2022

2022

22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தது ஏன்..? – பொன்சேகா விளக்கம்!

22 ஆவது திருத்தம் ஒவ்வொரு நபரின் விருப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் வினவியபோதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிப்பதை தடுக்கும் சரத்துக்கு தான் மிகவும் விருப்பத்துடன் வாக்களித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.தெள்ளிப்பளையில் போதைப்பொருளுடன் பாடசாலை வந்த மாணவன் – பிளேட்டால் கையை அறுத்து வைத்தியசாலையில் அனுமதி!

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவன் போதை பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டு இருந்தனர்.

அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்த போது , குறித்த மாணவன் தனது கையினை வெட்டி காயப்படுத்தி உள்ளான்.

காயத்திற்கு உள்ளான மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மாணவனுக்கு எங்கிருந்து பாக்கு கிடைத்தது? பாடசாலைக்கு அருகில் யாரேனும் விற்பனை செய்கின்றார்களா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நட்சத்திர ஹோட்டல்களின் உணவுகளை தவிருங்கள் – அரசாங்கம் அறிவிப்பு !

கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடுவது என்பது பல நிறுவனங்களில் நீண்ட காலமாக நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆகவே அரச நிறுவனங்களின் செலவுகளை இயன்றவரை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரி – மடக்கிப்பிடித்த மக்கள்!

தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் சங்கிலியை அறுத்த, இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

மடக்கி பிடிக்கப்பட்ட நபரை இராணுவத்தினர் அழைத்து செல்ல முற்பட்டமையால் அங்கு பதட்டமான சூழல் உருவாகிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமிக்கு பின்னல் மோட்டார் சைக்கிளில் வந்த நபர், சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனால் சிறுமி நிலைமை தடுமாறி கீழே விழுந்து காயங்களுக்கு உள்ளானார்.அதனை அவதானித்த ஊரவர்கள் ஒன்று திரண்டு வழிப்பறி கொள்ளை சந்தேக நபரை துரத்தி சென்று மடக்கி பிடித்ததுடன், சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மடக்கி பிடிக்கப்பட்டவரிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, குறித்த நபர் காங்கேசன்துறை கொல்லன்கலட்டி பகுதியை சேர்ந்தவர் எனவும் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்ததுடன், சிறுமியின் சங்கிலியும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு ஊரவர்கள் அறிவித்த நிலையில், பொலிஸாருக்கு முன்னதாக இராணுவ தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, குறித்த நபரை மீட்டு தம்முடன் அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த பலாலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு !

இந்திய அமைதிப்படையினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேரை சுட்டுப் படுகொலை செய்தனர்.

அந்த கொடூர சம்பவத்தின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள்,நிர்வாக உத்தியோகஸ்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றிகள் – அமைச்சர் டக்ளஸ் அறிக்கை!

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக மாற்றுவதற்காக தாம் வெளிப்படையாக செயற்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாடுகள் ஏப்பம் விட்டால் வரி – நியூசிலாந்தில் பெரும் சர்ச்சை !

காலநிலை மாற்றம் உலகளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் படி நியூஸிலாந்து எடுக்கப்பட்டுள்ளது நடவடிக்கை பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஓசியானிய நாடுகளில் ஒன்றான நியூஸிலாந்தில் சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் அங்கு கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. அங்கு சுமார் 1 கோடி மாடுகளும் இரண்டரை கோடி ஆடுகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் மூலாதாரமாக இந்த கால்நடை வளர்ப்பு இருக்கிறது.

ஆனால், இந்த கால்நடைகளில் இருந்து அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறி சுற்றுசூழலை பாதிப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாடுகள் ஏப்பம் விட்டாலோ (Burp) அல்லது வாயு வெளியேற்றினாலோ (Fart) அதற்கு வரி விதிக்க நியூஸிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

அதேநேரம் இந்த வரிவிதிப்புக்கு அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டில் இருக்கும் விவசாயிகள் இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் அளவை 2030 வாக்கில் 10 சதவீதமாகவும், 2050 வாக்கில் அதை 47 சதவீதமாகவும் குறைக்க நியூஸிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

“ஆட்சியாளர்கள் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்ற முயற்சி.” – எம்.ஏ.சுமந்திரன்

மறுசீரமைப்பு என்ற பெயரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை முக்கியமான மறுசீரமைப்பாக கருதப்படுகின்றது என்றும் ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திருத்தம் ஊடாக என்ன நடக்கப் போகின்றது என்றும் நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்தவர்களே 18 ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று அவர்கள் 19ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்ததுடன், பின்னர் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்துவிட்டு இப்போது 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கவும் தயாராகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் ஓரிடத்தில் அல்லாது அங்கும் இங்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது என்ன விதமான நாடாளுமன்றம் என கேள்வியெழுப்பிய அவர், மக்கள் மாற்றமொன்றையே கோருகின்றனர் என்றும் ஆனால் இந்த சபையில் இருக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இதுவொரு மோசடியாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் எங்களை தவறாக வழி நடத்தியுள்ளது என்று மக்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு மாற்றங்களுக்கு முதலாவது படியென்று கூறி மக்களை ஏமாற்றுவதன் ஊடாக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் எனவே, இந்த முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அரசியல்வாதிகள் இழைக்கும் தவறுகளுக்கு மக்களும் பொறுப்புக்கூற வேண்டும்.” – மகிந்த தேசப்பிரி

அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்பதற்காக புதிய அரசியல்வாதிகளை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மாறாக புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் இழைக்கும் தவறுகளுக்கு மக்களும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர் பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் அறிந்த காலத்திலிருந்து, நாட்டிலிருக்கும் அரசியல் முறை தவறு. அரசியல்வாதிகள் தவறானவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் தவறிழைக்கிறார்கள் என ஒவ்வொரு தரப்பினரும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள்.

ஆனால், தேர்தலினூடாக மக்களே அந்த அரசியல்வாதிகளை தெரிவுசெய்கிறார்கள். நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடமோ அல்லது நிர்வாகமுறையிலோ ஜனநாயக முறை இல்லை அல்லது நாட்டின் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவில்லை என்றால் அதற்கு மக்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு நுழைதல், தாக்குதல் மேற்கொள்ளுதல், வாக்கு மோசடிகள் இடம்பெற்ற யுகமொன்றும் எமது நாட்டில் இருந்தது. அவ்வாறான காலப்பகுதியிருந்தே நாங்கள் வந்தோம்.

வாக்களிக்கும் உரிமையின் பெறுமதி மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயரிடுவதன் பெறுமதி போன்றவற்றை மக்கள் அறிந்திருக்காததால், இதுதொடர்பில் மக்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களின் நிலப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலைப்பாடும் இருந்தது.

 

இருந்தபோதும், நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்றால் புதிய அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின்னரே புரிந்துகொண்டோம். அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்றால் அதற்கு மாற்றீடாக புதிய மக்கள் உருவாக வேண்டும்.

இது எனது கருத்து அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்னர் பேர்டல் பிரிஸ் என்ற அறிஞரே இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.

எனவே, நாம் புதிய நிலைப்பாடுகளை கொண்ட புதிய மக்களை உருவாக்க வேண்டும். அவ்வாறான புதிய மக்கள் பாடசாலைகளிலும், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிலுமே இருக்கிறார்கள். எனவே, இந்த தரப்பினரிடம் புதிய சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் மூத்த இலக்கியப் படைப்பாளி தெளிவத்தை ஜோசப் காலமானார்.

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 88.

இலங்கையின் மூத்த இலக்கியப் படைப்பாளியும் தமிழ் இலக்கிய ஆய்வாளருமான சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934 பிப்ரவரி 16ல் பிறந்தார்.

கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்த இவர், பின்னர் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

தெளிவத்தை என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தனது பெயருடன் ‘தெளிவத்தை’ என்பதையும் இணைத்துக்கொண்டார்.

காலங்கள் சாவதில்லை’ என்ற நாவலும் ‘நாமிருக்கும் நாடே’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இவரது முக்கியப் படைப்புகளாகும். இலங்கை மலையகம் குறித்து ‘மலையக சிறுகதை வரலாறு’ என்ற நூலை எழுதியுள்ளார்.

‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கை சாகித்ய விருதைப் பெற்றுள்ளார்.  இவரது ‘குடைநிழல்’ புதினம் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது. மேலும், 2013- க்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக தெளிவத்தை ஜோசப் கொழும்பு வத்தளை இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.