2022

2022

வீட்டுத்தோட்டத்தில் 53 கஞ்சா செடிகள் – சந்தேக நபர் கைது !

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக இரகசிய தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் இன்று (24) தீபாவளி தினத்தன்று தேடுதல் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்தனர்.

இவ்வாறு கைதானவர் அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர் என்பதுடன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து குறித்த 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சான்று பொருட்கள் யாவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடரும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு – முடங்கும் நிலையில் அரச வைத்தியசாலைகள் !

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதய நோய்கான அஸ்பிரின் மருந்தை, வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பென்டேஜ், பஞ்சு உள்ளிட்ட பல மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்  கடுமையான மயக்க மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, தனியார் மருந்தகங்களில் இருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

பகிடிவதை என்பது ஒரு மனநோய் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய மாணவர்கள் மீதான அடக்குமுறை துன்புறுத்தலுக்கு எதிராக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மனக் குழப்பத்தின் காரணமாக அறிக்கைகளை வெளியிட்டமை சாதகமான நிலைமை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பகிடிவதை என்பது ஒருவித மனநோய் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகைய நபர்கள் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் போது இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவ்வாறான வேட்பாளர்கள் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்கினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கஞ்சா வளர்ப்பு இலங்கையின் கலாச்சாரத்திற்கு எதிரானது!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையில் கஞ்சா செடி வளர்ப்பை சட்டபூர்வமாக்குவதன் மூலமாக அதிகளவு லாபமிட்ட முடியும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

அதே போல மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டத்தை உருவாக்கவுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கஞ்சா ஆயுர்வேத சட்டத்தின் கீழ் வருவதால், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நிதி நலன்களின் அடிப்படையில் மாத்திரம் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது அந்நியச் செலாவணியை கொண்டு வரும் என்றாலும், இலங்கையின் கலாசாரத்திற்கு எதிரானது என்பதால், இந்த பிரேரணைக்கு உடன்பட முடியாது என தெரிவித்துள்ளார்.

“போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.” – எம்.ஏ.சுமந்திரன்

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் பாவனை தற்போது தலைவிரித்தாடுகின்றது. இதன் காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். 140 பேர் வரையிலானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த காலத்தில் வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் நாம் ஒரு வேலை திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.

கொரோனாப் பெருந்தொற்று காரணமாக அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனாலும் தற்போது போதைப்பொருள் பாவனை என்பது தலைக்கு மேலே சென்று விட்டது. இதன் காரணமாக மீண்டும் அந்த வேலை திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் மூன்று விதமாக மேற்கொள்ளவுள்ளோம்.

முதலாவது – இளையவர்களுக்கு புத்திமதி வழங்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வினை பாடசாலை மட்டத்தில் நடாத்தல், இரண்டாவது – போதைப்பொருள் பாவனையில் சிக்கி உள்ளவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது தொடர்பான விடயங்களை மேற்கொள்ளல், மூன்றாவது – போதைப்பொருள் பாவனையை தடுக்கவேண்டும். இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிறது. அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று !

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில உயிரிழந்தவர்களுக்காக சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்திற்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள்.

1987 ஒக்டோபர் 24ம் திகதி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டிடங்கள் மேல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் 08 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு கைதிகள், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்றும் மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தமையினால் மூன்று கைதிகளின் விடுதலை காலதாமதமானது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையொப்பமிட்டார்.

பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது.!

பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்பது இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பசில் ராஜபக்சவின் வார்த்தைகளுக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் இதன் மூலம் அவருக்கு அதிகாரம் இல்லாதமை புலப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் இன்று மக்கள் வாழ முடியாத மிக மோசமான நிலைமை உருவாகி உள்ளதாகவும், பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக அடமானம் வைப்பதற்கு எதுவுமில்லாமல் மக்கள் தவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டிய அவர், பாடசாலை மாணவர்களில் சுமார் முப்பது வீதமானவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடர் – அயர்லாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இலங்கை!

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் மஹீஷ் திக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 129 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் குசல் மென்டிஸ் 68 ஓட்டங்களையும், சரித் 31 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்சன டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனார்.

அதனடிப்படையில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.