2022

2022

சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய அண்ணன் கைது – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் வன்புணர்வு செய்த சகோதரனை நெளுக்குளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன் மற்றும் தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக தெரிவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டடுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய 26 வயதுடைய சகோதரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மூன்று கோடி ரூபாவுக்கு கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் இரா.சாணக்கியன் – நாடாளுமன்றில் பிள்ளையான் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.ஏ சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

“கலாசாரம், பாரம்பரியம் என பேசிக்கொண்டிருக்காது கஞ்சாவை பயிரிட்டு இலாபமீட்ட முயற்சிக்க வேண்டும்.” – பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே

“தாய்லாந்து தேரவாத பௌத்த நாடு. ஆனால், அவர்கள் கஞ்சாவை பயிர்ச்செய்கை செய்து முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். ஆனால், நாம் புதையலுக்கு மேல் இருந்துகொண்டு பிற நாடுகளிடம் கையேந்தி இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளோம்.” என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்குவதற்கு போராடினேன். எனது போராட்டம் குறித்து அவதானம் செலுத்தி, கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தில் பரிந்துரைத்துள்ளமை வரவேற்கத்தக்கது. கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கி ஏற்றுமதி செய்து, அதனூடாக முதலீடுகளை பெற்றுக்கொள்ள முன்வைத்த யோசனைக்கு எதிராக எதிர்தரப்பின் உறுப்பினர்களும் ஆளுந்தரப்பின் ஒருசில உறுப்பினர்களும் எதிராக கருத்துரைப்பது கவலைக்குரியது.

உலக நடப்புக்களை சற்று ஆராய்ந்து பாருங்கள். கஞ்சா பயிர்ச்செய்கையினால் கிடைக்கும் வருமானம் பற்றி சிந்தியுங்கள். தாய்லாந்து கடந்த ஜூன் மாதம் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கியது. இதற்கான யோசனையை அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் முன்வைத்தார்.

நிறைவடைந்த ஐந்து மாத காலத்துக்குள் கஞ்சா பயிர்ச்செய்கை ஊடாக தாய்லாந்து 280 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் 450 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளார்கள்.

நாடு என்ற ரீதியில் மோசமான நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின், இவ்வாறான தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே ஜனாதிபதி எனது திட்டத்துக்கு கவனம் செலுத்தியுள்ளார்.

கஞ்சா தொடர்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்ட கருத்தை வரவேற்கிறேன். கஞ்சா பயிர்ச்செய்கையினால் கிடைக்கும் வருமானம் மற்றும் ஆயர்வேத நலன் தொடர்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட வகுப்பு நடத்த வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கலாசாரம், பாரம்பரியம் என்ற காரணிகளை காலங்காலமாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றது மாத்திரம் மிகுதியாகியுள்ளது. ஏனைய நாடுகளுக்கு கஞ்சா சிறந்ததாயின், ஏன் நாம் அங்கீகாரம் வழங்கக்கூடாது. தாய்லாந்து தேரவாத பௌத்த நாடு. ஆனால், அவர்கள் கஞ்சாவை பயிர்ச்செய்கை செய்து முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். ஆனால், நாம் புதையலுக்கு மேல் இருந்துகொண்டு பிற நாடுகளிடம் கையேந்தி இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளோம். இனியாவது இதனை திருத்திக்கொள்ள வேண்டும்.

தாமரை கோபுரத்தை வெள்ளை யானை என விமர்சித்தார்கள். தாமரை கோபுர நிர்மாணிப்புக்கு 114 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 87 மில்லியனை சீனா வழங்கியுள்ளது. சீனாவுக்கு 67 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் சீனாவுக்கு அந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். தாமரை கோபுரத்தை ஒன்றிணைத்த ஒரு பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

நான் முதலீட்டை கொண்டு வந்தேன். சுற்றுலாத்துறைக்கு தேவையான முதலீடுகளை நாட்டுக்காக கொண்டு வருவேன். ஊழல் மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரினால் கலாசார நிதியம் மோசடி செய்யப்பட்டமை பற்றி பேசுங்கள்.

3000 இலட்சம் மோசடி செய்யப்பட்டதை மறைக்கக்கூடாது. அரச அதிகாரிகளினால் இடம்பெற்ற மோசடிகளை எதிர்வரும் காலங்களில் பகிரங்கப்படுத்துவோம். எனக்கு எதிராக திட்டமிட்ட வகையில் சேறுபூசல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. போலியான குற்றச்சாட்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் புண்ணியத்தால் நான் பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுகிறார். என் புண்ணியத்தில் அவர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை அவர் அறியவில்லை. ஆகவே, விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என தெரிவித்தார்.

நோர்வே பிரஜையிடம் 120 மில்லியன் ரூபா மோசடி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது!

நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை ஏமாற்றி 120 மில்லியன் ரூபாவை ஏமாற்றிய இரண்டு பெண்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் இருவரையும் நேற்று (18) கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது அவர்கள் டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக தனது கட்சியை வளர்க்க ரணில் முயற்சி.” – வாசுதேவ குற்றச்சாட்டு !

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை வளர்க்க  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ 20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு / செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வரவு / செலவுத் திட்டத்தின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. அரசாங்கத்தின் தீர்மானங்களை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மக்களாதரவு இல்லாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது கையாள்கிறது. எல்லை நிர்ணய குழு அறிக்கையினூடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தமக்கு மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொதுஜன பெரமுன மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்திரப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.

அரச செலவினங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என்றார்.

“ஜனாதிபதி ரணில் மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும்.” – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

ரூபாய் ஒரு லட்சம் விருதை இயல்-இசை-நாடகக் கலைஞர் பார்வதி சிவபாதம் வெற்றிகொண்டார்! ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ பத்து பெண் ஆளுமைகள் பற்றிய நூல் வெளியிடப்பட்டது!!

2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதான ரூபாய் ஒரு லட்சம் பணப்பரிசையும் விருதுக்கான கேடயத்தையும் இயல்-இசை-நாடகக் கலைஞர் பார்வதி சிவபாதம் வெற்றிகொண்டார். இன்று நவம்பர் 20, கிளிநொச்சி திருநகரில் லிற்றில் எய்ட் ஆல் நடத்தப்பட்ட வருடாந்த சிவஜோதி ஞாபகார்த்த நிகழ்வில் இவ்விருதை பார்வதி சிவபாதம் அவர்களுக்கு, கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலாவும் சிவஜோதியின் தந்தையும் இணைந்து வழங்கினர். இவ்விருதுக்கு சிபார்ஸ்சு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் விந்தன் செல்லத்துரை, வள்ளிபுரம் ஏழுமலைப்பிள்ளை, கணேஸ் விஜயசேகரன் ஆகியோருக்கு ரூபாய் 5000 பணப்பரிசும் அவர்களது சேவையை கௌரவிக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வையொட்டி இலைமறை காயாக, நாளாந்த வாழ்வோடு சேர்ந்து சமூகத்தின் முன்னுதாரணங்களாகவும் வாழ்ந்த, வாழ்கின்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை வளர்ந்துவரும் பெண் ஆளுமைகளே தலைமையேற்று நூலை அறிமுகம் செய்து விமர்சனமும் செய்தமை நிகழ்வுக்கு வந்திருந்த அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நூலில் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள் பதிவு செய்யப்பட்டனர்: பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்), கல்வி (ஜெயா மாணிக்கவாசகன், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்), இலக்கியம் (தாமரைச்செல்வி,), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்), கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்), அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா), விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தன்) இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடியவர் நாகம்மா செல்லமுத்து.

‘2022 சிவஜோதி ஞாபாகர்த்த விருது’ சிவஜோதி என்ற ஆளுமை – கலைஞன் சமூத்தை நேசித்தை கொண்டாடுவதற்காக கலைத்துறையில் தங்களை அர்ப்பணித்து சமூக நேசத்துடன் செயற்பட்டவர்களுக்கு வருடாவருடம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, 2021 சிவஜோதியின் முதலாம் ஆண்டு நினைவுமுதல் வழங்கப்பட்டு வருதாகத் தெரிவித்த லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன், சிவஜோதியின் இறுதியாண்டுகள் கிளிநொச்சி மண்ணில் நிலைபெற்றதால் இந்த ஆண்டுக்கான விருதை கிளிநொச்சி மண்ணில் இயல்-இசை-நாடகத்துறையில் வாழ்நாள் சேவையாற்றிய ஒருவருக்கு வழங்க சிவஜோதி ஞாபகார்த்தக் குழு தீர்மானித்து இருந்ததாகத் தெரிவித்தார். “தனது குழந்தைப்பருவம் முதல் இயல் இசை நாடகத்துறையில் தடம் பதித்து பதின்ம வயதிலும் அதில் ஈடுபட்டு கலைத்துறையிலேயே வாழ்க்கைத் துணையையும் தேர்ந்து கலைத்துறையில் தன் அடுத்த தலைமுறையையும் தடம்பதிக்க வைத்தமைக்காக இயல் இசை நாடகத்துறையில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் ஆற்றிய பங்களிப்பை கௌரவிப்பதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக காணொலியூடான தன்னுடைய பகிர்வில் குறிப்பிட்டு பார்வதி சிவபாதம் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா தலைமையில் சிவஜோதியின் ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் கருணாகரன் சமத்துவக் கட்சியின் செயலாளர் மு சந்திரகுமார் ஆகியோர் சிவஜோதியின் நினைவுகளை மீட்டினர். ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ நூல் அரங்குக்கு வர்ஷனா வரதராஜா தலைமை தாங்கினார். வெளியீட்டுரையை விராஜினி காயாத்திரி இராஜேந்திரன் வழங்கினார். உறுதி கொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம் எனும் தலைப்பில், யாழ்.பல்கலைக்கழக முகாமத்துவ பீட முதலாம் வருட மாணவி செல்வி ஹார்த்தியாயினி இராஜேஸ்கண்ணாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசாவும் உறுதிகொண்ட நெஞ்சினாள்களின் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை எனும் தலைப்பில் ஆய்வாளரும் எழுத்தாளரும் மனிதம் அமைப்பின் உருவாக்குநர் சபை உறுப்பினருமான நிவேதா சிவராஜாவும் நூல் ஆய்வை மேற்கொண்டனர். இந்நூல் அரங்கு முற்றிலும் பெண்களால் அரங்கேற்றப்பட்டது என்பதும் இளம் தலைமுறைப் பெண்கள் அதனைத் திறம்பட மேற்கொண்டதும் அங்கு முன்ணுதாரணமாக அமைந்தது. அத்தோடு இந்நிகழ்வின் வெற்றிக் கேடயத்தைத் தட்டிச் சென்றவரும் ஒரு பெண்ணாகவே அமைந்ததும் நிகழ்வின் சிறப்பம்சமாகியது.

மேலும் இளம் பெண்களுக்கு புத்துணர்வூட்டுவதாக அமைந்த இந் நிகழ்வில்  200க்கும் மேற்பட்ட கலை, இலக்கிய, நூல் ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தின் விளைவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி – கோப்-27 முடிவு !

எகிப்தில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகளின் சந்திப்பு ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவால் இழப்பு மற்றும் சேதங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவியை வழங்குவதற்காகன திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்காக ஒரு நிதியத்தை ஸ்தாபிக்க எகிப்தில் இடம்பெற்ற கோப்27 அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

முன்னதாக பேச்சுவார்த்தையாளர்களிடையே அதிருப்தி இருப்பதாக கோப்27 இன் எகிப்திய தலைவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் “சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு” அவர்களுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தலுக்கு அமைவாக இணக்கப்பாடு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைத்தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட அதிகரித்துள்ள 1.5C வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் இலக்கு நிலைநிறுத்தப்படுமா என்பது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கைத்தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட அதிகரித்துள்ள 1.5C வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் இலக்கு நிலைநிறுத்தப்படுமா என்பது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு மேல் வெப்பநிலை அதிகரித்தால் மில்லியன் கணக்கான மக்களுக்கு அழிவுகரமான காலநிலை தாக்கங்கள் ஏற்பட சாத்தியம் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் வரலாற்று ரீதியாக பெரும் பங்காற்றியதால், நூற்றாண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியேற்படும் என்ற அச்சத்தில், செல்வந்த நாடுகள் 30 ஆண்டுகளாக நிதியுதவி பற்றிய விவாதத்தை எதிர்த்தன.

ஆனால், அண்மைய ஆண்டுகளில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கங்கள் சமநிலையை குறைத்துள்ளன.

இந்த நிலைமையே உயர்ந்து செல்லும் வெப்பநிலையால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து செல்வந்த நாடுகள் இறுதி பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான ஏதுநிலையை ஏற்படுத்தியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக பிரச்சாரம் செய்த நால்வர் கைது – மக்களே போலியானவர்களை நம்பி ஏமாறும் மக்கள்!

ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பதுளை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ருமேனியாவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு உரிய ஆட்கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (20) காலை குறித்த தனியார் ஹோட்டலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஓமானில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள் – தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் பணிநீக்கம்!

ஓமானில் பணிக்குச் சென்ற இலங்கை பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மனித கடத்தலுக்கு எதிராக தான் செயற்பட்டு வருவதாகவும், தனக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு மூன்றாவது செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.