January

January

“சுடலை ஞானத்தில் 13 வது திருத்தத்தை தூசி தட்டி இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.” – டக்ளஸ்தேவானந்தா

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தொடர்பாக இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் இந்த ஆண்டிற்கான ஆரம்ப உரை நாட்டு மக்களுக்கு ஒளி வீசும் நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத்தீவு கொவிட் 19 காரணமாக எதிர்கொள்ளும் சவால்களை யதார்த்தமாக தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார்.

சக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயங்களை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டதும், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேவைகள் தொடரும் என்ற அவரது பெருந்தன்மை மிக்க கூற்றுகளும் அவரது அரசியல் நிலைப்பாட்டை பறைசாற்றி நிற்கிறது.

ஜனாதிபதி தனது உரையில், இனவாதத்தை நிராகரிக்கின்றோம் என்றும் நாட்டில் வாழும் சகல பிரஜைகளும் கௌரவத்துடன் வாழ்வதற்கும், அவர்களது அனைத்து உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் திறந்த மனத்துடன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து சக தமிழ் கட்சி தலைமைகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு அரசியல் தீர்வு குறித்து நம்பிக்கையோடு செயலாற்ற முன்வர வேண்டும். அது மட்டுமன்றி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் நாம் உரிமையோடும் தேசிய நல்லிணக்க ஒழுங்கு முறையிலும் முன்வைத்த விடயங்கள் குறித்தும் தனது உரையில் தெரிவித்துள்ளமை எமக்கு நம்பிக்கையை தருகின்றது.

காணாமல் போனோருக்கு நீதியும் பரிகாரமும் வழங்குவோம் என தெரிவித்துள்ளார். சிறையில் வாடும் கைதிகளை விடுவித்து வருவது குறித்து பேசியுள்ளார். அது மட்டுமன்றி யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது, படையினரின் பயன்பாட்டில் இருந்த 90 வீதமான நிலங்களை விடுவிப்பதற்கு தான் முயற்சி எடுத்தமை குறித்து பேசியுள்ளார்.

இதில் எனது பங்கோடு பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்களை அவர் விடுவித்து தந்திருக்கிறார் என்பதை நான் கூறி வைக்க விரும்புகிறேன். இன்னமும் விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிப்பதாகவும் அவர் தனது உரையில் உறுதியளித்துள்ளார். அனைத்து மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி சர்வதேச சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் குறித்தும்; நியாமான முடிவுகளை எடுப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளை தனது உரையில் யதார்த்தபூர்வமாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை தற்காலிகமாக தவிர்த்து விட்டு, தான் எடுக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கான  நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்டுள்ளார். உரையை முழுமையாக படித்து முடித்தார்களோ, அல்லது செவி மடுத்தார்களோ தெரியாது. அதில் ஒன்றும் இல்லை என்றும், குப்பை என்றும் வழமை போல் கூச்சலிடத்தொடங்கி விட்டார்கள்.

13 வது திருத்த சட்டத்தை துப்புத்தடியால் கூட தொட்டும் பார்க்க மாட்டோம் என்று நிராகரித்து விட்டு,.. இன்று சுடலை ஞானத்தில் அதையே தூசி தட்டி இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்தவர்கள் இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியின் இன்றைய கொள்கை பிரகடனங்களையும் தூசு தட்டி பார்க்கக்கூடும்.

அரசியல் வேறுபாடுகளை ஒரு புறம் வைத்து விட்டு வாருங்கள் முன்னோக்கி செல்வோம் என்றுதான் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.கொள்கையை ஒருபுறம் வைத்து விட்டு வாருங்கள் என்று கேட்டதாக அந்த உரையை திரிபு படுத்தி கூச்சலிடுவோர்களிடம் கேட்கிறேன். முண்டாட்சியில் உங்கள் கொள்கையை விற்று யாரிடம் எதை பெற்றீர்கள்?  மக்களிடம் இருந்து நீங்கள் அபகரித்த ஆணைக்கு என்ன மதிப்பளிதீர்கள்?

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையும் ஞானசூனியங்களாக இருப்பதில் அர்த்தமில்லை;. கண்மூடித்தனமாக சுயலாப அரசியல்  நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்கிறேன.

எள்ளை கொடுத்தால் எண்ணைதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் அரசியல் சுயலாபங்களே தமிழ் மக்கள் மீது அவலங்களையும் அழிவுகளையும் சுமத்தியிருக்கிறது. சும்மா இருக்க சுதந்திரம் வந்து சேராது, சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக்காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதியின் உரையின் அர்த்தங்களை புரிந்து கொண்டு தமிழ் பேசும் மக்களின் வாழ்விலும் சுபீட்சமான ஒளி வீசும் காலத்தை உருவாக்க அனைத்து வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக வேண்டும் என நான் பகிரங்க அழைப்பு விடுக்கிறேன்”என்று தெரிவித்தார்.

“நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்கிறது இலங்கை.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில், வடக்கு கிழக்கு மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தற்காலிகமாகவேனும் தமிழ் கட்சிகள் தங்களது கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியால் நேற்று நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க உரை தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான இரண்டு நாட்கள் ஒத்திவைப்பு விவாதத்தின் முதல்நாள் விவாதம் இன்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதியின் உரையில் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய பார்வை எதுவும் இருக்கவில்லை என்று தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்த போது,

இந்த முழுமையான உரையில் ஓரிடத்தில் நாட்டில் வெளிநாட்டு நாணயம் தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதைத் தவிர பிரிதொரு விடயமும் இல்லை. நீண்டகாலமாக நாட்டில் இருக்கின்ற பிரச்சினையென ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு, அது கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த பல அரசாங்கங்களினாலும் தீர்க்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி அதன் மூலம் அந்த பிரச்சினையை இன்னொருவர் தோளில் சாட்டவே ஜனாதிபதி முயன்றுள்ளார்.

ஆனால் பிரச்சினையை அடையாளம் கண்ட அவர் தீர்வினையோ அல்லது தீர்வினை அடைவதற்கான வழிமுறைகளையோ முன்வைக்கத் தவறிவிட்டார். ஜனாதிபதி தமது உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது இந்தியாவிலிருந்து 500 மில்லியன் டொலர் உதவி கிடைத்திருப்பதாகச் செய்தி வெளியானது.

இந்த உதவியானது இலங்கையின் பிச்சைப் பாத்திரத்தில் விழுந்துள்ள மற்றுமொரு பொதியாகும். நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையை நாடு சந்தித்திருக்கும் போது அதற்கான தீர்வு எதுவும் உள்ளடங்காத உரையாகவே ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை அமைந்திருந்தது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பற்றிப் பேசும் போது, தாம் உரையை ஆரம்பித்த விதத்தை மறந்து, அந்த மக்களை அவமதிக்கும் வகையில் உரையாற்றினார் என அவர் தெரிவித்தார்.

“இலங்கை, இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கம் இல்லை“ – ஜனாதிபதியிடம் முறையிடுங்கள் !

13 ஆம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட வேண்டுமே தவிர, இந்தியாவிடம் முறையிடக் கூடாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து நேற்று இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தன.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

முதலில் இந்த கேள்விக்குப் பதில் வழங்கிய அமைச்சர் ரமேஸ்பத்திரன, 13ம் திருத்தச் சட்டம் இலங்கையில் அமுலாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சிக்கல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை இறைமை உள்ள நாடு என்ற அடிப்படையில், 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் தமிழ் சகோதரர்கள் ஜனாதிபதியிடமே முறையிட்டிருக்க வேண்டும் என்றார். மாறாக இந்தியாவிடம் அதனைக் கொண்டு செல்லக்கூடாது என்றும் கூறினார்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று அசத்திய முல்லைத்தீவின் இந்துகாதேவி !

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று (18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்

அமெரிக்காவில் 5G தொழில்நுட்பம் – விமான நிறுவன அதிகாரிகள் அச்சம் !

அமெரிக்காவில் தொலைபேசி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5 G தொழில்நுட்பத்தால் விமான சேவைகள் பாதிக்கும் என்று விமான நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 5 G தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தின் ஆல்டிமீட்டர் போன்ற கருவிகள் செயல்படுவது பாதிக்கப்படும் என்று அவர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர்.

5 G அலைக்கற்றையின் ஊடுருவலால் கருவிகள் பாதிக்கப்பட்டால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

செயற்கை நிலவை உருவாக்கி சீனா சாதனை !

மின் செலவை குறைப்பதற்காக செயற்கை சூரியனை சீனா அண்மையில் உருவாக்கி உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தது.  இந்த நிலையில் உலகில் முதன் முறையாக  செயற்கை நிலவை சீனா உருவாக்கி சீனா இன்னும் புதிய பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் தெரிவித்த போது,

நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கியுள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசை இல்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு.

புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு  நிலவில் உள்ளது. இதற்கு அங்கு நிலவும் காந்த அலைகள் தான் காரணம். இத்தகைய குறைந்த ஈர்ப்பு விசையை விமான சோதனையில் தற்காலிகமாக உருவாக்க முடியும்.

ஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதனால் சீனா, பிற நாடுகளைப் போல ஈர்ப்பு விசையற்ற விமானங்களில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் ஆய்வுகளை சுலபமாக மேற்கொள்ளலாம். மேலும், 2 அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில், இயற்கை நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல், கற்கள் துாசிகள் நிரப்பப்பட்டுள்ளன .

இதில் மேற்கொள்ளப்படும் சில சோதனைகளில், முடிவுகள் சில வினாடிகளில் தெரிந்து விடும். அதேவேளை ஒரு சிலவற்றின் முடிவுகளை அறிய பல நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

 

“பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயரிடம் வழங்க வேண்டும்.” – ஞானசார தேரர்

நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளை சமூக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராக செயற்படுவதாகவே தென்படுகிறது. பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஓர் சாதாரண விடயம் அல்ல, இந்த நாட்டில் விசாரணை நடத்தப்படும் முறையொன்று உள்ளது.

கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. கர்தினால் பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார். அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது என கலன்கொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

“மக்களை உசுப்பேற்றாது இருங்கள்.” – இணைந்து செயற்பட தமிழ்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு !

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை. அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டது. இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் இலாபத்துக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஜனாதிபதி கோரினார்.  வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து, அந்த பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவிடம் கையளிக்கப்பட்டது தமிழ்கட்சிகளின் ஆவணம் !

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கட்சிகள் இணைந்து இந்த ஆவணத்தை தயாரித்தன. இந்நிலையில் இன்று கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் கோபால் பாக்லேவை சந்தித்த போதே குறித்த ஆவணம் இரா.சம்பந்தனால் கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“ஜனாதிபதியுடன் பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை.” – இரா. சம்பந்தன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரச தலைவராக பதவியேற்று இரு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை.

கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்மாத இறுதி வாரத்தில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரச தலைவர் தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கான பதிலை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்,

“ பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை எமக்கு வரவில்லை. பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை. இந்த விடயத்தை அரச தலைவருடனான சந்திப்பின் நேரில் தெரிவிப்போம்.

நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழி சமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும். அதை விடுத்து இனியும் ஏமாறத் தயாராக இல்லை. அனைத்துக் கருமங்களும் நல்லபடி அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்” என்றார்.