2022

2022

பாலஸ்தீனப் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் – விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு அழைப்பு!

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது.

பொதுச் சபை தீர்மானத்தில் இஸ்லாமிய உலகில் கிட்டத்தட்ட ஒருமித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 87 வாக்குகள் ஆதராக அளிக்கப்பட்டன. இதில் ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி உட்பட 24 நாடுகள் எதிராக வாக்களித்தன. அதே நேரத்தில் 53 நாடுகளில் பிரான்சும் வாக்களிக்கவில்லை.

உலக நீதிமன்றம் என்றும் அழைக்கப்படும் ஹேக் அடிப்படையிலான சர்வதேச நீதிமன்றம், மாநிலங்களுக்கிடையேயான தகராறுகளைக் கையாளும் உயர்மட்ட ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்துக்கு அவற்றைச் செயல்படுத்த எந்த அதிகாரமும் இல்லை என்றாலும், அதன் தீர்ப்புகள் பிணைக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமையன்று பாலஸ்தீனியத் தலைவர்கள் வாக்கெடுப்பை வரவேற்றனர், மூத்த அதிகாரி ஹூசைன் அல்-ஷேக் ‘இது பாலஸ்தீனிய இராஜதந்திரத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறினார்.

‘இஸ்ரேல் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, மேலும் நமது மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபில் அபு கூறினார்

73.7% இருந்து 64.4% ஆகக் குறைந்த இலங்கை உணவுப் பணவீக்கம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய இவ்வாண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் 57.2% ஆக இருந்தது, இது நவம்பர் 2022 இல் 61% ஆக இருந்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நவம்பர் 2022 இல் 73.7% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் 2022 டிசம்பரில் 64.4% ஆகக் குறைந்துள்ளது.

திலீபனின் நினைவுதின அனுஸ்டிப்பு – சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் !

விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டது.

நேற்று (31) எம்.கே சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதிமன்ற கட்டளையை வழங்கினர்.

தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் அன்னங்கை ஒழுங்கையில் வைத்து 2020 செப்டம்பர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே. சிவாஜிலிங்கத்தை மன்று எச்சரித்து 2 இலட்ச ரூபாய் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்திருந்தது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக கைது செய்து 24 மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை வழக்கில் புகுத்தக்கூடிய வகையிலே பொலிசார் முயற்சிகள் எடுத்ததை நான் அறிந்தேன்.

பின்னர் சாதாரண சட்டத்தின் கீழ் நான் முன்னிலைப்படுத்தப்பட்டேன் எது எப்படி இருந்தாலும் கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது பயங்கரவாத சட்டத்தின் கீழ் நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்ய யோசித்து இருக்கின்றோம். சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இதன் கோவை அனுப்பப்பட்டு இருக்கின்றது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த அடிப்படையில் நேற்றைய தினம் எனது வீட்டிற்கு வந்த பொலிஸார் எனக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற கட்டளையை வழங்கிச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செயலுக்காக யாழ்ப்பாணத்தில் உயர்நீதிமன்றம் இருக்கத்தக்கதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நோக்கம் என்ன? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்தார்களா அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒத்ததாக புலிகளின் மீளுருவாக்கம் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டிருக்கிறதா என்பது குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே தெரியும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என கூறப்படும் போது இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன-என்றார்.

காதல் தோல்வி – பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய்தீப் ராய் (27) என்பவர் இளம்பெண்ணொருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்ய விரும்பினார்.

ஆனால் அப்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் மனம் உடைந்த ஜெய்தீப் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் அவர் பேசுகையில், நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என அவளிடம் காதலை முன்மொழிந்தேன்.

ஆனால், அனைவரின் முன்னிலையிலும் அவள் மறுத்துவிட்டாள். அவளின் மாமா எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார், நான் இந்த உலகை விட்டு போகிறேன் என்னால் என் காதலி கஷ்டப்படக்கூடாது.

அம்மா, மாமா, அத்தை, சகோதரி, மூத்த சகோதரர், மருமகள் மற்றும் அண்ணியிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன், ஆனால் நான் என் காதலியை அதிகமாக நேசிக்கிறேன், அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என கூறியிருக்கிறார்.

ஜெய்தீப் சகோதரர் ரூபம் ராய் கூறுகையில்,

எங்கள் குடும்பம் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளது.

எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதனால்தான் இதுவரை நாங்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு கூட பதிவு செய்யவில்லை. என் சகோதரரை கொன்றுவிடுவதாக அவளின் மாமா மிரட்டினார்.

என் சகோதரர் ஒரு நல்ல மனிதர், நன்றாக சம்பாதித்தார், ஆனாலும் அவர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை என்றார்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ஜெய்தீப் குடும்பத்திடம் இருந்து எங்களுக்கு இன்னும் முறையான புகார் எதுவும் வரவில்லை, ஆனால் நாங்கள் விசாரணையைத் தொடங்கி விட்டோம் என்றார்.

பனிப்புயலால் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் குளிர், மின்தடை, போக்குவரத்து இடையூறு என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்த மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது பனிப்புயல். அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பனி மூடிய பாறைகள் காணப்படுகின்றன.

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்தது 2023 – கோலாகலமாக வரவேற்ற மக்கள் !

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு பிறந்ததை ஒட்டி கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டிலும் புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

கண்ணைக் கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹேப்பி நியூ இயர் என சொல்லி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து புத்தாண்டை வரவேற்றனர்.

 

இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் நாம் இன்னமும் ஏழை நாடாகவே உள்ளோம் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அதற்காக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய கட்டமைப்பை உருவாக்கத் தவறினால் நாடு அழிந்துவிடும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரித்துள்ளார்.

இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் இலங்கை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு காலங்காலமாக தேசத்தை ஆட்சி செய்தவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவே புதிய ஆண்டில் தேசத்தின் நலனுக்காக அனைத்து பிரஜைகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என கொழும்பு பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் வங்கி ஏடி.எம்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் கொள்ளை !

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து முறையே 4 680 000, 275 000 மற்றும் 5 700 000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் குறித்த ஏ.டி.எம். இயந்திரங்களுக்கருகில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால், அங்கு காணப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களை செயழிக்கச் செய்து, ஏ.டி.எம். இயந்திர தரவுகளை மாற்றி இவ்வாறு பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த மூன்று பிரதேசங்களிலுமே ஒரு முறையில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமையால், ஒரே தரப்பினரே அனைத்து கொள்ளையுடனும் தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு ஹிக்கடுவை, காலி, பத்தேகம உள்ளிட்ட பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மாமன் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயது பாடசலை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த சிறுமியின் மாமனின் மனைவி வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாமன் குறித்த சிறுமியுடன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10 ஆம் மாதம் 17 ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் வீட்டிற்குள் சென்ற மாமன் தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த அநீதியினை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில் பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த குடும்பஸ்தர் சிறுமியின் அக்கா முறையான 20 அகவையுடை யுவதியுடனும் பாலியல் துஸ்பிரயேகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வரி நீக்கப்பட்ட பின்னும் ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின் விலை ஐநூறு ரூபாய் !

உள்நாட்டு சானிட்டரி நாப்கின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் அண்மைக்காலமாக நடவடிக்கை எடுத்த போதிலும், இதுவரை சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலப்பொருள் விலை உயர்வுக்கு முன்னும், வரிக்கு முன்னும் ஆறு சானிட்டரி நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் நூற்றைம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது . ஆனால் தற்போது ஒரு பாக்கெட் ஐநூறு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

வரி நீக்கப்பட்ட பின்னரும் உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாதது தொடர்பில் வினவிய போது, ​​வரிகள் நீக்கப்பட்ட பின்னரும் உற்பத்தியாளர்கள் பொருட்களின் விலையை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இல்லை என மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பாக விரைவான விசாரணை நடத்தி, விலை குறைக்கப்படாதது குறித்து உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.