29

29

உலகை சுற்றி வரும் 19 வயது பெண் சாரா ரதர்போர்ட் இலங்கையில் !

இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டவரான சாரா ரதர்போர்ட்  நேற்று இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்க சாரா திட்டமிட்டுள்ளார். 19 வயதான அவர் தனது உலக சுற்றுப்பயணத்தை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பித்திருந்தார்.

5 கண்டங்களுக்குள் உள்ளடங்களும் 52 நாடுகளுக்கு பயணிப்பதே அவரது இலக்காகும். சாரா 2022 ஜனவரி மாதம் நடுப்பகுதியில் தனது பயணத்தை முடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளான மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

நூற்றுக்கணக்கான படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம், மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான சில பதாதைகள், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ அதிகாரியால் எழுத்து மூல ஆவணம் ஒன்று பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அன்றைய தினம் முன்னிரவு யாழ்ப்பாணம் நீதிவானின் இல்லத்தில் மாணவர்கள் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உப விதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பட்டயம் ஆகிய நான்கு ஏற்பாடுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அதனால் மாணவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுகளில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும் பிணை வழங்கக் கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு கோப்பாய் பொலிஸாருக்கு சட்ட மா அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் 13 நாள்களின் பின்னர் மே 16ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சுமார் 30 மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் 2019 மே 3ஆம் திகதி நடத்திய தேடுதலில் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலையில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிருந்தமையை அடுத்து சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கைது செய்யப்பட்டார். அவர் 12 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மீதான வழக்கு பொலிஸாரினால் மீளப்பெறப்பட்டது.

அணுகுண்டால் கூட துளைக்க முடியாது – பிரதமர் மோடி பயணிக்கும் புத்தம்புது மேபெக் கார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விசேஷ பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 காரில் பயணம் செய்து வருகிறார்.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்த போது ஹைதராபாத் இல்லத்தில் அவரை வரவேற்க பிரதமர் மோடி முதன்முறையாக இந்த காரில் வந்திருந்தார். அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த கார் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. இக்காரின் விண்டோ கண்ணாடிகள் துப்பாக்கி புல்லட்களாலும், அணுகுண்டுகளாலும் துளைக்கமுடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. இதுபோன்று மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த காரில்தான் பிரதமர் இப்போது பயணிக்கிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடுமையான டொலர் நெருக்கடி – துறைமுகத்தில் சிக்கியுள்ள 1,500 கொள்கலன்கள் !

அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் கடுமையான டொலர் நெருக்கடியே இதற்குக் காரணம். இந்த கொள்கலன்களில் சுமார் 30,000 மெட்றிக் தொன் அத்தியாவசிய பொருட்கள் இருப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அத்தியாவசிய உணவு கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்காவிட்டால் , நாட்டில் பொருட்களின் விலை வேகமாக உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மாவைத் தவிர ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 110 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு செலவாகிறமை தெரிய வந்துள்ளது.

திணறும் பிரான்ஸ் – ஒரே நாளில் 1.79 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா !

உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரோன் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமைக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 7-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.79 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93.26 லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.23 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

“பெண்களுக்கு கல்வி மறுப்பு ஆப்கான் கலாசாரத்தின் ஒரு அம்சம்” – பாக்.பிரதமர் இம்ரான்கான்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன. அவர்களால் கல்வி கற்க மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே கூட செல்லக் கூடாது என்ற அளவிற்கு கட்டுபாடுகள் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், 2021 ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாகும் என கூறியுள்ளனர்.

அங்கு பெண்கள் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், சர்வதேச அரங்கில் தலிபான்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில், காபூல் நகரில் கடை முகப்புகளில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தும், அதை கடைகளில் இருந்து அகற்றும் படங்களும் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பாக வெறுப்பு கருத்து தெரிவித்ததற்காக உலகளவில் ட்ரோல் செய்யப்பட்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கத்திய அரசாங்கங்களின் பிரதிநிதிகள், “பெண்களுக்கு கல்வி கற்பிக்காதது ஆப்கான் கலாசாரத்தின் ஒரு அம்சம்” என்ற இம்ரான்கானின் கருத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள்” என்று அல் அரேபியா போஸ்ட் தெரிவித்துள்ளது.

சில மாதங்கள் முன்னதாக, காபூல் நகராட்சியின் செய்தித் தொடர்பாளர் நெமதுல்லா பராக்சாய், காபூலில் உள்ள கடைகள் மற்றும் வணிக மையங்களின் விளம்பர பதாதைகளிலுள்ள பெண்களின் அனைத்து புகைப்படங்களையும் அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

“அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில், இஸ்லாமிய விதிமுறைகளுக்கு எதிரான வகையில் பெண்கள் படங்களை வைத்திருக்க கூடாது. பெண்கள் உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படும். விதியை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்” என்று பராக்சாய் கூறினார்.

“இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க பங்களிப்பு வழங்குங்கள்.” – ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

இலங்கையில் நிலவும் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குமாறு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மறுக்க முடியாத அச்சுறுத்தல்கள் மற்றும் மோசமான நிலைமைகளை கருத்திற்கொண்டு சாதகமான பங்களிப்பை வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வை அடைந்து கொள்ள, சர்வதேச மட்டத்திலான கண்காணிப்புடன் பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

“இலங்கையில் நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படும்.” – சாணக்கியன் எச்சரிக்கை !

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

திருக்கோவில் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதி கிரியை நேற்று (27) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக அறிவித்த அரசாங்கம், அதனைச் செய்வதற்குத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படுவதோடு இதன் காரணமாகக் கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயார்.” – அனுரகுமார திசாநாயக்க

ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயாரென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார். மேலும் பேசிய அவர்,

இதுவரை காலமாக அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் ஆட்சி மாற்றத்தை செய்தனர். இன்று பொருளாதார நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளினாலும் இனியும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

எனவே இன்று மாற்று அணியொன்றும், மாற்று பொருளாதார திட்டமொன்றும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான சரியான தருணம் இதுவாகும்.  மக்கள் இப்போது சரியான அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டும். இதுவரை காலமாக பிரதான இரண்டு கட்சிகள் உருவாக்கிய பொய்களில் ஏமாற்றப்பட்டே மக்கள் ஆட்சியை உருவாக்கியுள்ளனர். ஆனால் இன்று அந்த பொய்களை மக்கள் கேட்க தயாராக இல்லை.

இந்த நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றதே தவிர தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் அல்ல. 2005  ஆம் ஆண்டில் நாம் எடுத்த சில தீர்மானங்கள் தாமதாகியிருந்தால் இந்த நாட்டில் தமிழ் சிங்கள யுத்தமொன்று உருவாகியிருக்கும்.

நாட்டில் இன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது. இன நல்லிணக்கத்தை உருவாக்கி ஆட்சியை கொண்டுசெல்லும் மனநிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை.

எனவே தான் சகல மக்களின் மனங்களையும் வெற்றிகொண்டு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப நாம் முயற்சிக்கின்றோம். அதன் மூலமாகவே நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி மனோகணேசனுக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை !

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை இம்மாதம் 29ம் திகதி விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி தமிழ் மொழியில் அழைப்பாணையை மனோவின் இல்லத்துக்கு அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி, கடந்த வாரம் தனி சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை மனோ கணேசனுக்கு அனுப்பட்ட போது, அதை ஏற்க மறுத்து தமிழ் மொழியில் அழைப்பாணையை அனுப்பும்படி மனோ கூறி இருந்தார். இந்நடவடிக்கை ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழ் மொழியில், இந்த அழைப்பாணையை மனோ எம்பியின் இல்லத்துக்கு அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத் அனுப்பி வைத்துள்ளார்.