2022

2022

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை !

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் ரெமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும், தற்போது ஒரு பகுதியினருக்கு மதிய உணவை வழங்குவதாகவும், நிதியொன்றை அமைத்து அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இ.போ.ச சாரதி கைது !

மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (11) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தினை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் புளியங்குளம் பகுதியில் மாலை 6 மணியளவில் குறித்த பேருந்தை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர். அதன்போது சாரதி மதுபோதையில் இருந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

பேருந்தை புளியங்குளம் காவல் நிலையத்திலும் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தலைமுடியை இழுத்து தடியால் தாக்கிய ஆசிரியை கைது !

மில்லெனியவில் உள்ள பாடசாலையொன்றில் 5ஆம் வகுப்பு மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவத்தின் சூடுதணியும் முன்னரே, இதேபோன்ற மற்றொரு சோகச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுமி மீது இவ்வாறு மற்றுமொரு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (10) அம்பலாந்தோட்டை லுனம துடுகெமுனு மகா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தமது மகளை ஆசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த ஆசிரியர் சிறுமியின் முதுகில் கம்பினால் கொடூரமாக தாக்கியதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

முதலில், சிறுமி தனது தாயிடம் உண்மைகளை மறைக்க முயன்றுள்ள போதும் சிறுமியின் முதுகில் காயங்களைக் கண்ட தாய் விசாரித்ததில் சிறுமி நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர் சிறுமி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில், ஆசிரியர் சிறுமியின் தலைமுடியை இழுத்து தாக்கியுள்ள காரணத்தால் சிறுமியின் தாய் சிறுமியின் தலை முடியை வெட்டி பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து ஹுங்கம பொலிஸாரால் நேற்று பிற்பகல் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (11) அக்குனகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆசிரியர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பாவிடம் “அத தெரண” வினவியது.

சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், திங்கட்கிழமை இடைக்கால அறிக்கை கிடைத்த பின்னர் ஆசிரியர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சிறுவர் வன்முறை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாதிவெல தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்பாக மௌன போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் படி 6 பேருக்கும் விடுதலை வழங்கி தீர்ப்பளிக்கப்படுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களின் சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது

“அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு” – தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் செயலமர்வு !

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த “அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு” குறித்த செயலமர்வு, நேற்றைய தினம் கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் சபை அறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆன M.A. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இவ் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் அபிவிருத்தியும் அதிகாரபகிர்வு தொடர்பாக பல சந்தேகங்களுக்கான விளக்கங்களும் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டது.

மற்றும் இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னால் ஆளுநர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னால் மாகாண சபைகளுக்கான அமைச்சின் செயலாளர், சமூக ஆர்வலர்கள், மற்றும் பல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்தியும் அதிகாரபகிர்வு தொடர்பாக பலருக்கு சந்தேகம் உள்ளது அதிலும் தென் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு பல தொடர்பான விளக்கங்களையும் தெளிவூட்டல்களையும் வழங்குவதற்கு என இவ் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இலங்கை முழுவதுமாக காணப்படும் அரசில் தீர்வு அதிகாரப் பகிர்வு மற்றும் இவற்றினூடான பொருளாதார அபிவிருத்தி என்பன சம்பந்தமாக சேவையாற்றும் 280 அமைப்புக்களை மிக விரைவாகவும் துரிதமாகவும்சந்தித்து இவ்வாறான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் – கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் !

ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் திலின கமகே கோட்டை பொலிஸாருக்கு வழங்கியதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக அல்லது வேறு ஏதாவது விடயம் தொடர்பில் பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் இல்லை என பொலிஸார் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்ட நீதவான், அவர் தற்போது வசிக்கும் இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரைவை தயாரிக்க மூன்று கோடி செலவு – அலுவலக உபகரணங்களுக்காக 12.5 இலட்சம் ரூபா செலவு !

புதிய அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்காக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.
ஆறு மாதங்களில் முடிக்க வேண்டிய பணிகள் பதினைந்து மாதங்களில் முடிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்க 2020 அக்டோபரில் முதல் குழு கூடி, 38 குழு அமர்வுகள் மற்றும் வெளி கட்சிகளுடன் ஒன்பது பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

இந்த செலவினங்களில், அலுவலக உபகரணங்களுக்காக 12.5 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது , எவ்வித தேவைக்கும் பயன்படுத்தப்படாத மூன்று அலுவலக அறைகளுக்கான வாடகையும் வழங்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு !

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் கிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (11) அதிகாலை தாயையும் குழந்தையையும் காணவில்லை என தேடிய போது, இருவரும் கிணற்றில் இருந்து சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

40 வயதான தாயொருவரும் 7  மாத குழந்தையுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதவான் A.ஜூட்சன்  சடலங்களை பார்வையிட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று சட்ட வைத்திய அதிகாரியால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த தாய் மனநோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி உறுதி மூலம் காணி மோசடி – யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரும் பிரபல பா்சாலை அதிபரும் கைது !

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும், முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.

பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் வழக்கு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது்

அப்போது தமது புலன்விசாரணை தொடர்பான தொடர் அறிக்கையை பொலிஸ் தரப்பு தாக்கல் செய்தது.

மோசடியில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று மன்று கேள்வி எழுப்பியது.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா புலன் விசாரணை தொடர்பில் பொலிஸ் தரப்பிற்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்தார்.

சந்தேக நபர் சார்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டளை ஒன்றை வழங்கிய மேலதிக நீதிவான் வழக்கு நடவடிக்கைகளின் பதிவு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மீதான அவரின் அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக உறுதியை நிறைவேற்றி மோசடிக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி இன்று கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி கையூட்டு குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு பதவியில் இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

“75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவேன்.” – நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி அடுத்த ஆண்டு 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் யாரும் தலையிட விரும்பவில்லை எனவும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்லும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது நாட்டின் சட்ட அமைப்பை நவீனமயப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சகல சட்ட முறைமைகளையும் இந்த வருடமும் அடுத்த வருடமும் நவீனமயப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.