2022

2022

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் – 82ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் !

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி பகுதியில் உள்ள பாலாவி முகாம் பகுதியில் போராட்டம் இடம்பெற்றது.

இதன் போது தமது சொந்த நிலங்களை விட்டு பல வருடங்களாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தம்மை தமது சொந்த நிலங்களில் குடியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த 100 நாட்ள் செயல் முனைவின் 82ஆம் நாள் போராட்டத்தில் பாலாவி முகாமில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

“இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாக வாழ முடியும்.” – சரத்வீரசேகர

“இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.”என முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று, அரசியலமைப்பின் 22ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.

எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம். அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டம் எமக்கு இந்தியாவினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நிறுத்திவைத்து, பாதுகாப்பாக அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துவந்து, அவர்களிடம் இராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொண்டே 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றினர்.

ஆகவே இதன் சுயாதீனம், புனிதத்தன்மை குறித்து எம்மத்தியில் கேள்வியே எழுகின்றது. ஐக்கியத்திற்கும், ஒற்றையாட்சிக்கும் வித்தியாசம் தெரியாத பலர் இன்று அது குறித்து கதைத்துக்கொண்டுள்ளனர்.

பெரிய நாடுகளில் கையாள வேண்டிய பொறிமுறைகளை இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு திணிக்க முடியாது. நாம் சமஸ்டி நாடாக இருக்க முடியாது. 13 ஆம் திருத்தம் எமது கழுத்தை நெறிக்கும் கூர்மையான கத்தியைப்போன்றது.

எனவே 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுப்பது நாட்டின் ஐக்கியத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

பலவீனமான மத்திய அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதையே பிரிவினைவாதிகள் விரும்புகின்றனர். அதற்காகவே 13,17,19 ஆம் திருத்தங்களை கொண்டுவந்தனர்.

இதனாலேயே இந்த திருத்தங்களை நான் எதிர்த்தேன். ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். புதிய அரசியல் அமைப்பே இதற்கு தீர்வாகும்.

அதற்காகவே கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு மக்கள் ஆணையும் கிடைத்தது. மேலும், 22ஆம் திருத்த சட்டத்துக்கு நான் இணங்க மாட்டேன், இது மக்களின் ஆணைக்குழு முரணானது என்றார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக இரண்டாம் வாசிப்பின் போது 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.

இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூன்றாம் வாசிப்பின்பின் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இது தொடர்பான விவாதங்கள் நேற்றும் இன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.” – வே. இராதாகிருஷ்ணன்

“13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையும்.” என  வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 18ஆம், 19ஆம், 20ஆம் திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறேன். ஆனால் 20இக்கு எதிராகவே வாக்களித்திருந்தேன். இரட்டைக் குடியுரிமைகள் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தடை, சுயாதீன ஆணைக்குழுக்களை மீள ஸ்தாபித்தல் உள்ளிட்ட நல்ல விடயங்கள் 22ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளதால் அதற்கு ஆதரவளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

அத்துடன் 22ஆம் திருத்தத்தில் உள்வாங்குவதற்கு எமது யோசனைகளையும் முன்வைத்திருக்கின்றோம். குறிப்பாக தேர்தல் மறுசீரமைப்பின் போது விகிதாசா முறையும் பின்பற்றப்படவேண்டும். அதேபோன்று நிறைவேறறு ஜனாதிபதி முறையை இருந்தாலும்கூட, 13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையும்.

கடந்த அரசியலமைப்புப் பேரவையில் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை. எனவே 22 இன் ஊடாக ஸ்தாபிக்கப்படும் அரசியலமைப்புப் பேரவையில் மலையகத்தைச் சேர்ந்தவர்களும் உள்வாங்கப்பட வேண்டும். அதேவேளை, மக்கள் பெருளாதார ரீதியில் கஷ்டப்படும் நிலையில் இன்று ஒருஇலட்சம் ரூபா வருமானம் பெறுபவர்கள் 6வீதம் வரி செலுத்தவேண்டி இருக்கின்றது.

ஒருஇலட்சம் ரூபா என்பது இன்று 30ஆயிரம் ரூபா பெறுமதியாகும். அதனால்  30ஆயிரம் ரூபாவுக்கு 6வீதம் வரி செலுத்துவது கஷ்டமான நிலையாகும். அரசாங்கத்தின் பிழையான தீர்மானமே இதற்கு காரணமாகும்.

அத்துடன் இந்த அரசாங்கம் செய்த நல்ல செயல்தான் 8அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகும். அதற்காக நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஏனையவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

“தமிழ் தெரியாத ஊடகவியலாளர்களே கிழக்கின் பிரச்சினைகளை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.” – பிள்ளையான் கவலை !

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000 ஏக்கர் வரையிலான அரச காணிகள் அதிகாரிகளினால் மோசடியான வகையில் விற்கப்பட்டுள்ளது, இது தொடர்பான விடயங்கள் தமிழ் ஊடகங்களில் வெளிவராமைக்கு காரணம், அங்குள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் 10 பேர்சர்ஸ் காணிகள் வழங்கப்பட்டு, அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டுள்ளமையாகும் என  இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட 5 திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக 7000 அல்லது 9000 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. அந்தக் காணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 16 ஆம் திகதி தென்பகுதி சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பில் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்ளையடித்த விற்றுள்ளனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை ஏன் தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை என்று தேடிப்பார்த்தபோது, அங்குள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக இருப்பவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் 10 பேர்சர்ஸ் காணிகளை வழங்கி அவர்களின் வாயை அடைத்துள்ளார். இதன் காரணத்தினால் கொழும்பில் உள்ள தமிழ் தெரியாத ஊடகவியலாளர்களே மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஏராவூர் பற்று, அதாவது செங்கலடி பிரதேசத்தில்தான் அதிகளவில் காணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணி பதிவில் சிக்கல் வந்தால் அந்தக் காணி தனியாருக்கு சொந்தமானதா? அரச காணியா என்று ஆராயும் போது அதனை தனியார் காணி என்று எழுதுவதற்காக பல கோடி கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர். 2000 ஏக்கர் வரையிலான காணிகள் மோசடியான வகையில் துண்டு துண்டுகளாக விற்கப்பட்டுள்ளன.

இதில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளனர். அந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக நான் கவலையடைகின்றேன். தொழில் முயற்சியாளர்கள், ஏழைகளுக்கு சிறிய அரச காணியை எடுப்பதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஊடகங்கள் கூறினாலும் பாராளுமன்றத்தில் பேசினாலும் தீர்க்கப்படாது உள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையிலும்  இந்த விடயம் கோடிட்டு காட்டப்படுகின்றது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தி மோசடியான காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தீபாவளி முற்பணம் 15000 வழங்கவில்லை – 150இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் !

தீபாவளி முற்பணம் 15000 ரூபா தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அத்தொகையை வழங்காமல் 5000 ரூபா அல்லது பத்தாயிரம் ரூபா என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக இன்று அறிவித்ததை அடுத்து இத்தோட்டத்தை சேர்ந்த 150இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதோடு  தொழிலாளர்கள் பணிகளையும் புறக்கணித்து வீடு  திரும்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தாம் முறையாக வேலை செய்தோம் , மேலும்  எமக்கு வழங்கப்படும் முற்பணம் மாத சம்பளத்தில் அறவிடப்படும்.  பெருந்தோட்ட கம்பனிகள்  15 ஆயிரம் ரூபா தருவதாக கூறியிருந்த போதிலும் எமது  தோட்ட நிர்வாகம் அதனை வழங்க முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என  தெரிவித்தனர்.

விலைவாசி அதிகரிப்பு பொருளாதார பிரச்சினைகள் இருக்கும் போது எவ்வாறு தீபாவளியை கொண்டாட முடியும். எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக தீபாவளி முற்பணத்தை முறையாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தாம் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போம் என தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எச்சரித்துள்ளனர்.

“அண்டங் காகம் பாராளுமன்றத்துக்கு வர கூடாது என்பதற்காகவே 22ஆவது திருத்தம்.” – சபையில் எஸ்.சிறிதரன் !

“காகம் என அழைக்கப்படும் அண்டங் காகம் பாராளுமன்றத்துக்கு வர கூடாது என்பதற்காக 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) வியாழக்கிழமை இடம்பெற்ற 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இனவாதம், பௌத்தவாதம் இருக்கும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற  முடியாது. அரசியலமைப்பு திருத்தம் பெருந்தோட்ட மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும் எந்த வகையில் சாதகமாக அமையும்? தமிழர்களுக்கு தீர்வு வழங்க கூடாது என்ற கடும் போக்கான இனவாதம் இந்த நாட்டின் அழிவுக்கு மூல காரணம்.

1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இந்த நாட்டுக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இதுவரையான அரசியலமைப்பு திருத்தங்கள் ஊடாக விளங்கி கொள்ள முடிகிறது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தன தந்திரமான முறையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உருவாக்கி தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டார். இவரின் அதிகார ஆசை இன்று இந்த நாட்டுக்கு பெருந் தீயாக தாக்கம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது.அரசியலமைப்பு திருத்தம் செய்வதால் இந்த நாட்டில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு எந்தளவில் அது தீர்வு பெற்றுக் கொடுக்கும் அல்லது சாதகமாக அமையும்.

காகம் என அழைக்கப்படும் அண்டங் காகம் பாராளுமன்றத்துக்கு வர கூடாது என்பதற்காக 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் தடையேற்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல இலட்சினங்கள் 22ஆவது திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

நாட்டு நலனுக்காக ஒன்றும் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படவில்லை. மாறான ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக போலியான விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பை திருத்திக் கொள்கிறார்கள். இறுதியில் அது முழு நாட்டுக்கும் தீயாக மாற்றமடைகிறது.

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உண்மை பிரச்சினை குறித்து அரசாங்கங்களும்,பௌத்த அர தலைவர்களும் கவனம் செலுத்தவில்லை. மலையக மக்களுக்கு 7 பேச்சஸ் காணியை கூட வழங்க கூடாது என்ற இனவாத போக்கில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 1 ஹேக்கர் காணிகளை வழங்குங்கள் விவசாயத்தையும், உழைப்பையும் மாத்திரம் நம்பி வாழும் அவர்கள் அரசாங்கத்திற்கு சிறந்த வருமானத்தை ஈட்டிக் கொடுப்பார்கள்.

அரச தலைவர்கள் மத்தியில் இனவாதம் மற்றும் பௌத்தவாதம் இருக்கும் வரை இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.சிங்கள தலைவர்கள் தமது அடையாளங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.

ஜே.ஆர் ஜயவர்தன விளைத்த இனவாதம் இன்றும் இந்த நாட்டுக்கு சாபமாக தொடர்கிறது. இரண்டாம் குடியரசு யாப்பினை உருவாக்க முன்னின்று செயற்பட்ட ஏ.ஜே.வில்சன் மனமுடைந்து இரண்டாம் யாப்புக்கு எதிராக நூல் வெளியிட்டார். இதனை எந்த சிங்கள தலைவர்களும் இதுவரை மறுக்கவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன மரண படுக்கையில் இருக்கும் போது பத்திரிகையாசிரியர் ஒருவர் எடுத்த நேர்காணலின் போது இந்த நாட்டு மக்களுக்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வு என குறிப்பிட்டுள்ளதை தற்போதைய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

30 வருட கால யுத்தம் ஏன் இடம்பெற்றது என்பதற்கான காரணத்தை இந்த நாடு இன்றும் விளங்கிக் கொள்ளவில்லை. 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மத்தியில் சிறந்த நிலை காணப்பட்டது. அவர் நினைத்திருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் இனவாதம் மற்றும் பௌத்த வாதத்துக்கு முன்னுரிமை வழங்கி தன்னிச்சையாக செயற்பட்டார்.

பொருளாதார நெருக்கடி மிக மோசமாக தீவிரமடைந்துள்ள நிலையிலும் அரசாங்கம் இனவாத செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளவில்லை.தற்போதும் குருந்தூர் மலையில் அடாவடித்தனமாக பௌத்த விகாரைகளை நிர்மாணிக்க கடும்போக்கான முறையில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சிங்களவர்கள் வாழாத நாவற்குழி, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் பௌத்த விகாரைகள் பலவந்தமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இந்த நாட்டின் உண்மை பிரச்சனையை ஆட்சியாள்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்,இனவாதம்,பௌத்த வாதம் இருக்கும் வரை இந்த நாட்டை முன்னேற்ற முடியாது.

அரசியலமைப்பு திருத்தங்கள் இந்த நாட்டை திருத்தாது. புதிய அரசியமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கும், அரசியல் உரிமைக்கும் தீர்வு காண அவதானம் செலுத்துங்கள்.இனவாதமே இந்த நாட்டின் அழிவுக்கு முக்கிய காரணி என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் தீபாவளி தினத்தன்று விடுதலை !

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை “சில மாதங்களுக்கு முன்னர், எதிர்கால ஜனாதிபதி பற்றிய கேள்விகள் நாட்டில் தோன்றிய போது, பலரும் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே நாட்டை வழிநடத்தப் பொருத்தமானவர் என்பதை நாம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

“இலக்கை அடைய முடியவில்லை“ – பதவியேற்ற 45 நாட்களில் பதவி விலகினார் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் !

இங்கிலாந்தின்  பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். தான் ஒரு தவறு செய்து விட்டதாகவும், அரசு விதிகளை மீறி விட்டதாகவும் கூறிய அவர், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக கூறினார். அதன்பின்னர் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இதனால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட டிரஸ், கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்காக மன்னரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

“மக்கள் வறுமையில் வாடும் போதும் ராஜபக்ஷக்கள் இன்றும் திருடுவதை நிறுத்தவில்லை.” – சரத் பொன்சேகா காட்டம்!

நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்ற போதிலும், ராஜபக்ஷகளும், அவர்களின் சகாக்களும் இன்று திருடுவதை நிறுத்தவில்லை.” என  பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களை மீளக் கொண்டுவருவது தொடர்பில் 22 ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் வரவேற்கதக்கது. எனினும், அதற்கான நியமனங்களில் ஜனாதிபதியின் தலையீடு குறைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அமைச்சர்களை பதவி நீக்குதல், ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வகிக்காதிருப்பது தொடர்பான சரத்தை நிறைவேற்ற பொது வாக்கெடுப்பு வேண்டுமென உயர்நீதிமன்றம் அறித்துள்ளது.

இதற்கு முன்னராக திருத்தங்களில் இது ஏற்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு மாறாக பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் திருத்தம் கொண்டுவருவது அரசியலமைப்பில் உள்ள ஒரு ஓட்டையாக கருதுகிறேன்.

திருத்தம் என்பது ஒரு நாடகமே தவிர மோசடி அரசியல்வாதிகளை திருத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை. மக்கள் துன்பத்தில் வாடும் சந்தர்ப்பத்தில் இதனூடாக அதிகாரத்துக்கு வர முயலும் சில செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

துரத்தியடிக்கப்பட்ட சிலர், மீண்டெழுவோம் என நாடளாவிய ரீதியில் கோசமிட்டு திறிகின்றனர். நாட்டையும் மக்களையும் சுரண்டிய குடும்பம் இன்னும் அதிகார பேராசையை கைவிடவில்லை. தமது எதிர்காலம் கருதி மக்கள் இதனை நம்பவேண்டாம்.

அண்மையில் நிலக்கரி கேள்விமனு விவகாரத்தில் மேற்கொள்ளப்படவிருந்த டொலர் மோசடி அமைச்சரவை தலையீட்டில் நிறுத்தப்பட்டது. இதனூடாக கோடிக்கணக்கான மோசடி இடம்பெறவிருந்தது.

தற்போது, எரிபொருள் வரிசை குறைந்ததாக கூறுகின்றனர். ஒதுக்கங்களை குறைத்து கூப்பன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாலும், விலை அதிகரித்ததால் அவற்றை நாடுவோர் எண்ணிக்கை குறைந்தமையாலுமே உண்மையில் வரிசை குறைந்துள்ளது. மக்கள் பசியில் இருந்தாலும், ராஜபகஷக்களும் அவரது கூட்டாளிகள் திருடுவதை நிறுத்துவதாக இல்லை. ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட போராட்டமே அவசியம். கட்சி பேதமின்றி அனைவரும் முன்வரவேண்டும்.

ரணிலை அதிகாரத்துக்கொண்டுவந்த செல்வந்தர்களும் வறுமையில் வாடும் மக்கள் மத்தியிலேயே வசிக்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது. நாட்டின் தனிபநபர் வருமானம் 3,500 டொலர் எனக்கூறுகின்றனர். ஏனைய நாடுகளில் இது 40,000 –  50000 டொலராக காணப்படுகிறது. அவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் வறுமையில் உள்ளமை புலப்படுகிறது.

இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்கள் சாப்பாட்டு பெட்டி வெறுமையாக உள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் கூறினார். அவர் கடந்த காலத்தில் அங்கு சென்று பிச்சையெடுக்கும்போது, சாப்பாட்டு பெட்டிகளை அபகரித்து பார்த்தாரோ எனத் எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு பொறுப்பற்ற கதைகளை கூறுவோரின் வார்த்தைகளுக்கு ஏமாற வேண்டாம் என்றார்.