2022

2022

பெண்களுக்கென தனியான சிறை அறைகள் வேண்டும் – பாராளுமன்றில் தலதா அத்துக்கோரள

பெண்களுக்கென தனியான சிறை அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரள இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறைகளில் பெண் கைதிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு தனி இடங்களை ஒதுக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

ஐந்து நீதிச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே திருமதி அத்துக்கோரள இவ்வாறு தெரிவித்தார்.
சிறைச்சாலைகளுக்கான மருத்துவ சபைகளை நியமிக்கும் போது சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் தலையீட்டுடன் செயற்பாடுகள் இடம்பெறுவது முக்கியமானது எனவும் திருமதி அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.

“யாரும் ஏற்க மறுத்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு 700 பில்லியன் ரூபாயை இழந்துள்ளது. மேலும் கடந்த இரண்டரை வருடங்களில் 2300 பில்லியன் ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டதால் பணவீக்கம் 70% ஆல் அதிகரித்துள்ளது.

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம். நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதனால் அவர்கள் அறிவித்தபடி ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்தில் மிகையை காண்பித்தது. ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து வரி அறிவிட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்புக்கு அமைய புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது.

“2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொள்வதற்காக,02 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு மட்டும் இந்த வரி அறவீட்டை மட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன

எனினும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக இறுதியில் ஒரு இலட்சத்தை விடவும் கூடுதலான வருமானத்தைப் பெறுபவர்களிடமிருந்து வருமான வரி அறவிட நேர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியின்படி, இவ்வாறான வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் எமது இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்பதை நான் கூற விரும்புகின்றேன். 2026 ஆம் ஆண்டுக்குள் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரையிலான சதவிகிதத்தை வருமானமாக பெறுவதே எமது இலக்காகும். எனவே நாம் இந்த வேலைத் திட்டத்திலிருந்து ஒதுங்கினால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் எமக்கு உதவி கிடைக்காமல் போய்விடலாம்.

சர்வதேச நாயண நிதியத்தின் உத்தரவாதம் கிடைக்காமல் போனால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்குவதாக கூறும் நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால், மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் யுகத்துக்கே நாம் செல்ல நேரிடும்.

இதைவிடவும் மிக கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டு, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும். இவற்றை நாம் விரும்பிச் செய்யவில்லை. விருப்பமில்லாவிட்டாலும் கூட சில விடயங்களை எமக்கு செய்ய நேரிடுகிறது. என்றாலும் அந்த முடிவுகளை நாம் அவ்வப்போது பரிசீலித்து வருகின்றோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அதேநேரம், பெரும்போகத்தில் மிகச் சிறந்த அறுவடையும் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். அப்போது எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் குறைவடையும்.

அதேபோன்று நாம் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் யாவற்றையும் முன்னெடுப்பதன் மூலம் எமக்கு முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.

எனவேதான் இது தொடர்பில் அனைவருக்கும் விளக்களிக்க வேண்டியது எனது கடமையென்பதை நான் உணர்ந்தேன். இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.” என கூறியுள்ளார்.

இலங்கையை வந்தடைந்தார் டொனால்ட் லூ – பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சிவில் சமூக அமைப்புக்களுடன் சந்திப்பு !

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்திறங்கிய டொனால்ட் லுவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றுள்ளார். இதனை அமெரிக்கத் தூதுவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதே நேரம் டொனால்ட் லூ இன்று சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும் வலுவான சிவில் சமூகம் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

“எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை. இலங்கை தேசத்திற்கானது.” – எரிக்சொல்ஹெய்ம்

எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக பல வருட சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமாக நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக உறவை வளர்த்துக்கொண்டேன் ஆனால் பலர் கருதுவதற்கு மாறாக ஏனைய இலங்கை அரசியல்வாதிகள் பலருடன் எனக்கு சிறந்த உறவுஉள்ளது.

நான் மகிந்த ராஜபக்சவை சந்தித்தேன் பரஸ்பரம் இருவரும் ஆரத்தழுவிக்கொண்டோம்.

சம்பந்தன்,சுமந்திரன் போன்ற பல தமிழ்தலைவர்களை எனக்கு தெரியும், ஆகவே எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது என அவர்  தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் பாடநூல்களை திருத்தங்களுடன் 2023 இல் மீள வழங்க நடவடிக்கை – நாடாளுமன்றில் கல்வி அமைச்சர் !

இஸ்லாம் பாடநூல்கள் அனைத்தையும் திருத்தங்களுடன் 2023 இல் மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நேற்று (18) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலலிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்ட, பாடசாலை இஸ்லாம் கல்விக்கான பாடப் புத்தகங்கள் தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு 2021 மற்றும் 2022 இல் விநியோகிக்கப்பட்டன.

ஆனால் இன, மத, குல வாதம் காரணமாக தன்னுடைய மார்க்கத்தைக் கற்பதற்குக் கூட தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு இஸ்லாம் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு மீள பெறப்பட்டுள்ள இப்படி மோசமான நிலை இந்நாட்டில் காணப்பட்டது. நீங்கள் அப்படியான அமைச்சர் அல்ல. இன, மத, குல வாதம் அல்லாத நேர்மையான கல்வி அமைச்சர் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, ´தன்னிடமும் இது தொடர்பாக சமூக அமைப்பொன்று தபாலில் வினவியுள்ளது. தரம் 6, 10, 11 ஆகியவற்றின் இஸ்லாம் பாடநூல் வழங்கப்பட்டு மீள்பரிசீலனைக்காக மீளப்பெறப்பட்டுள்ளது. அதனால் அம்மாணவர்களுக்கு இன்னும் புத்தகம் கிடைக்கப்பெறவில்லை. கடந்த வாரம் தான் எனது அவதானத்திற்கு இத்தகவல் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தின் அவதானத்திற்குக் கொண்டுவந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என்றார்.

ஐ.நா சில நாடுகளின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுகிறது. – இலங்கை நாடாளுமன்றில் அமைச்சர் அலி சப்ரி விசனம் !

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் நடத்தையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கையின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்மைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய அவர்,

மனித உரிமைகள் பேரவையின் இந்த நடவடிக்கை அரசியல் பின்புலத்தை கொண்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை சில நாடுகளின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுகிறது.

எவ்வாறாயினும் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மீறல்கள் தொடர்பாக, உள்ளக பொறிமுறை ஊடான விசாரணையையே அவசியம். மேலும் இலங்கை மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் இருந்த பசில்ராஜபக்ச !

கோட்டாபாய அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமல் மற்றும் கம்மன்பில இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளித்துள்ளார்.

கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த உண்மையான சதிகாரர் பசில் ராஜபக்ஷ என்று அவர் தெரிவித்துள்ளார்.

விமல் மற்றும் கம்மன்பிலவை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை தாம் அமைச்சரவையில் இணையப் போவதில்லை என பசில் ராஜபக்ஷ அப்போது ஜனாதிபதி கோட்டாபயவிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

பசில் ராஜபக்ஷவை அவரது விருப்பப்படி செல்ல வைத்ததாலேயே நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச அரசின் பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலிசங் கடுமையான அழுத்தங்களை வழங்கினார் என முன்னதாக விமல்வீரவங்ச குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமராகிறாரா பசில்ராஜபக்ச..? – பந்துல குணவர்தன வெளியிட்டுள்ள தகவல் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவி வழங்குவதற்கு தயாரா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறான விடயம் அமைச்சரவையில் பேசப்படவில்லை என தெரிவித்தார்.

டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது இலங்கையின் அரசாங்க சேவைகள் !

டிஜிட்டல் அடையாள அட்டைகளை வெளியிடுதல் உள்ளிட்ட அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு அவசியமான தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்கான பணிப்புரையை தேசிய பேரவையின் ஊடாக முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (18) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தல் இன்று நடைபெற்ற உப குழுவின் முதலாவது கூட்டத்தில் அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு, ஆட்களைப் பதிவுசெய்வது தொடர்பான திணைக்களம், இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விரைவுபடுத்துவதற்கு அவசியமான தகவல்களைச் சேகரித்தல், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகவல்களைப் பாதுகாக்கும் ஏஜன்சி விரைவில் அமைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்தி நவீனமயப்படுத்துவதற்குத் தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்குவதற்கான கட்டளைச் சட்டங்களைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது. இது தொடர்பான அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னவுக்கு உபகுழு பரிந்துரைத்தது.

தேசிய சபையின் ஊடாக பாராளுமன்றத்தில் திருத்தங்களை சமர்ப்பித்ததன் பின்னர் தேசிய கொள்கையொன்றை விரைவாக தயாரிக்க முடியும் என உபகுழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கொள்கையொன்றில் இருந்து அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதை துரிதப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகளை விரைவாகவும் அதிக வினைத்திறனுடனும் வழங்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

மேலும், உலகின் தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகள் மற்றும் புதுப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மிகவும் திறமையான சேவையை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் உபகுழு இங்கு வலியுறுத்தியிருந்தது.

இன்றைய கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கனக கேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்டன் பெர்னாந்து, கௌரவ வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச விநியோகஸ்தர்களுக்கு திறந்து விடப்பட்டது இலங்கையின் எரிசக்தி துறை !

பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சர்வதேச விநியோகஸ்தர்கள் நாட்டின் எரிசக்தி துறையை அணுக முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனூடாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஏகபோகம் இல்லாதொழிக்கப்படும் என்றும், விமான எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சட்டத் தடைகள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.