2022

2022

யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு – 41 வயதுடைய நபர் கைது – தாயாரும் உடந்தை!

13 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு சந்தேகநபர் கைது யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் நவாலி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 41 வயதுடைய நபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதி மக்களால் மானிப்பாய் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு சிறுமியின் தாயாருக்கும் தவறான உறவு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் சிறுமியிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

மேலும், குறித்த நபர் சிறுமியிடமும் தவறாக நடந்து கொள்ளவதற்கு தாயாரும் உடந்தையாக இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பிரதேச மக்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்ட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருந்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம் – அமெரிக்க அரசாங்கம் அறிவிப்பு !

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி செய்வதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை சந்தித்தார்.

இதன்போதே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டிய அவர், தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே சரியான நபர் என்றும் அவருக்கு ஆதரவாக ஒரு சக்தி இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் அமெரிக்க அரசாங்கம் சகலவிதமான ஆதரவையும் வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதியின் முயற்சிகளை வரவேற்பதாகவும் உதவிச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில். இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக பாராட்டுக்களையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 23 வயதான பெண் கைது !

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் குறித்த பெண்ணை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 200 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட போதை பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

தமிழர் பகுதிகளில் கடமைகளை சரியாக செய்யாத பொலிஸார் !

தமிழ் பிரதேசங்களில் பொலிஸார் தமது கடமைகளை செவ்வனே செய்வதில்லை. இலஞ்சம் ஊழலுக்குள் அவர்கள் அகப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விடயங்களில் ஒதுங்கி நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதன் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் அதிகமான இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் இங்கு வாழும் இளைஞர்களை போதைப்பொருளால் அழிக்கும் முயற்சி திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றது.

இதனை நிறுத்தவேண்டிய பொறுப்பு ஆரம்பத்தில் பெற்றோர்களுக்கு இருந்தாலும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டவேண்டிய பொறுப்பு பொலிசாருக்கு உள்ளது. ஆகவே பொலிசார் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

இந்த நிலையில் நிலையில்லாமல் இருக்கும் அரசு தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் சில விடயங்களை பேச்சளவில் பேசினாலும் நடைமுறையில் இல்லாத சூழல் உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழலில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இல்லாமையும் இங்கு பலவீனமான அரசியல் இடம்பெறுவதற்கு காரணமாகும்.

ஆகவே சமூகத்தின்பால் அக்கறை கொண்ட நல்லதொரு பிரதேச சபையினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தால் நடத்தப்படும் ‘புனர்வாழ்வு’ மையங்கள் – அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு !

புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1)ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இராணுவத்தால் நடத்தப்படும் ‘புனர்வாழ்வு’ மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.

இந்த சட்டமூலம் புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை !

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோட்டாபயவுக்கு எதிரான மனுவை இன்று விசாரித்த காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகே, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச சார்பாக சட்டத்தரணி எவரும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதன்படி, கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு மனுதாரரின் சட்டத்தரணிக்கு அறிவித்த உச்ச நீதிமன்றம், மனுவை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிக்க 2019 செப்டெம்பர் 27ஆம் திகதி முன்னிலையாகுமாறு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபாய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.

 

இதனையடுத்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும் எனவே, யாழ்.நீதவானின் தீர்ப்பை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கோட்டபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது முடிவை அறிவித்த போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்ததால் சாட்சியமளிக்க அழைக்க முடியாது என தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியில் இல்லாத நிலையில், தற்போது அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள்.” – சரத் பொன்சேகா விசனம் !

“இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நாட்டை சீரழித்தவர்களில் முன்னணியில் இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. அவரது பெயர் நினைவுக்கு வரும் போதெல்லாம் குமட்டல் வருகிறது.

கராத்தே பயிற்சியில் கறுப்பு பட்டியை பெற்றவர், ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார். அந்த கறுப்புப்பட்டி பெற்றவர் தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்.அத்துடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள். நாடாளுமன்றத்தில் எம்மை காணும் போது புன்னகை செய்வார்கள்.

நாங்களும் கைக்காட்டி விட்டு செல்வோம். எனினும் அருவருப்பு, இவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க வேண்டும். போராட்டம் அதிகரித்து வந்த நேரத்தில் மோசடியான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அச்சத்தில் நாடாளுமன்றத்திற்கும் செல்லவில்லை. வீ.8, பீ.எம்.டப்ளியூ போன்ற வாகனங்களை காண முடியாமல் போனது.

மலர் மாலைகளை அணிந்துகொள்ள எங்கும் செல்லவுமில்லை. எங்கும் பட்டாசும் வெடிக்கப்படவில்லை. பெயர் பலகைகளில் பெயர்களையும் காட்சிப்படுத்தவில்லை. போராட்டம் இவர்களுக்கு செய்தி ஒன்றை வழங்கியதே இதற்கு காரணம். இந்த மோசடியான கலாசாரத்தை மாற்ற வேண்டுமாயின் அந்த செய்தி சென்றே ஆக வேண்டும்.

மோசடியாளர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருக்க வேண்டுமாயின் போராட்டத்தின் சமிக்ஞை நாட்டுக்கு செல்ல வேண்டும்” எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் நாளாந்தம் சுமார் 115,000 லீற்றர் கள்ளு உற்பத்தி !

சட்டவிரோதமான மற்றும் ஆரோக்கியமற்ற முறையில் நாளாந்தம் சுமார் 115,000 லீற்றர் கள்ளு உற்பத்தி செய்யப்படுவதாக நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நாளாந்த கள்ளு நுகர்வு 160,000 லீற்றர்கள் ஆகும். ஆனால் தினசரி கள்ளு உற்பத்தி 45,000 லீற்றராகக் காணப்படுகிறது. இவ்வாறு மேலதிகமாக தயாரிக்க ஆரோக்கியமற்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், மதுபான உற்பத்தியாளர்களே விற்பனை நிலையங்களை நடத்தி அதன் மூலம் அரசாங்கத்திற்கு வரியை இழப்பை ஏற்படுத்துகின்றனர். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கலந்துரையாடலின் போது பணிப்புரை விடுத்துள்ளார்.

காலி முகத்திடலில் சிறுவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய பொலிஸார் – விசாரணை ஆரம்பம்!

கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, ​​பொலிஸார் சிறுவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் மற்றும் குறித்த சிறுவனின் பெற்றோருக்கு எதிராக பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் உதய குமார அமரசேன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அங்கிருந்த உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கோட்டை பொலிஸாரிடம் மேலதிக விளக்கத்தை கோரியுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

“போதைப்பொருள் பாவிக்கும் மகனை திருத்தித்தாருங்கள்“ – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தாய் முறைப்பாடு !

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரை அவருடைய தாயார் தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று காலை ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க. பொ. த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போதை பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை இரவில் தூக்கமின்மை போன்ற பல இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தாய் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்த தாய் தனது மகனை இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் திருத்தி தருமாறு ஒப்படைத்துள்ளார்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞன் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.