January

January

கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்களுக்காக நாட்டின் கதவுகளை திறந்தது அவுஸ்திரேலியா !

கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டிற்குள் வருகைத் தரும் எதிர்பார்ப்புடன் உள்ள மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் விஸா கட்டணத்திற்கு விசேட சலுகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை தமது நாட்டிற்குள் வருகைத் தருவதை ஊக்குவிப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp மூலம் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம் !

பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் அவதூறு குறுஞ்செய்தியையும் மற்றும் கேலி சித்திரத்தையும் வெளியிட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அனீகா ஆதிக்குக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

சாகும் வரை அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா கமலா ஹாரிஸ் . ? – ஜோ பைடன் பதில் என்ன.. !

அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். இவர் சமீப காலமாக ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் பரவின.

கடந்த மாதம் கமலா ஹாரீஸ் அளித்த பேட்டியில் 2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவாரா? என்று கேட்டதற்கு, நான் அதைப் பற்றி நினைக்கவில்லை. நாங்களும் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நிருபர்கள் அதிபர் தேர்தலில் உங்களுக்கு போட்டியாக கமலா ஹாரீஸ் வருவாரா? என கேட்டனர். அதுபற்றி ஜோபைடன் கூறும்போது, கமலா ஹாரீஸ் தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார் என நினைக்கிறேன்.

அதிபர் தேர்தலில் எனக்கு அவர் போட்டியாக இருப்பார் என நினைக்கிறேன். ஆனால் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

தேவாலயத்திலும் , வைத்தியசாலையிலும் வெடிகுண்டு வைத்த 75 வயது வைத்தியர் – மனைவி மீதான காதல் தான் காரணமாம் !

பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வூப் பெற்ற வைத்தியர், கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் குறித்த தேவாலயத்தின் மீது வெறுப்புடன் இருந்துள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு இதற்கு முன்னர் கைக்குண்டொன்று வைக்கப்பட்ட சம்பவம் குறித்தும், அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கைக்குண்டு வைக்கப்பட்டமை குறித்து, கைதுசெய்யப்பட்டுள்ள ஓய்வூப் பெற்ற வைத்தியர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

1974ம் ஆண்டு தான் பௌத்த பெண்ணொருவரை, பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தனது மனைவி பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதனால், குறித்த தேவாலயத்திலிருந்த பாதிரியார், தனக்கு காலை நேர திருப்பலி ஒப்புக் கொடுத்தலை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமையினால், அது தொடர்பில் தான் மனவேதனையுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனாலேயே, குறித்த தேவாலயத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, குறித்த வைத்தியர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் இதன்போது விசாரணை நடத்தியுள்ளனர்.

தனது மனைவி கவலைக்கிடமாக இருந்த சந்தர்ப்பத்தில், அவரை கொம்பனிதெருவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்க முயற்சித்த போதிலும், தனது மனைவியை அனுமதிக்க வைத்தியசாலை மறுப்பு தெரிவித்துள்ளதாக அவர் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.

இந்த நிலையில், நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த வைத்தியசாலையினால், தனது மனைவிக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டமையினால், வைத்தியசாலைக்கு பிரசாரத்தை வழங்கும் நோக்கில், கைக்குண்டை வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக தான், கைக்குண்டை வைத்த நபருக்கு இடைக்கிடை பணம் வழங்கி வந்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். தனது மனைவியின் மீது கொண்ட காதல் காரணமாக, அவர் உயிரிழந்ததன் பின்னர், அவரின் அஸ்தியின் ஊடாக தயாரிக்கப்பட்ட மோதிரம் ஒன்றையும், குறித்த வைத்தியர் தனது விரலில் அணிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆலய திருவிழாவில் தீமிதித்த இளம்தாய்க்கு நடந்த சோகம் – கொழும்பில் கடவுளின் பெயரால் ஓர் உயிர்பலி !

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி என்றும் அவர் 10 வயது குழந்தையின் தாயார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்ற தீமிப்பில் பங்கேற்ற அந்தப் பெண்ணின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தீக்காயங்களுக்கு சிகிச்சைப் பெறாமல் வீட்டில் இருந்த அந்த பெண் மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொரோனா முகக்கவசங்களுக்கு goodbye சொல்கிறது இங்கிலாந்து !

சுமார் 2 வருடங்களாக கொரோனா உலகை முழுமையாக உலுக்கி வருகின்ற நிலையில் அதனுடைய வீரியம் குறைந்தபாடில்லை. எனினும் வளர்ச்சியடைந்த நாடுகள் முறையாக இதனை ஒரளவு கட்டுப்படுத்தியுள்ளன. முக்கியமாக கொரானா கட்டுப்படுத்தப்பட்டமை தொடர்பில் இங்கிலாந்து அரசு அந்நாட்டு பிரஜைகளுக்கு மகிழ்வான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்துள்ள இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் “இங்கிலாந்தின் பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முதல் நிறைவுக்கு வருமென தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் கொவிட் கடவுச்சீட்டு இரண்டும் கைவிடப்படும்.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசாங்கம் உடனடியாக கைவிடும் என்றும் பிரதமர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசிகள் காரணமாக இங்கிலாந்து ‘பிளான் -ஏ’க்கு திரும்புகிறது மற்றும் மக்கள் பிளான் பி நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றினார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

ஓமிக்ரோன் அலை தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக சந்திப்பில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ‘இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தருணம். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்யும் போது இந்த நாடு என்ன சாதிக்க முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது’ என கூறினார்.

உண்மையிலேயே ஜனாதிபதி கோட்டாபாய நடனமாடினாரா..? – வைரல் வீடியோ தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நடனமாடுவதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து – மக்கள் வறுமையின் பிடியில் துன்பப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் தலைவர் நடனமாடிக்கொண்டிருக்கிறார் என்ற தொனியிலாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,

இந்த வீடியோவின் நடமாடுபவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இல்லை என ஜனாதிபதி செயலக தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை போன்ற தோற்றத்தை கொண்ட ஒருவரே, இந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொண்டு, நடனமாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பொறுப்புடன் செயற்படுங்கள்.” – மைத்திரி தரப்புக்கு நாமல் அறிவுரை !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு கட்சி என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

உள் விவகாரங்கள் ஏதேனும் இருந்தால், அவை அமைச்சரவைக் கூட்டத்திலோ, அரசாங்கக் கட்சிக் கூட்டத்திலோ அல்லது கட்சித் தலைவர்களின் கூட்டத்திலோ மாத்திரமே விவாதிக்கப்பட வேண்டும். அரசியல் தலைமைகள் இதனை கவனத்திற்க் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் தற்போதைய நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​

பொது மக்கள் தனிநபர்களை ஆட்சி செய்வதற்கு வாக்களிக்கவில்லை எனவும், தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரின் கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்படுவதை பிரஜைகள் அறிவார்கள் என்றும் . அரசாங்க அரசியல்வாதிகள் என்ற வகையில் கருத்துக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு எனவும் அவர்  தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாகப் போட்டியிடுவது குறித்த தீர்மானது தமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விருப்பம் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவின் மிகவும் வங்குரோத்து நாடாக இலங்கை !

கடந்த இரண்டு வருட கால ஆட்சியில் இலங்கை வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர்,

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுக் கையிருப்பு வளர்ந்துள்ளது.  அதற்குக் கீழே இலங்கை இருக்கின்றது. இன்று தெற்காசியாவிலேயே மிகவும் வங்குரோத்து நாடாக இலங்கை மாறியுள்ளது.

இந்த வருடமும் இந்த ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளார். நிச்சயமாக. எனவே, இனியும் மக்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்ள முடியாது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கூட வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்துள்ளது.

தெற்காசியாவிலுள்ள அனைத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 79 வீதத்தால் குறைந்துள்ளது. இரண்டு வருடங்களாக நாடு வங்குரோத்தாகி விட்டது. இரண்டு வருட ஆட்சி நாட்டுக்கு சாபமாகிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு பிணை !

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு காவற்துறையினரால்  24.12.21 அன்று  கைது செய்யப்பட்டிருந்தார்.

பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து 24.12.21 அன்று முல்லைத்தீவு காவற்துறையினரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 04.01.2022 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து  04.01.2022 குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்த முல்லைத்தீவு நீதிபதி குறித்த நபரை இன்று 18-01-2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணைகளை 18-01-2022  இன்றைய தினத்துக்கு தவணையிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று குறித்த வழக்கு  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா  முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட  நிலையில் குறித்த ஆசிரியர் ஐந்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் 25000 காசு பிணையிலும்  ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் 9 தொடக்கம் 12 மணிக்குள் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் ஒப்பமிடுமாறும் சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் 05.04.2022 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.