்.கிளிநொச்சி அம்பாள் குளம் உதயநகர் பகுதியில் உள்ள காணியை பார்ப்பதற்காக குறித்த பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.
தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றயை தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும் பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.
குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரியைமாளரால் நேற்று மாலை 6.00 மணியவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொலையாளி மற்றுமொரு நபரின் உதவியுடன், மோட்டார் சைக்கிளில் சடலத்தை எடுத்து சென்று வீசியதாக குறித்த இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கிளிநொச்சி – அம்பாள்கும் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இறந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, முக்கிய விடயங்களில் அரசாங்கத்திற்குள் காணப்படும் பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக வினவியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கு எதிராக குறித்த அமைச்சர்கள் இருந்தால் அவர்கள் பதவி விலகி நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும் அவர்கள் அவ்வாறு செய்யாதமை அரசாங்கத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் அவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்த போது, நீதியரசர் மார்க் பெர்னாண்டோ இந்த விடயம் தொடர்பாக தீர்ப்பு வழங்கியிருந்தார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.